ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

“எங்களுக்கு 35 குழந்தைங்க...”

கண்ணீரைப் பெருக்கும் கேத்தரீன் கதைஃபீலிங்ஸ்

##~##

ற்காடு பகுதியில் உள்ள சிறு மருத்துவமனை. 1989-ம் ஆண்டின் ஓர் இரவு வேளையில்... அழுது அரற்றும் 11 மாத ஆண் குழந்தையுடன், அழுதபடியே அங்கே நுழைகிறார் ஒரு தாய்.

''மூளைக்காய்ச்சல் நோய் பலமா தாக்கியிருக்கு... எங்களால காப்பாத்த முடியாது'' என்று கைவிரிக்கிறார் மருத்துவர். அடுத்தடுத்து மருத்துவமனை படிகளில் பரிதாபமாக ஏறி, இறங்கிய அந்தத் தாய், நிறைவாக கோவை, தனியார் மருத்துவமனையில் நிற்கிறார். அங்கே, ''உசுருக்கு இப்போதைக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனா... வளர்ந்தபிறகும்கூட குழந்தை மனநிலையில்தான் இருப்பான்'' என்று சொல்லிவிடுகின்றனர்.

அந்த 11 மாத குழந்தை, இன்று 25 வயது இளைஞனாக வளர்ந்து நிற்கிறான்... மனவளர்ச்சி குன்றியவனாக. அவனுடன், முப்பதுக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும் அங்கே வளர்கிறார்கள். அனைவரையும் பராமரிப்பவர்... கேத்தரீன் இன்பராஜ். அன்று, 11 மாதக் குழந்தையை சுமந்து சென்ற அதே தாய்தான்!

ஆற்காடு பகுதியில், 'பெஸ்ட் நியூ லைஃப் ஷெல்டர்’ என்கிற அமைப்பை நிறுவி, இத்தகைய சிறப்புக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தையும் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்!

''குடியாத்தம்தான் சொந்த ஊரு. அத்தை மகனுக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. அவருக்கு பேங்க் வேலை. திருமணமாகி முதல்ல பொண்ணு பிறந்தா. அப்புறம் மகன் பிறந்தான். பால்பிரசாத்னு பேரு வெச்சோம். எப்பவும் துறுதுறுனு இருப்பான். திடீர்னு ஜுரம் வந்து, 'இனி எதுவும் செய்யமுடியாது!’னு டாக்டர்கள் கை விரிச்சப்ப... நெருப்பை அள்ளி நெஞ்சுல கொட்டுன மாதிரி இருந்துச்சு'' எனும் கேத்தரீன், சோரவில்லை.

 “எங்களுக்கு 35 குழந்தைங்க...”

''ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சேன். நண்பர் ஒருவர் மூலமா, 'மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பராமரிக்க, பாடங்கள் சொல்லித் தர சென்னையில் பயிற்சி தர்றாங்க'னு கேள்விப்பட்டேன். 'அவனோட பிரச்னைக்கு தகுந்தவாறு நாம எப்படி நடந்துக்குறதுனு கத்துக்கிறதுதான் காலத்தின் தீர்ப்பு'னு உணர்ந்து, 'பாலவிகார்'ங்கற அந்த நிறுவனத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். பிறகு, ராணிப்பேட்டையில இருக்கற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் வேலை பார்த்தேன்'' என்றவர், அந்த அனுபவத்துடன் சொந்தமாக, பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்.

''என் மகன் நிலையில் இருக்குற மற்ற குழந்தைகளையும், அவங்களோட பெற்றோர்களையும் மனசுல வெச்சுத்தான் கணவர் ஒத்துழைப்போட ஆரம்பிச்சேன். இங்க மொத்தம் 35 சிறப்புக் குழந்தைங்க இருக்காங்க. இதுக்கு இடையிலயும் ஒரு சந்தோஷம்... தொடர் சிகிச்சை மூலமா இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்ட 6 குழந்தைகள், இப்போ கல்லூரியில் படிக்கிறதுதான். இதன் மூலமா, சிறப்புக் குழந்தைகளோட பெற்றோர்கள் பலருக்கும் இது ஒரு நம்பிக்கை நிலையமா மாறியிருக்கு!'' எனும்போது, பெருமையும் பரவசமும் கேத்தரீனுக்கு.

''குழந்தைகளைப் பராமரிக்க மாதக் கட்டணமா 100 ரூபாய் வாங்குறோம்... இங்க வேலை பார்க்குற ஊழியர்களின் சம்பளத்துக்காக. அரசு நிதி உதவியும் கிடைக்குது. சொந்தக் கட்டடம் தேவைனு அரசாங்கத்துகிட்ட தொடர்ந்து கேட்டுட்டே இருக்கோம்'’ என்று சொன்ன கேத்தரீன்,

''சுமதி கண்ணு... இங்க வா...'' என்று அழைக்க, ஓடி வந்து கேத்தரீனைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறார் சுமதி.

''இவளுக்கு 18 வயசு. ஆனா... மனசளவுல ரெண்டு வயசுதான். நாங்க இந்தப் பள்ளியைத் தொடங்கும்போது இங்க சேர்ந்தவ. அதனால ரொம்ப செல்லம்!'' என்றவரிடம், மகன் பற்றிக் கேட்டோம்.

''என்னையும் என் கணவரையும் 'அம்மா’, 'அப்பா’னுதான் எல்லாருமே கூப்பிடுவாங்க. ஆனா, இதுவரை என் பையன் 'அம்மா’னு கூப்பிட்டதில்லை. கூப்பிடுற சூழ்நிலையும் இனி வரப் போற தில்லை...'' என்று சொல்லி சற்றே தழும்பியவர்,

''ஏன்னா, இப்போ இறுதி கட்டத்தில் இருக்கான். சுய நினைவை கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றான். அவனை நாங்க பிரிய போற நாள் நெருங் கிட்டே இருக்கு...'' என்றபோது, அவருடைய கண்களில் திரண்ட நீரில் துயரத்தின் பேரடர்த்தி.

- ஏ.சசிகுமார், ஜெ.பாரதி

படங்கள்: ச.வெங்கடேசன்

 “எங்களுக்கு 35 குழந்தைங்க...”

முன்னெச்சரிக்கை அவசியம்!

மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், விளைவுகள் பற்றி வாலாஜாபேட்டையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.விக்னேஷ்குமார் பேசும்போது, ''குழந்தைகளை தூக்கும்போதோ அல்லது சாப்பாடு கொடுக்கும்போதோ பராமரிப்பவரின் கை அசுத்தமாக இருந்தால்... அந்தக் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு வரலாம். கொசுக்கள் நிறைந்த பகுதியில் வசிப்பதனாலும் இது தாக்கக்கூடும்.

மூளைக் காய்ச்சல் பலமாகத் தாக்கியிருந்தால், 75 சதவிகித அளவுக்கு சுயநினைவை குழந்தைகள் இழக்கக் கூடும். இதையும் கவனிக்காமல் விட்டால்... குழந்தையின் கை, கால்கள் செயலிழந்துவிடும்.

எனவே, குழந்தை பிறந்த ஆறு மாதத்திலேயே மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி அரசாங்க மருத்துவமனைகளில் போடப்படுகிறது. அவசியம் அதை போடவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.