ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

தனிமையை விரட்டும் தளம்!

ஃபீலிங்க்ஸ்

##~##

 ''ஒரு ஊர்ல... ஒரு பாட்டி இருந்தாங்களாம்.... அவங்க நிறைய வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்...''

''பாட்டினா... என்னம்மா?''

இதுதான் வருங்கால தலைமுறையின் நிலைமையோ என வருந்த வைக்கிறது நிகழ்காலத்தின் கொடுமை.

தாத்தா கைபிடித்து கடைத் தெருவுக்குப் போகும் பேரப்பிள்ளைகளையும், பாட்டியிடம் தலைப் பின்னி பூச்சூட்டிக் கொள்ளும் பேத்திகளையும் பார்ப்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. அன்பு, பாசம், தியாகம் என வாழ்வின் இளமைக் காலத்தை, தம் பிள்ளைகளுக்காகவே கழித்தவர்கள், இன்று 'ஒருவேளை சாப்பாடு பரிமாற மருமக வருவாளா? ஆபீஸுக்குப் போன பையன் வீட்டுக்கு வந்தா... பத்து நிமிஷமாவது நம்மகூட பேசுவானா?’ என ஏங்கித் தவிக்கிறார்கள்.

இவர்களுக்கான விடியலாக... சென்னை, மும்பை, கொல்கத்தா, புனே, பெங்களூரு முதலான இடங்களில் செயல்பட்டு வரும், 'டிக்னிடி ஃபவுண்டேஷன்' (Dignity foundation) எனும் அமைப்பு, ஆதரவற்ற ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

''தனிமையை வெறுக்கும் வயதானவர்கள் கோயிலுக்கோ அல்லது பூங்காவுக்கோ செல்வார்கள். ஆனால், தங்களின் தனிமையை மறக்கும் அளவுக்கு.... மலரும் நினைவுகளைப் பேசுவதற்கும், ரசிப்பதற்கும் நண்பர்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட இடம்தான் இது. அந்தச் சேவையைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்'' என்று சொல்லும் அருணா, 'டிக்னிட்டி ஃபவுண்டேஷன்' சென்னை பிரிவுக்கு தலைமை வகிக்கிறார்.

தனிமையை விரட்டும் தளம்!

''மனைவி இறந்து பத்து வருஷமாகிறது. கணவன் இறந்து ஆறு வருஷமாகிறது. முதுமை, பிள்ளைகளின் கொடுமை... என வாழ்வின் மிச்ச நாட்களை வியாதியோடு கழிப்பவர்கள், கேட்க யாருமில்லாமல் தனிமையில் வாடுபவர்கள் என்று தேடிச் சென்று, அவர்களுடன் நேரம் செலவழிப்பது, மருத்துவ உதவிகள் செய்வது, சட்ட உதவிகள் செய்வது என தேவையான எல்லாமும் செய்கிறோம். எங்கள் அமைப்பில் சேர்பவர்களிடம் மாதம் 100 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1,200 ரூபாய் வசூல் செய்கிறோம். இந்தத் தொகையை, அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்கு உதவும் வகையில், சமயம் பார்த்து அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கிறோம்'' என்று தங்களின் பணி பற்றி பெருமையோடு சொல்கிறார் அருணா.

தனிமையை விரட்டும் தளம்!

இந்நிறுவனம், முதியவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும், அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும்.. அவ்வப்போது 'காபி வித் டிக்னிட்டி’ எனும் விழாவையும் நடத்துகிறது. இதைப் பற்றி பேசும் அருணா, ''முதியவர்களுக்கான நடனம், பாட்டு, மாறுவேடப் போட்டி போன்ற தனித்திறன் போட்டிகள் நடத்துகிறோம். எங்கள் மும்பை நிறுவனத்தில் நடந்த ஒரு விழாவில், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்து தனிமையில் இருந்த முதியவர்கள் இருவர்... ஒருவருக்கு ஒருவர் மனம் இணைந்து போனதால், ஒன்றாகச் சேர விரும்பினார்கள். 'இந்த வயதில் போய் இப்படியா’ என்று யாரும் யோசிக்கவில்லை. அவர்கள் இருவருமே உற்ற துணையுடன் வாழ்ந்தால்... எங்களுக்கும் சந்தோஷம்தானே? அதனால், அவர்கள் விருப்பப்படியே சட்டப்படி திருமணம் செய்து வைத்து அந்த நிகழ்வைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இதேபோல சென்னையிலும் மூத்த ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடத்தியிருக்கிறோம்'' என கூடுதல் தகவல்களை தந்தார்.

சென்னையில் இப்படி மணம் முடித்திருக்கும் அந்த முதிய ஜோடியிடம் பேச முற்பட்டபோது... ''எங்களின் அன்பு மற்றும் உறவின் புனிதத்தை எங்களைச் சுற்றியிருக்கும் உறவுகளும் நட்புகளும் புரிந்து கொண்டுவிட்டன. இதை மீடியாக்கள் மூலமாக நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எங்களின் வலியை மறக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை வைத்து வாழ்ந்து காட்டவே விரும்புகிறோம்'' என்று சிம்பிளாக தவிர்த்தனர் அந்தத் தம்பதி!

தனிமையின் வலியை அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும் 'துணை’ எனும் சந்தோஷத்தின் அருமை!  

- பொன்.விமலா