கௌசல்யாவின் பணிவான கவனத்துக்கு!ரிமோட் ரீட்டா
##~## |
'சேனல் ஏரியாவுல ஒரு புதுமுகம் வந்திருக்கே!’
- வாசகிகள் பலரும் சுட்டிக்காட்ட, விஜய் டி.வி. 'தெய்வம் தந்த வீடு’ சீரியலில் 'சீதா’ கேரக்டரில் வரும் ஷரண்யா முன்ன ஆஜரானேன்.
''வாவ் ரீட்டா... நீ எப்ப வருவேனுதான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்!''னு அன்பா வரவேற்றவங்க, நதிமூலத்திலிருந்து ஆரம்பிச்சாங்க...
''எண்ட ஊரு கேரளா. டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். பத்தாவது படிக்கும்போதே மலையாள சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ப்ளஸ் டூ படிக்கறப்ப பயங்கர தலைவலி. டாக்டர்கிட்ட போனா 'பிரெய்ன் டியூமர்’னு சொல்லிட்டார். அட, என்ன அப்படிப் பார்க்கிற..? இன்னும் கேளு. தொடர்ந்து ஒரு வருஷமா சிகிச்சை எடுத்த நிலையில, ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லோரும் பயந்தாலும், அது மட்டும்தான் தீர்வுனு தயாராகிட்டாங்க.

'ஆபரேஷனுக்கு பிறகு பேச வராமலோ, நினைவு திரும்பாமலோ, ஒரு பக்கம் செயலிழக்கவோ, இல்லை... கோமா நிலைக்கோ கூட போக வாய்ப்பிருக்கு'னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. குடும்பம், உறவுகள், மீடியா நண்பர்கள்னு எல்லோரும் எனக்காக பண்ணின பிரார்த்தனையால டாக்டர்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு நாலே மாசத்துல எழுந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன். மறுபடியும் நடிக்கலாம்னு முடிவெடுத்த வேளையில்தான் இந்த சீரியல் வாய்ப்பு''னு விடாம பேசின ஷரண்யாவுக்கு, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தது, நம்ம எவர்கிரீன் அம்பிகா மேடமாம்!
''அம்பிகா மேடமும் நானும் மலையாள சீரியல்ல அம்மா, பொண்ணா நடிச்சுருக்கோம். அந்த நட்புக்காக விஜய் டி.வி-யில் பேசி இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தாங்க. அதோட இல்லாம தொடர்ந்து சீரியல் பார்த்து, எனக்கு நிறைய டிப்ஸும் தர்றாங்க''னு நன்றிக்கடன் செலுத்தினாங்க ஷரண்யா!
நல்லாயிருங்க சேச்சி!
சன் டி.வி, 'தென்றல்' சீரியல் புஜ்ஜிமாவோட... அதாங்க நம்ம தேவிகிருபாவோட தம்பி கோகுல், உருகி உருகி லவ் பண்றார்னு கேள்விப்பட்டேன். 'என்ன விஷயம்?'னு அவங்க வீட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தா...
''அதையேன் கேக்குற ரீட்டா... ஏழு வருஷமா அவன் பண்ற அலம்பல் தாங்க முடியல. அவன்கிட்டயே கேட்டுக்கோ'' என்று 'எஸ்'ஸானார் புஜ்ஜிமா.
கோகுல் பக்கம் நான் திரும்ப...
''நீங்க, சன் டி.வி. 'தேவதை' சீரியல்ல நான் லவ் பண்றத பத்திதானே கேக்க வந்தீங்க. ஆனா, அவ என்னோட ரியல் லைஃப் லவ் ஸ்டோரியை பத்தவெச்சுட்டு போயிட்டாளே!''னு தலையை சொறிஞ்சவர், ஒருவழியா நிஜ லவ் ஸ்டோரியை ஆரம்பிச்சார்...
''நானும் கௌசல்யாவும் ஏழு வருஷமா லவ் பண்றோம். ப்ரபோஸ் பண்ண மூணாவது நாள்லயே வீட்டுல அறிமுகப்படுத்தியாச்சு. அக்காவோட சப்போர்ட்ல டிராஜிடி ஏதுமில்லாம ஒழுங்கா போயிட்டிருக்கு''னு சட்டுனு முடிச்சார்.

''அட என்னப்பா... மெகா சீரியல்ல எல்லாம் நடிக்கற நீ... நிஜத்தை மொக்க சீரியல் மாதிரி முடிச்சுட்டியே?''னு கேட்டேன்.
''சரி, ஒரு சீக்ரெட் லவ் ஸ்டோரி சொல்றேன். நானும் அக்காவும் பக்கத்துல இருக்கற சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒரு தடவை போனோம். அங்க அழகா... ஹோம்லி லுக் பொண்ணு ஒருத்தங்க மேனஜர் ஸீட்ல இருந்தாங்க. அதிலிருந்து, அவங்கள பாக்கறதுக்காகவே அக்காகூட போக ஆரம்பிச்சுட்டேன். ஒருநாள், சந்தேகத்தோட அக்கா, என்னை லுக்குவிட... 'ரொம்ப அழகா இருக்கா இல்லே'னு வழிஞ்சேன். உடனே அந்தப் பொண்ணை கடைக்கு வெளியில கூட்டிட்டு வந்த அக்கா, 'நீ யாரையாச்சும் லவ் பண்றியாமா?'னு கேக்க... அவ 'இல்லை’னு சொன்னா. உடனே, 'இனி யாரையும் லவ் பண்ணிடாதே... ஏன்னா, என் தம்பிக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு'னு சொன்னாங்க.
''அட, இந்தக் காலத்து தம்பிக்கு ஏத்த அக்கா''னு நானும் நிஜக்கதையில உற்சாகமாக...
''அட நீ வேற... அதுக்குப் பிறகு, அந்தக் கடையில அந்தப் பொண்ணை நான் பாக்கவே இல்ல. எங்க போனானு தெரியல'' சோகமா முடிச்சார் கோகுல்.
கௌசல்யாவின் பணிவான கவனத்துக்கு!

