என் டைரி 246
வாசகிகள் பக்கம்
வளர்த்த கடனுக்கு வட்டியாக வம்பு!
என் கணவருக்கு, மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காள்கள். இவர்தான் கடைசிப் பையன். இவர், சிறு பிள்ளையாக இருந்தபோதே விபத்தில் தாய், தந்தை இறந்துவிட... ரயில்வேயில் பெரிய உத்யோகத்தில் இருந்த மூத்த அண்ணன்தான் தாய்-தகப்பனாக இருந்து... தம்பிகள், தங்கைகளைப் படிக்க வைத்து, திருமணமும் முடித்து வைத்திருக்கிறார்.

##~## |
அந்த வீட்டின் கடைக்குட்டியான என்னவரை மணந்து கொண்டு அங்கே சென்ற நான், வீட்டில் உள்ளவர்களை எல்லாம் கண்டபடி இணைத்து, மூத்தவரின் மனைவி ஆபாசமாகப் பேசியதைக் கேட்டு அதிர்ந்தேவிட்டேன்.
''அவங்க எப்பவுமே அப்படித்தான். எங்க அண்ணன், எங்களுக்கு நல்லது செய்றது அவங்களுக்குத் துளியும் பிடிக்காது. ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கறதா நினைச்சு இப்படி அசிங்கமா பேசுவாங்க. எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கார் அண்ணன். அதனால நாங்களும் சகிச்சிக்க பழகிட்டோம்’' என்றார்கள் வீட்டிலிருந்தவர்கள். வேறு வழியின்றி நானும் 'சகிப்பு' பழகிக்கொண்டேன்!
ஒருவழியாக கணவரின் சகோதர, சகோதரிகள் காலூன்றிவிட, மூத்தவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க... மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்குச் சென்றார். விடுதலை கிடைத்ததுபோல், அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். இதனிடையே கணவரின் தொழில் நஷ்டத்தில் மூழ்கியது. இதை அறிந்த மூத்தவர், தான் இருக்கும் ஊரிலேயே, தனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். எங்கள் குடும்பமும் அங்கே இடம் பெயர்ந்தது.
இப்போது என் கணவர் கடின உழைப்பாலும், புரமோஷனுக்காக எழுதிய பரீட்சைகளாலும் கை நிறைய சம்பாதிக்கிறார். அதேசமயம், எங்களைவிட வசதியாக இருந்தாலும், எங்களின் வளர்ச்சியைப் பொறுக்காத மூத்தவரின் மனைவி, ''என் புருஷனை வளைச்சி போட்டு, உன் பொண்ணுகளுக்கு நகை சேர்க்கறியா?'' என்று வீடு தேடி வந்து அக்கம் பக்கம் கேட்கும் அளவுக்கு அரக்கத்தனமாக ஆபாச மழை பொழிகிறார். இது அடிக்கடி நடக்கவே... கணவரும், நானும் பொங்கியெழ, ''அவ மனநிலை பாதிப்புல இருக்கா. எனக்காகப் பொறுத்துக்கோங்க...'' என்று அழுகிறார் மூத்தவர்.
''அண்ணன் இல்லைனா... இன்னிக்கு நான் இல்ல. அவருக்காகவாச்சும் இதை சகிச்சுத்தான் ஆகணும்'' என்கிறார் கணவர்.
பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் நான், வளர்த்த கடனுக்காக இந்த கொடுமையைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டுமா தோழிகளே?!
- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
