ஆரி வொர்க்... ஆஹா வொர்க்!ஃபேஷன்உஷா ரமேஷ்
##~## |
''ஆரி ஊசியை வைத்து அழகழகான டிசைன்களை பிளவுஸில் செய்துகொள்ளும் ஆர்வம், எல்லாப் பெண்களுக்கும் இருக்கும். ஆனால், ஆரி வொர்க் கற்றுக் கொண்டவர்களால் மட்டும்தான் இதை எளிதாகச் செய்யமுடியும் என்று நினைத்து, பலரும் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. ஆனால், நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஊசியைக் கொண்டே பிளவுஸில் ஆரி வேலைப்பாடுகளை செய்து அசத்தலாம். இதைத்தான் இந்த இதழில் கற்றுத் தரப்போகிறேன். இதற்குத் தேவை... கற்பனை, பொறுமை ப்ளஸ் கூர்ந்து கவனித்து செய்தல் ஆகிய திறன்கள்தான்'' என்று நம்பிக்கை ஊட்டும் உஷா ரமேஷ்,
''எல்லாப் பெண்களுக்குமே பொதுவாக பீக்காக் டிசைன் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இங்கே சம்கி, சீக்வன்ஸ், ஜர்தோஸி, சில்க் நூல் வைத்து எப்படி பீக்காக் டிசைன் செய்வது என்று பார்க்கலாம்'' என்றபடியே செய்முறையில் இறங்கினார்.

தேவையானவை: தங்க மற்றும் பிங்க் நிற சில்க் நூல்கண்டுகள், தங்க நிற சீக்வன்ஸ், தங்க நிற டியூப் மணி, தங்க மற்றும் பிங்க் நிற ஜர்தோஸி, எம்ப்ராய்டரி ஃப்ரேம், சாதா ஊசி, மஞ்சள் நிற கார்பன் ஷீட், டிசைன் வரைவதற்கான டிரேஸ்பேப்பர், வெள்ளை நிற பென்சில் அல்லது சாக்பீஸ், பென்சில், கத்தரிக்கோல், பிங்க் மற்றும் கோல்ட் நிறங்களில் ஆரி ஸ்பிரிங்.
செய்முறை: பிளவுஸ் துணியில், அதன் கழுத்துப் பாகத்தை ஸ்டிட்ச் மார்ஜின் விட்டு குறித்துக் கொள்ளவும்.
படம் 1: பிளவுஸின் மேலே மஞ்சள் நிற கார்பன் ஷீட்டை வைக்கவும் (பொதுவாக லைட் கலர் பிளவுஸ்களுக்கு லைட் கலர் கார்பன் ஷீட்களே பயன்படுத்தவும். டார்க் கலர் ஷீட் பயன்படுத்தினால், அந்த நிறம் லைட் கலர் பிளவுஸில் ஒட்டிக்கொள்ளும்). அதற்கு மேல் படத்தில் காட்டியுள்ளபடி டிரேஸ் பேப்பரை வைக்கவும். எங்கே டிசைன் வரைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ... அந்த இடத்தில் பென்சிலைக் கொண்டு டிசைனை டிரேஸ் செய்துகொள்ளவும். டிரேஸ் விழுந்த இடத்தில், தேவைப்பட்டால் சாக் கொண்டு லைட்டாக வரைந்து கொள்ளவும்.

படம் 2: டிசைன் வரைய வேண்டிய பாகத்தை, எம்ப்ராய்டரி ஃப்ரேமில் பொருத்திக் கொள்ளவும். டிரேஸ் எடுத்த அவுட் லைன் டிசைன் மீது தங்க நிற நூலைக் கொண்டு இணையாக இரண்டு வரிசைகளில் 'ஆரி செயின்' போடவும்.

படம் 3: இப்போது அந்த இடைவெளியில் தங்க நிற நூலைக் கொண்டு டியூப் மணியை கோத்து தைத்துக் கொள்ளவும்.
படம் 4: டிசைன்களின் இடைவெளிகளில் பிங்க் நிற நூலைக் கொண்டு, 'ஆரி செயின்'களை, மயிலின் டிசைன் முழுவதிலும் தைக்கவும்.
படம் 5: கழுத்துப் பகுதி தவிர, மற்ற அவுட்லைன் ஓரங்களில் கோல்ட் நிற சீக்குவன்ஸ் ஒன்று, கோல்ட் நிற டியூப் மணி ஒன்று என அடுத்தடுத்து வைத்து கோக்கவும்.
படம் 6: பிங்க் நிற ஜர்தோஸியை, மயில் தோகை டிசைனின் அளவுக்கு ஏற்றாற்போல் கத்தரித்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளபடி ஊசியில் பிங்க் நிற ஜர்தோஸியை கோக்கவும்.
படம் 7: ஊசி மூலமாக கோத்திருக்கும் பிங்க் ஜர்தோஸியை, ஜாக்கெட்டிலிருக்கும் மயில் தோகை டிசைனில் வரிசையாக தைக்கவும். அதன் மீது கோல்ட் நிற ஜர்தோஸியை குறுக்குவாக்கில் தைத்துக் கொள்ளவும்.
இதேபோல பிளவுஸின் பின்கழுத்து, நடுபாகம் இவற்றில் ஆரி வொர்க் செய்வதற்கு மேற்கண்ட முறையையே பின்பற்றினால் போதும். ஒவ்வொரு டிசைனாக முடித்தால்... அழகான ஆரி வேலைப் பாட்டில் டிசைனர் பிளவுஸ் ரெடி! இதே டிசைனை புடவை முந்தானை, லெஹங்கா, குர்தீஸ் என எல்லாவற்றிலும் போடலாம். பிறகு பாருங்கள்... ஊர் கண்ணெல்லாம் உங்கள் மீதுதான் இருக்கும்!
- வே. கிருஷ்ணவேணி
படங்கள்: எம்.உசேன்
மாடல்: ஸ்ருதி