Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 11

ஆயிரங்காலத்துக்கும் பேசும் அமுதாவின் வழக்கு!இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர் - 11 அவேர்னஸ் நீதிபதி கே.சந்துரு

##~##

'உங்கள் குழந்தைகள், உங்களின் குழந்தைகள் அல்ல அவர்கள், காத்திருக்கும் எதிர்கால  வாழ்வின் மகன், மகள்கள் அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்; ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம்  உங்களின் சிந்தனைகளை அல்ல! ஏனென்றால் அவர்களுக்கென்று தனித்தன்மை கொண்ட சிந்தனைகள் உண்டு அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம், ஆன்மாவை அல்ல ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட சென்றடைய முடியாது. நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு முயற்சி எடுங்கள்; மாறாக அவர்களை உங்களைப் போல மாற்றிவிடாதீர்கள் வாழ்க்கை பின்னோக்கியோ நேற்றைக்கோ செல்வதில்லை நீங்கள், உங்கள் பிள்ளைகள் எனும் வாழும் அம்புகள் அனுப்பப்படும் வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!'

கலீல் கிப்ரான் எழுதிய 'குழந்தைகள்’ பற்றிய இந்தக் கவிதையை மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த வழக்கு, கொஞ்சம் விசித்திர வழக்குதான்!

'சிவில், கிரிமினல் வழக்குகளில் குழந்தைகளை சாட்சியாக விசாரிக்கலாமா?' என்ற கேள்வி, பல வழக்குகளில் எழுப்பப்பட்டு வந்தன. குழந்தையின் திறமையைப் புரிந்து கொண்டு அவர்களது சாட்சியத்தை பதிவு செய்யலாம் என்றுதான் இதுவரை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் இதற்கு பதிலாக கூறிவந்துள்ளது. ஆனால், 'கணவன் - மனைவி இருவர்இடையே நடக்கும் விவாகரத்து வழக்குகளில், குழந்தையையே தனக்கு ஆதரவாக விசாரிக்க வைக்க கணவர் தரப்பு முயல்வது சரியா?' என்கிற கேள்வியை எழுப்பினார் அமுதா.

சட்டத்தால் யுத்தம் செய்! - 11

அவருடைய கணவர் 2005-ம் வருடம் ஈரோடு சப்-கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடுத்தார். மனைவி தன்னை புறக்கணித்துவிட்டார் என்பதுதான் அவர் சொன்ன காரணம். இதில், 10 வயதான மகன் அரவிந்தை, அம்மாவுக்கு எதிர்சாட்சியாக நிறுத்த அவர் முற்பட்டார். சிவில் கோர்ட்டுகளிலுள்ள நடைமுறைப்படி சாட்சியம் அடங்கிய 'அஃபிடவிட்’ தாக்கல் செய்தான் (18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் இப்படி தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை) அச்சிறுவன்.

சாட்சிக் கூண்டில் நின்ற மகனை குறுக்கு விசாரணை செய்ய அமுதா மறுத்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அவனுடைய சாட்சியைப் பதிவு செய்யக்கூடாது என்றும் வாதிட்டார். ஆனால், 'குழந்தையின் சாட்சியத்தைப் பதிவு செய்ய சட்டத்தில் தடையேதும் இல்லை' என்று கூறிய சப்-ஜட்ஜ், 'அச்சிறுவனை விசாரித்த வரையில், வழக்கு விவரங்களை புரிந்து கொண்டவனாக அவன் இருக்கிறான்' என்று கூறி அமுதாவின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டார். அதை எதிர்த்துதான் உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அமுதா.

