மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி -247

தள்ளிவிட்ட பெற்றோர்... தத்தளிக்கும் பேதை!

வாசகிகள் பக்கம்
என் டைரி - 247

என் டைரி -247

வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணத் தில், கசப்பான முன் அனுபவங் களால் ஆயிரம் குழப்பங்களோடும், பயத்தோடும் நிற்கிறேன் நான்!

'நல்ல வேலைக்குப் போகணும்...’ என்ற ஆசையுடன் நன்றாகப் படித்த லோயர் மிடில் கிளாஸ் குடும்ப பெண் நான். பத்தாம் வகுப்பு விடுமுறையில், எங்கள் வீட்டில் தட்டு, தாம்பூலம் என அமர்க்களப்பட்டது. ''உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க...'' என்று எனக்கு அதைச் செய்தியாக சொன்னார் என் அம்மா. ''படிக்கணும்...'' என்று நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும், ''அவங்க பெரிய பணக்காரங்க... விட்டா இந்த மாதிரி இடம் உனக்குக் கிடைக் காது...'' என்று சமாதானப் படுத்தியவர்கள், அடுத்த ஒரே மாதத்தில் அந்த மாப்பிள்ளைக்கே மணம் முடித்தனர்.

புகுந்த வீட்டுகுச் சென்ற முதல் நாளே, மாப்பிள்ளையின் நடவடிக் கைகள் எனக்கு சற்று வித்தியாச மாகப்பட்டது. ஒரு கட்டத்தில், அவர் மனநிலை சரியில்லாதவர் என்ற உண்மை உறுதியாக தெரிய வந்தபோது, உயிர் உறைந்து விட்டேன். அழுகையுடன் பிறந்த வீட்டுக்கு ஓடியபோது, ''ட்ரீட் மென்ட் எடுத்துட்டுதான் இருக் காராம். எல்லாம் சரியாயிடும்...'' என்று என்னைச் சமாதானப்படுத்த, இடிந்துபோனேன்.

நாலு பெண் பிள்ளைகளை கரையேற்ற வேண்டிய கட்டாயத் தில் இருந்த என் பெற்றோர், 'எந்த செய்முறையும் வேண்டாம்...’ என்றபடி மாப்பிள்ளை வீட்டார் வந்து நின்றதால், தெரிந்தே பண படுகுழியில்  தள்ளிய விஷயம் அப்போதுதான் தெரிந்தது.

##~##

சில காலம் பல்லை கடித்துக் கொண்டு புகுந்த வீட்டில் இருந்தேன். ஆனால், கணவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. வாழ்க்கை நரகமாகவே கழிந்து கொண்டிருந்தது. துணிந்து ஒரு முடிவெடுத்தேன். வீட்டைவிட்டு வெளியேறி, தொலைதூரத்தில் இருக்கும் அந்த மாநகரில், தோழி ஒருத்தியின் உதவியுடன் அரசாங்க பெண்கள் விடுதியில் தங்கினேன். அவளே நர்ஸிங் கோர்ஸ் சேர்த்துவிட்டாள். அதை முடித்த கையோடு, தனியார் மருத்துவ மனையில் வேலையும் கிடைத்து  விட்டது. நாலு வருடங்களாகி விட்டது. இதுவரை என் பிறந்த வீட்டுக்கோ, புகுந்த வீட்டுக்கோ நான் எங்கிருக்கிறேன், என்னவா னேன் என்பது தெரியாது.

இந்நிலையில், எங்கள் மருத்துவ மனைக்கு வரும் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் ஒருவரின் நட்பு கிடைத்தது. மனைவியை இழந்த அவர், என் நிலைமையை அறிந்து என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறார். ''உன் கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுத் தருகிறேன். பிறகு, திருமணம் செய்துகொள்ளலாம்'' என்கிறார்.

ஆபத்தில் கைகொடுத்த தோழியோ, ''பெத்து வளர்த்தவங்களே உன்னை ஏமாத்தியிருக்காங்க. ரெண்டு வருஷப் பழக்கமுள்ள இவரை மட்டும் எந்த தைரியத்துல நீ நம்பற..? கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாச்சும் பிரச்னைனா... என்ன செய்வே..?'' என்று நியாயமான கேள்வியை முன் வைக்கிறாள்.