மீண்டும் 'நல்ல நேரம்’!
ஒரு காலத்துல யானை, புலி, சிங்கம்னு விலங்குகள வெச்சே சினிமாவை கலக்கி எடுத்திட்டிருந்த 'தேவர் புரொடக்ஷன்', ஜீ தமிழ் டி.வி. மூலமா சின்னத்திரையில கால் பதிக்கறாங்க. எம்.ஜி.ஆர், நடிப்புல இந்த நிறுவனம் தயாரிச்ச 'நல்ல நேரம்'கிற சூப்பர் ஹிட் டைட்டிலை, அப்படியே இந்த சீரியலுக்கும் வெச்சுருக்காங்க. அந்த நிறுவனத்தோட ஆஸ்தான டைரக்டர்கள்ல ஒருத்தரான தியாகராஜன்தான், இதுக்கும் டைரக்டர். தென் மாவட்ட கிராமம் ஒண்ணுல இருந்து, வீட்டை விட்டு வெளியேறுற குட்டிப் பையனுக்கும்.. காட்டை விட்டு வெளியில வர்ற குட்டி யானைக்கும் நடக்குற பாசப் போராட்டம்தான் கதை. வெள்ளித்திரை நட்சத்திரங்களும் இந்த சீரியல்ல கலக்க போறாங்களாம். சின்னத்திரையில யானைய வெச்சு ஒரு சீரியல் பண்றது இதுதான் முதல் முறைங்கறதால... வீட்டுல இருக்கற குழந்தைகளையும் வளைச்சுப் போட்டுடுவாங்கனு ஒரே பேச்சா இருக்கு.
வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஆரோக்கியமாக வாழ வழி!
''ஜீ தமிழ் டி.வி-யில் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'பாரம்பரிய மருத்துவம்’ அற்புதமான நிகழ்ச்சி. காய்கறி, பழம், கீரை வகைகளில் உள்ள மருத்துவக் குணங்களைக்கூறி அதை பயன்படுத்துவது பற்றியும் சொல்கிறார்கள். மூலிகை சூப் எப்படி தயாரிப்பது என்பதை செய்து காட்டுவதோடு அது எந்தெந்த நோயை தணிக்கும் என்பது போன்ற விவரங்களை சொல்வது அருமை! ஆரோக்கிய வாழ்வு வாழ, தற்காலத்துக்கு ஏற்ற பயனுள்ள நிகழ்ச்சி'' என்று மனமார பாராட்டுகிறார் ஸ்ரீரங்கத்தில் இருந்து எஸ்.மீனா.
கடுமையான விமர்சனம் தேவையா?
''விஜய் டி.வி-யில் வரும் 'அசல் சுவை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சமைத்த உணவுகளை, நடுவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. அந்த உணவுகளை சுவைத்துப் பார்த்தபோது... ஏதோ விஷத்தைச் சாப்பிட்டு விட்டதுபோல துப்பியது பெருங்கொடுமை. இதில் கடுமையான விமர்சனத்துக்கு ஆட்பட்டவர்களில் 60 வயது பாட்டி ஒருவரும் அடக்கம். குறைகளை நாசூக்காக சுட்டிக்காட்டுவதுதானே மனித நாகரிகம்... அதைக் கடைபிடிக்கலாமே!'' என்று வேண்டுகோள் வைக்கிறார் ஓசூரில் இருந்து பமிலா செல்வமதி.
முதிர்ச்சியற்ற நடுவர்கள்!
''பாலிமர் டி.வி-யில் 'ஜூனியர் சூப்பர் டான்ஸர்’ நிகழ்ச்சி. இதில், ஐஸ்வர்யா எனும் 6 வயது குட்டியின் குழு நடனம் இடம்பெற்றது. நடனம் முடிந்ததும், முகத்தை கோபமாக வைத்துக் கொண்ட நடுவர் புலியூர் சரோஜா, 'இதெல்லாம் ஒரு டான்ஸா... சமோசா கொடுத்து என்னை ஏமாத்துறீங்களா?’ என்றார். அடுத்து தன் பங்குக்கு, 'என்கு இது சுத்தமா பிடிக்காது, ஐஸ்வர்யாக்கு ரொம்ப திமிரு வந்தாச்சு!’ என்று கத்தினார் நடுவர் நமீதா. மூன்றாவதாக, 'டான்ஸ் சரியில்லை' என்று நடுவர் பிரசன்னாவும் சொல்லவே, அந்தக் குட்டிக் குழந்தை ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டது. கடைசியாக... 'ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னோம்... எப்போதும் சிரிச்சுட்டே இருப்பல்ல, அதனால உன்னை அழவெச்சி பார்க்க ஆசைப்பட்டோம்' என்று மூன்று பேருமே சொன்னதைக் கேட்டதும்... கோபம் கோபமாக வந்தது. ஒரு சின்னக் குழந்தையை இத்தனைபேர் மத்தியில் அழவைப்பது... அவர்களின் முதிர்ச்சியின்மையையே காட்டியது. நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டும்'' என்று சாடுகிறார், மாதவரத்தில் இருந்து ஸ்டெல்லா.