கேபிள் கலாட்டாரிமோட் ரீட்டா
##~## |
ரிமோட்டை எடுத்து டி.வி-யை ஆன் பண்ணிணா, 'ஆதித்யா’ சேனல்ல 'ஆம் அ பார்பி கேர்ள்... இன் அ பார்பி வேர்ல்ட்...’ பாட்டுக்கு 'வடிவேலு’ பாலாஜியோட கலக்கலா பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டிருந்த பார்ட்டி புதுசா இருந்துச்சு.
'யாரு இந்த சைனா பொம்மை..?’னு துப்புரவு... ச்சீ... துப்பறியும் வேலையில இறங்குனதுல... பொண்ணு, 'மேட் இன் ஹாங்காங்', தங்கியிருக்கிறது அண்ணா நகர்னு தகவல் கிடைச்சுது.
''ரீட்டா வந்திருக்கேன்!''னு காலிங் பெல்லை அழுத்தினா,
''வருக வருக!''னு இருகரம் கூப்பி வரவேற்பு சொன்னாங்க.
''இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்களே..!''னு நான் ஆச்சர்யமாக,
''வழக்கமா சரியா தமிழ் பேசத் தெரியலனாதான டி.வி-யில காம்பயரிங் வேலை கிடைக்கும். ஆனா, நான் நல்லா தமிழ் பேசினதாலதான் எனக்கு இந்த வாய்ப்பு!''னு கலகலனு சிரிச்சவங்க,
''அப்பாவுக்கு ஹாங்காங், அம்மாவுக்கு டார்ஜிலிங். ரெண்டு பேரும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க. மேல்படிப்புக்காக தமிழ்நாட்டுக்கு வந்தேன். அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல யு.ஜி. முடிச்சேன். காலேஜ்ல நார்த் இண்டியன், சவுத் இண்டியன்னு பொண்ணுங்க கேங்கா பிரிஞ்சு இருப்பாங்க. 'நமக்கு ஹாங்காங்ல இருந்தா ஆளை இறக்க முடியும்?’னு கூட இருக்கற எல்லாரோடவும் வலிய பேச ஆரம்பிச்சேன். என்னை கலாய்க்கறதுக்காக அவங்க எனக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க, இப்போ நான் ஒரு தமிழ் ஆங்கர்! தேங்க்யூ ஃப்ரெண்ட்ஸ்!''னு சிரிச்சவங்ககிட்ட, சேனல் வாய்ப்பு பத்தி கேட்டேன்.
''ச்சும்மா ஒரு ஜாலிக்கு 'ஆதித்யா’ சேனல் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். 'கூப்பிடறோம் வெயிட் பண்ணுங்க...’னு சொல்லி ஒரு வருஷமாயிடுச்சு. அண்ணன், ஹாங்காங்ல இங்கிலீஷ் டீச்சர் வேலைக்கு ரெடி பண்ணவே, சென்னைக்கு டாட்டா சொல்ல ரெடியாகும்போது... 'ஆதித்யா’ல இருந்து 'யூ ஆர் செலக்டட்!’னு சொன்னாங்க. சட்டுனு செட்டிலாகிட்டேன்! 'ஆம் அ பார்பி கேர்ள்’ ஆல்பம் ரீமேக் பார்த்துட்டு என் வீட்டுல, 'பார்பி ஒரு ஸ்லிம் பியூட்டி. நீ ஒரு குண்டு பார்பி!’னு ஒரே கிண்டல். நான் கலகலனு பேசுவேனே தவிர, எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். ஆனா 'வடிவேலு’ பாலாஜி அண்ட் கோ-வும், புரோகிராம் டீமும் நிறைய உதவி பண்ணினாங்க''னு சொன்னவங்ககிட்ட,
''சரி, ஆடிஷன்ல என்ன பண்ணீங்க..?''னு ஆர்வத்தோட கேட்டேன்.