எனக்கென்று ஒரு வாழ்க்கைக்கு மனம் ஏங்குகிறது. இருந்தாலும், பட்ட பாடுகள் பயத்தைத் தருவதையும் மறுப்பதற்கில்லை. அடுத்த கட்டமாக நான் எத்தகைய முடிவை எடுப்பது என்று நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் தோழிகளே!

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்க்கு...

அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !

என் டைரி 246-ன் சுருக்கம்

''என் கணவரின் சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர் இறந்துவிட, மூத்த அண்ணன்தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். மூத்தவரின் மனைவி... வீட்டில் உள்ள அனைவரையும் ஆபாசமாக பேசி அசிங்கப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். மூத்தவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட, மூத்தவர்தான் வேறு வேலை வாங்கிக் கொடுத்து உதவினார். அதன்பிறகு, தனிக்குடித்தனமாகி, கடின உழைப்பால் முன்னேறி, இன்று நாங்கள் வசதியாக வாழ்கிறோம். இப்போதும் வீடு தேடி வந்து அக்கம்பக்கம் கேட்கும் அளவுக்கு ஆபாசமழை பொழிகிறார் மூத்தவரின் மனைவி. 'அவ மனநிலை பாதிப்புல இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று கெஞ்சுகிறார் மூத்தவர். வளர்த்த கடனுக்காக இந்தக் கொடுமைகளைத் தொடர்ந்து தாங்கித்தான் ஆகவேண்டுமா?''

மூத்தவரின் மனைவி, திருமணமாகி வந்த புதிதில், தன் கணவர் சம்பாதித்தவற்றை எல்லாம் அவருடைய சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து உதவுவது பிடிக்காமல் போயிருக்கலாம். அது அடி மனதில் ஆழமாகப் பதிந்து, எல்லோர் மீதும் வெறுப்பும், ஆத்திரமும், அகங்காரமும் ஏற்பட்டிருக்கலாம். 'இதையெல்லாம் வளர்த்த கடனுக்காக பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?' என்றால், 'ஆம்’ என்றுதான் சொல்வேன். இதன் காரணமாக உனக்கும் கோபம் அதிகமாகி, நீயும் மனநிலை பாதிப்புக்குள்ளாக கூடாதல்லவா... அதற்காகத்தான்! தியானத்தில் ஈடுபட்டால்... இதைவிட பெரும் பெரும் பிரச்னைகளைக்கூட  தாங்கும் பக்குவமும், அமைதியும் தன்னால் வந்து சேரும். அதன் பிறகு, மூத்தவர் மனைவியின் வார்த்தைகளை நீயே 'துச்சம்' என்பாய்!

- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்

பெற்ற தாய் போல் இருக்க வேண்டியவர்களே தராதரமின்றி பேசும்போது, வேதனை பொங்கத்தான் செய்யும். அதற்காக தொடர்ந்து அதைச் சுமக்க வேண்டும் என்பதில்லை. முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல், பக்குவமாக  மூத்தவரிடம் எடுத்துச் சொல். நல்ல மனநல காப்பகத்தில் அவருடைய மனைவியை சேர்க்கச் சொல். அப்படியும் இல்லாதபட்சத்தில், உன் குடும்ப கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்காலிகமாக உறவைத் துண்டித்துக்கொள்!

- சி.பியூலா சார்லஸ், கோவை

எத்தனை முறை துலக்கினாலும் பித்தளையின் குணம் மாறாது. அதுபோல், வாழ்க்கையில் சிலருக்கு எத்தனை முறை நற்புத்தி புகட்டினாலும்... அவர்களின் துர்குணம் மாறுவதில்லை! ஆனால் ஒன்று... அகம்பாவம் என்பது ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. அந்த வலி தரும் வேதனைதான், மாற்றத்தை ஏற்படுத்தும். பொறுத்தார் பூமி ஆள்வார்!

- வசந்தா பரமசிவம், புனலூர்