மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை!

என் டைரி - 312 ரீடர்ஸ்

##~##

 ரண்டு வயது கைக்குழந்தையுடன், 'ச்சே... என்ன வாழ்க்கை இது!' என்று வெறுப்பின் உச்சத்தில் வாழும் இளம்பெண் நான்.

படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்த நான், எல்லோரையும் போல திருமண ஆசை என்னுள் எட்டிப் பார்த்த நேரத்தில், பெற் றோர் பார்த்து முடித்த மாப்பிள்ளையைக் கைப்பிடித்தேன். ஐ. டி. துறையில் வேலை பார்க்கும் என்னவர்... அத்தனை தங்கமானவர்!

'திருமணம் ஆன கையோடு குழந்தையைப் பெற்றுக் கொண்டு, இளமை வாழ்க்கையை அனுபவிக்காமல் அவதிப்படுவது நல்லதல்ல...' என்று கல்லூரி காலத்திலிருந்தே மனதுக்குள் விதை போட்டு வளர்த்திருந்தது... மரமாகி நிற்க, முதலிரவிலேயே... ''இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. உங்களுடனான சந்தோஷ வாழ்க்கையை முழுக்க அனுபவிக்கப் போகிறேன்'' என்று சொன்னேன். அவருக்கோ... குழந்தைகள் என்றால் கொள்ளை இஷ்டம். என்றாலும், எனக்காகத் தள்ளிப்போடுவதற்கு சம்மதித்தார்.

ஓராண்டு உருண்டோடிய நிலையில்... அவருக்குள் குழந்தை ஆசை, மீண்டும் துளிர்விட... என்னை வற்புறுத்தினார். இதையடுத்து, அழகான பெண் குழந்தையும் பிறந்தது... கூடவே பிரச்னைகளும். ஆம், இருவருக்குமிடையே குழந்தையை வைத்து சின்னச் சின்னதாக சண்டைகள். 'குழந்தை எதற்காக அழுகிறது?' என்பதில் ஆரம்பித்து, எடுத்ததற்கெல்லாம் சண்டை. நான்கு சுவர்களுக்குள் நான், என் குழந்தை என்று மட்டும் வாழ்க்கை சுருங்கிப் போனது, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.

‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை!

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்றால்... இருவீட்டு பெற்றோரும் வயதானவர்கள். அதனால், வேறு வழியே இல்லாமல் வேலையை உதறிவிட்டு, குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. ஓராண்டு காலம் பல்லைக் கடித்துக் கொண்டிருந்த நான், 'அப்பாடா பொண்ணுக்கு ஒரு வயசாச்சு... இனி, குழந்தையை தூக்கிட்டு ஃப்ரீயா வெளிய போகலாம்' என்கிற நினைப்பில் குஷியோடு இருந்தேன். ஆனால், அதற்கும் கடிவாளம் போட்டாள் மகள். வெளியில் செல்வதை அதிகம் விரும்பாதவள், சமையல் செய்தால், குளிக்கச் சென்றால் என... நொடிகூட என்னைவிட்டு அகலாதிருக்க அடம்பிடித்தாள். இதனால், வீட்டை விட்டு எங்கும் கிளம்பவே முடியவில்லை.

நினைத்த நேரத்தில் விரும்பியதை சாப்பிட, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள என எதுவுமே நடக்காமல் போனதால்... கோபம் முழுவதும் கணவர் மீது திரும்பியது. ''நான்தான் அப்புறமா குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னேன்ல. உங்களுக்கென்ன... ஜாலியா ஆபீஸ் போயிட்டு பொழுது சாய வர்றீங்க. நான்தான் அல்லாடுறேன். என் சுதந்திரம் போயே போச்சு'' என்று அடிக்கடி குத்திக் காண்பிக்க ஆரம்பித்தேன். இந்தக் கோபத்தில் தாம்பத்ய வாழ்க்கையையும் வேண்டுமென்றே, தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன்.