'குழந்தைகளை சாட்சியாக விசாரிக்க சட்டத்தில் தடையேதுமில்லை. என்றாலும், கணவன் - மனைவி தகராறுகளில் குழந்தைகளை விசாரிப்பது மிகவும் கசப்பான அனுபவமாகும். அப்படி சாட்சியாக விசாரிக்கப்பட்ட குழந்தை, தாயையோ அல்லது தகப்பனையோ நிரந்தரமாக இழக்க நேரிடும், ஆகவே, அப்படிப்பட்ட சாட்சியை ஏற்றுக் கொள்ளக்கூடாது' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 'இந்த வழக்கில் சிறுவன் அரவிந்த், தன் தந்தையுடனேயே வசித்து வந்ததால் அவருடைய செல்வாக்கு அவன் மீது படரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, தற்போதைய நடைமுறைப்படி அஃபிடவிட் தாக்கல் செய்ய அவன் தகுதியற்றவன்' என்று உயர் நீதிமன்றம் கூறியது. 'இத்தகைய வாக்குமூலத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டம் கூறுகிறது. அவன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட்டில், அவன் பிறப்பதற்கு முன்பு நடந்த விஷயங்களையும் அவன் கூறியிருந்ததால், தந்தையின் ஆளுமைக்கு அவன் உட்பட்டு இருப்பதை அது உறுதிபடுத்துகிறது. ஆகவே, சப்-கோர்ட் உத்தரவை ரத்து செய்து அரவிந்தின் சாட்சியத்தை நீக்கி மறுபடியும் வழக்கை விசாரிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தைகள் தங்களுக்குப் பிறந்தாலும், அவர்கள் மீது பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியாது என்கிற கருத்தை வலியுறுத்தவே கலீல் கிப்ரான் கவிதையை தீர்ப்பில் மேற்கோள் காட்டியது உயர் நீதிமன்றம்.

திரும்பவும் விசாரிக்க அனுப்பப்பட்ட வழக்கில் அமுதா தோல்வியடைந்தாலும், குழந்தைகளை சந்திக்க மறுக்கப்பட்டாலும், அதே ஊரில் வீடு எடுத்து தங்கி, குழந்தைகள் வளர்ந்து வருவதை கண்ணால் பார்த்து அடையும் திருப்தியே போதும் என்று தற்போது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்!

- தொடர்வோம்...

படம்: கே.ரமேஷ்

''பையனே எதிர்சாட்சி சொல்லியிருந்தா... மனசுடைஞ்சு போயிருப்பேன்!''

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் கிராமத்தில், கணவரின் வீட்டருகிலேயே வசித்துவரும் அமுதாவைச் சந்தித்தோம்.

''கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த எனக்கும், மணிவண்ணபூபதிக்கும் 92-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. ஆரம்பத்துல வாழ்க்கை நல்லாதான் போச்சு. கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு பிரச்னை ஆரம்பமாச்சு. ஹெல்த் இன்ஸ்பெக்டரான கணவர், ஒரு கட்டத்துல என் மேல வெறுப்பைக் கொட்ட ஆரம்பிச்சார். எல்லாத்தையும் சகிச்சுகிட்டுதான் வாழ்ந்தேன்.

2005-ம் வருஷம் பிரச்னை வலுத்துச்சு. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போனார். அதுலதான் 10 வயசு மகனையும் சாட்சியா சேர்த்துட்டார். ஈரோடு கோர்ட்டும் இதை ஏத்துக்குச்சு. பெத்த புள்ளையையே எனக்கு எதிரா சாட்சி சொல்ல விட்டுட்டாங்களேனு அதிர்ச்சி எனக்கு. ஹைகோர்ட்ல வழக்கு தொடுத்தப்ப, நீதிபதி சந்துரு ஐயாதான் அருமையான தீர்ப்பை கொடுத்தாரு. அதனால, என் பையன் எனக்கு எதிரா சாட்சி சொல்றது தடுக்கப்பட்டுச்சு. இல்லைனா, ரொம்பவே மனசுடைஞ்சு போயிருப்பேன்.

சந்துரு ஐயா இப்படி தீர்ப்பு கொடுத்ததுக்கு அப்பறமும், எங்களுக்கு டைவர்ஸ் கொடுத்து ஈரோடு கோர்ட்டு உத்தரவு போட்டுடுச்சு. இதை எதிர்த்து மேல்முறையீடு செஞ்சுருக்கோம். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். ரெண்டு பேரும் இப்ப அப்பாகிட்ட இருக்காங்க. அவங்கள கண்ணால பார்த்துக் கிடக்கவே... இதே ஊருல வீடு கட்டி தனியா இருக்கேன். எனக்கு என் குழந்தைகள் முக்கியம். அவங்கள நான் பார்த்து பேசவாவது எனக்கு வாய்ப்பு கிடைக்கணும்'' என்று கண்களில் ஏக்கத்தைத் தேக்கியபடி சொன்னார்... அமுதா!

- ச.ஜெ.ரவி