''ஒரு ஜோக் சொல்லச் சொன்னாங்க. 'ஒரு பாட்டி, பசியோட இருந்த பூனைக்கு காதுல பால் ஊத்தினாங்களாம். ஏன்னு சொல்லுங்க...? ஏன்னா அதுதான் வாயில்லாத ஜீவனாச்சே!’னு சொன்னேன்''னு சொல்லி பெருசா சிரிச்சாங்க.
ம்... ஒரு ஹாங்காங் பொண்ணை, இந்தளவுக்கு மொக்கையில சென்னை மெருகேத்தியிருக்கேனு பெருமை பட்டுக்கிட்ட நான், டாட்டா சொல்லிட்டு கிளம்பும்போதுதான், 'அட... பொண்ணு பேரையே கேட்கலையே...’னு ஞாபகம் வந்துச்சு.
''ஆமாம்... பாப்பா பேரு என்ன..?''னு கேட்டேன்.
வந்த பதில்... ''தாப்பா!''
''?!''

'இசையருவி’ சேனல்ல 'காதலுக்காக’, 'துள்ளிசை, 'அக்கரைச் சீமை அழகினிலே’, 'குத்துப்பாட்டு’னு மீண்டும் மீண்டும் வந்து மிரட்டுற சுமயாவை விரட்டிப் புடிச்சு சிறுகுறிப்பு கேட்டேன்.
''ஐ.டி படிச்சேன் ரீட்டா. நைட் ஷிஃப்ட் வேலைக்குப் போக வீட்ல தடா போட்டாங்க. மீடியானா அவ்வளவு ஆர்வம். ஆனா, 'மாப்பிள்ளை கிடைக்காது’னு அதுக்கும் ஒரு மொக்கை காரணம் சொன்னாங்க. அழுது, கெஞ்சினு சில பல புரட்சிகள் எல்லாம் செஞ்சு, மீடியாவுக்கு வந்தேன். 2011-ல மக்கள் டி.வி-யில காலடி எடுத்து வெச்ச நான்... மூன், பொதிகை, மெகா, பெப்பர்ஸ், சங்கரா, ஜெயா, கலைஞர், இசையருவினு சேனல்கள்ல பயணமாயிட்டே இருக்கேன். ஆனாலும் 'ஆர்.ஜே’ ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். பார்க்கலாம்..!''னு காத்திருக்காங்க சுமயா!
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
விஜய் டி.வி. 'கனா காணும் காலங்கள்’ சீரியல் முடிஞ்சுடுச்சேனு வருத்தப்பட்டிருந்த நம்ம டீன் பட்டாம்பூச்சிகளோட டிரீம் பாய் 'ஷிவா’ (கவின்) ஞாபகம் வந்துச்சு. ''ஹாய் கவின்''னு அட்டெண்டன்ஸ் போட்டேன்.
''என்ன ரீட்டா, நீ பொண்ணுங்களுக்குதானே அதிகமா ஹாய் சொல்லுவே... அதிசயமா இருக்கு?!''

''என்ன பண்றது கவின்... பொண்ணுங்க எல்லாருக்கும் நீ சின்னத்திரை மாதவனா இருக்கும்போது... நான் உனக்கு ஹாய் சொல்லித்தானே ஆகணும்!''னு அரை கிலோ ஐஸை தலையில் கொட்ட, பையன் கூல்ல்ல்!
''சொந்த ஊர் திருச்சி. அப்பா, அம்மா, அக்கானு சின்ன குடும்பம். சென்னை, லயோலா காலேஜ்ல கெமிஸ்ட்ரி படிச்சிட்டு இருந்தப்போ... 'ஹலோ எஃ.எம்’ நடத்துன போட்டியில சும்மா கலந்துக்கிட்டேன். அதுல தேர்வான 14 பேர்ல நானும் ஒருத்தன். ஒரு வாரம் பயிற்சி கொடுத்து, ரெண்டு மணி நேரம் லைவ் ஷோ பண்ண வெச்சாங்க. மீடியா ரொம்ப ஜாலியா இருந்துச்சு, இன்னொரு பக்கம் நான் படிச்ச கெமிஸ்ட்ரிக்கும் எனக்கும் எந்த கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆகல. இசையருவி, 'கனா காணும் காலங்கள்’, 'சரவணன் மீனாட்சி’, 'தாயுமானவன்’னு சேனல் ஏரியாவுக்குள்ள வாழ்க்கை ஜாலியா போயிட்டிருக்கு!''