''குழந்தை இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க. அதான் சீக்கிரம் குழந்தை பெத்துக்க நினைச்சேன். உன்னை கஷ்டப்படுத்தறதுக்காக இல்ல. இதைத் தாங்கிக்கிட்டா... கொஞ்சம் வருஷம் கழிச்சு நீ ரிலாக்ஸ்டா இருக்கலாம்’' என்ற அவரின் அறிவுரைகள், எனக்கு அறவே பிடிப்பதில்லை. குழந்தை மீது பாசம் இருந்தாலும்... கல்லூரி காலத்திலிருந்து நான் வளர்த்தெடுத்திருந்த, 'இளமை நினைவுகள்' முழுமையாக நிறைவேறாதது... உச்சக்கட்ட மனஅழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறது.

இதிலிருந்து விடுபட, ஆறுதல் தாருங்களேன் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 311ன் சுருக்கம்

''என் மூத்த மகனுக்கு, மணம் முடித்த 6-வது மாதத்தில் குழந்தை பிறக்க, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டான். அடுத்த அதிர்ச்சியாக, புகுந்த வீட்டில் கேஸ் ஸ்டவ் வெடித்து சாகடிக்கப்பட்டாள் என் மகள். இருவரையும் பறிகொடுத்த அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து, ஒரு கை - கால் செயலிழந்துவிட்டது. இந்நிலையில், மனைவியுடன் வெளிநாட்டு வேலையில் இருந்த கடைசி மகன், அவளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், தன் மகளுடன் ஊர் திரும்ப... அடி மேல் அடி! துணையின்றி வாழும் மகனையும், தாயின் பாசமின்றி வளரும் பேத்தியையும் பார்க்கப் பார்க்க... மனம் ரணமாகிறது. இதெல்லாமே என்னால்தான் என்கிற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது. இந்த ரணங்களை சுமப்பதைவிட, மரணமே மேல் என்று மறுகுகிறது மனம். மனசாந்தி அல்லது மரணத்துக்கு வழி சொல்லுங்கள் மகள்களே!''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை!

100

மனம் வெதும்புகிறது!

எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத அதீத தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் உங்களை நினைக்கும்போது, எனக்கும் மனம் வெதும்புகிறது. ஆனால், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்து வைத்த திருமணம் பற்றிய குற்ற உணர்ச்சி உங்களுக்கு தோன்றவே கூடாது. ஏனெனில், நீங்கள் மனமறிந்து எந்தப் பிழையையும் செய்ய வில்லையே..! எனவே, கோழைத்தனமான முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. மனப்பக்குவம் பெறுவதற்கு தியானம், நல்ல இசை கேட்பது, நல்ல உபன்யாசங்களுக்கு செல்வது, மன அமைதி தரும் புத்தகங்களைப் படிப்பது என வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் மனம் சாந்தியடையும்!

- கிரிஜா நரசிம்மன், அண்ணா நகர் (கிழக்கு)

மனவலிமையே மருந்து!

நடந்ததை மாற்ற முடியாது. இனி நடக்க வேண்டியதை சிந்திப்பதே நலம். உங்கள் இளைய மகனின் தாம்பத்ய வாழ்க்கைக்கு இந்த வயதிலேயே முற்றுப்புள்ளி விழுவது நல்லதல்ல. மருமகள் குடும்பத்தாருடன் பேசி, இருவரையும் சேர்த்து வைக்கப் பாருங்கள். அது முடியவே முடியாது எனும்பட்சத்தில், பொருத்தமான... இதேபோன்ற வலியறிந்த இன்னொரு பெண்ணைத்தேடி மறுமணம் செய்யுங்கள். பல துன்பங்களை கடந்து வந்திருக்கும் உங்களின் வாழ்வு, கண்டிப்பாக இனிமை கொண்டதாக மாறும். மனவலிமை மட்டுமே கண்கண்ட மருந்து.

- டி.வசந்தா, திண்டுக்கல்

எல்லாம் நன்மைக்கே!

காரண காரியமின்றி இறைவன் எதையும் செய்ய மாட்டார். உங்களுக்கு ஆறுதலாக 2-வது மகனும் பேத்தி யும் உள்ளனர். உங்கள் அன்பு, பாசத்தை அவர்களிடம் காட்டுங்கள். குற்ற உணர்ச்சி வேண்டாம். 'எல்லாம் நன்மைக்கே’ என்று நினையுங்கள். பேத்தியின் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுங்கள்.

- கே.பட்டு, குரோம்பேட்டை.