Published:Updated:

பியூட்டி பிளவுஸ்கள் - 9

சொக்க வைக்கும் சோக்கர்!சலீமா கமால் ஃபேஷன்

##~##

சென்னையில் 'சராஸ் ஃபேஷன் டிசைனிங்' என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சலீமா கமால், கோயம்புத்தூர், அவினாசிலிங்கம் கல்லூரியில் படித்தவர். பத்து ஆண்டுகளாக அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலருக்கும் விதம்விதமான பிளவுஸ்கள் தொடங்கி, பலவித ஆடைகளையும் வடிவமைத்து அனுப்பிவருகிறார். டி.வி தொடர்களில் வரும் பிரபலங்கள் பலருக்கும் இவர், பிரத்யேகமாக ஆடைகளை வடிவமைப்பவர்!

இங்கே, இவர் நமக்குக் கற்றுத்தரப் போவது... பெண்கள் மிக எளிமையாக, விரைவாக செய்து முடித்துவிடக் கூடிய 'சோக்கர் பிளவுஸ் டிசைன்'. சோக்கர் என்றால், கழுத்தில் அணியும் கிராண்டான ஸ்டோன் நகை என்று பொருள்.

பியூட்டி பிளவுஸ்கள் - 9

''எப்போதுமே வித்தியாசமாக யோசித்துக் கொண்டிருப்பேன். அப்படி, தைத்து முடித்த சாதாரண பிளவுஸ்களில் கிராண்டாக டிசைன்கள் செய்வது பற்றி யோசித்தபோது கிடைத்ததுதான் இந்த ஐடியா. மிகவும் கிராண்டான டிசைன்களைக் கொண்ட பிளவுஸ்களை அணிய வேண்டும் என பெண்கள் விரும்புவது அதிகரித்து வருகிறது. ஆனால், ஷோரூம்கள், பொட்டீக்குகள் என்று கிடைக்கும் பிளவுஸ்கள், அனைவருக்குமே உடல் அளவுக்கு ஏற்றவையாக அமைவதில்லை. ஆல்ட்ரேஷன் செய்து அணியலாம் என்றாலும், ஃபிரெஷ்ஷாக தைத்து முடித்த பிளவுஸ் மாதிரியான உணர்வை தராது. இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்கவே... இந்த சோக்கர் டிசைன் பிளவுஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா...!'' என்றவர் களத்தில் இறங்கினார்.

தேவையானவை: கற்கள் பதித்த சரம் (செயின் ஸ்டோன்) - 3 மீட்டர் (பேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), மோட்டிஃப் - 15 (உங்கள் தேவைக்கேற்ப, உடல் அளவுக்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்ளலாம்), ஊசி, ரெட் கலர் நூல் (பிளவுஸின் கலருக்கு ஏற்றாற்போல் மேட்சிங் நூல்), ஜரிகை நூல்.

செய்முறை: படம் 1: வேலைப்பாடு செய்யவிருக்கும் பிளவுஸின் பின்புற கழுத்துப் பகுதியில் படத்தில் காட்டியுள்ளது போல் கோடுகளை வரையவும்.

பியூட்டி பிளவுஸ்கள் - 9

படம் 2: பிறகு கற்கள் பதித்த ஒரு ஆரத்தை (செயின் ஸ்டோனை), அந்தக் கோட்டின் அருகே வைத்து ஒவ்வொரு கல் இடையே உள்ள இடைவெளியில் ஊசி நூலால் நன்றாக பதியுமாறு அழுத்தமாக தைக்கவும். இதேபோல மற்றொரு ஆரத்தையும் அடுத்த வரிசையாக தைக்கவும்.

பியூட்டி பிளவுஸ்கள் - 9

படம் 3: பிளவுஸின் பின்புறம் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் கற்கள் பதித்த மோட்டிஃப்பை பொறுத்துவதற்கான இடங்களைக் குறித்துக் கொள்ளவும். மோட்டிஃபை கவனமாக ஊசியில் கோத்து, குறித்த  இடத்தில் சேர்த்து,  மோட்டிஃப் ஓரம் முழுவதும் பிளவுஸில் பதியுமாறு தைக்கவும்.

படம் 4: கழுத்துப் பகுதியில் செயின்  ஸ்டோன் தைக்கப்பட்டிருப்பதன் முடிவில், தாமரை மொட்டுபோல வரைந்து, அந்த கோட்டில் செயின் ஸ்டோனை இரு வரிசையாக வைத்து தைக்கவும். இதன் நடுவில் ஒரு மோட்டிஃப்பை வைத்து தைத்தால்... வைர நெக்லஸ் போன்ற தோற்றம் கிடைக்கும்.

படம் 5: பிளவுஸின் கையில் படத்தில் காட்டியுள்ளது போல, செயின் ஸ்டோனை இருவரிசையாக தைக்கவும். நடுவில் ஒரு மோட்டிஃப் வைத்து தைக்கவும். கையின் பார்டரில் இரு வரிசையாக செயின் ஸ்டோனை வைத்துத் தைக்கவும். நடுவில் மோட்டிஃப் வைத்து தைக்கவும். செயின் ஸ்டோனிலிருந்து இரண்டிரண்டு கற்களாக வெட்டியெடுத்து, இடையிடையே தைக்கவும்.

பின்குறிப்பு: பொதுவாக, தைத்து முடித்த அனைத்து டிசைன்களைச் சுற்றிலும் கோல்டு கலர் ஜரிகை நூலைக் கொண்டு சங்கிலி தையல் போட்டால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

தைத்து முடித்த பிளவுஸ்களில் இதை செய்யும்போது எம்ப்ராய்டரி ஃப்ரேமில் ஃபிக்ஸ் செய்து கொள்வது மிகவும் முக்கியம். இப்படி கவனமாக செய்தால் சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக இருக்கும்.

- தைப்போம்...

வே.கிருஷ்ணவேணி

படங்கள்: எம்.உசேன், மாடல்: ஷப்னம்