- சீரியல்ல மினிமம் டயலாக் பேசி, வெறும் 'லுக்’ விட்டே பொண்ணுங்ககிட்ட 'டிக்’ வாங்குற ஷிவா, பேச்சுல அவ்வளவு படபட!
''சீரியல்ல ரெண்டு பொண்ணுங்க உங்கள உருகி உருகி துரத்தற மாதிரி நிஜத்துல எதாச்சும்..?''னு கேட்டு முடிக்கறதுக்கு முன்னயே...
''எப்படிதான் என் நம்பர் கிடைக்கும்னு தெரியல... பொண்ணுங்ககிட்ட இருந்து எஸ்.எம்.எஸ் குவிஞ்சுட்டே இருக்கு (இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..!). ஆனா, அவங்க எல்லோரோட ஆதரவும்தான் என் வளர்ச்சிக்கு காரணம். இன்னொரு விஷயம் ரீட்டா... ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல ஷிவாங்கற என்னோட கேரக்டர் பேர்ல நிறைய பேர் பொண்ணுங்ககிட்ட பேசுறதா கேள்விப்பட்டேன். தயவு செஞ்சு அந்த ஃபேக் அக்கவுன்ட்களை யாரும் நம்ப வேணாம்னு சொல்லிடு ப்ளீஸ்...''னு வேண்டுகோளோட பை சொன்னார் கவின்.
ஃபேஸ்புக் பொண்ணுங்களே... உஷார்!
படங்கள்: ப.சரவணகுமார், பா.கார்த்திக்
வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
அபத்தமாக இல்லையா?
''தொலைக்காட்சிகளில் வரும் ஒரு பிரபல சாக்லேட் கம்பெனி விளம்பரம் அது. அதை விரும்பிச் சாப்பிடும் பையனும், பெண்ணும்... பெற்றோர் சம்மதமின்றி ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளுமளவுக்கு தைரியம் கிடைப்பது போலக் காட்டுகிறார்கள். இதெல்லாம் அபத்தமாக இல்லையா? சாக்லேட்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சந்தோஷமாக சாப்பிடும் ஓர் இனிப்பு! அதற்குப் போய் இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள். இதைப் பார்த்தாலே... அந்த சாக்லேட்டை வாங்கித் தரக்கூடாது என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு வேறு யோசனைகளே தோன்றவில்லையா?'' என்று பொங்கி எழுகிறார் சென்னையில் இருந்து பிரேமா சாந்தாராம்.
நல்ல சமுதாயம் அமையும்!
''நிஜ வாழ்க்கையின் சூப்பர் ஸ்டார்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது விஜய் டி.வி-யின் 'மாற்றம் தேவை’ நிகழ்ச்சி. சென்னையில் ஆற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய தினேஷ் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார்களின் பட்டியல் நீள்கிறது நிகழ்ச்சியில். மனிதநேயம், தன்னம்பிக்கை, உற்சாகம் போன்றவற்றை மாணவர்களிடம் வளர்ப்பது.. ஆசிரியரின் கையில்தான் இருக்கிறது. இதைச் சாதித்ததற்காக அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஃப்ராங்ளின் விருது பெற்ற நிகழ்வும் இதில் இடம்பெற்றது. அதைப் பார்த்தபோது, அரசுப்பள்ளி ஆசிரியரான நான் பூரிப்படைந்தேன். நல்ல சமுதாயத்தை அமைக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்ல நிகழ்ச்சி'' என்று பாராட்டுகிறார் புதுப்பெருங்களத்தூரில் இருந்து நா.கிருஷ்ணவேணி.