Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 12

மன வேதனைக்கு மருந்து போட்ட தீர்ப்பு!இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர் - 12 அவேர்னஸ் நீதிபதி கே. சந்துரு

##~##

குற்றங்கள்... அதற்கான தண்டனைகள் பற்றியெல்லாம் மிகப்பெரும் விவாதங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. எந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டும் என்பதுகூட, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் விவாதப் பொருள்களாகிவிட்டன.

இந்திய தண்டனைச் சட்டத்திலேயே, எந்தக் குற்றத்துக்கு, எந்த அளவுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கலாம் என்பது பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், விதிக்கப்போகும் தண்டனை பற்றிக் குற்றவாளியிடமே கேட்டுவிட்டு, 'தண்டனையைக் குறைக்க ஏதேனும் சாதகமான வழிகள் இருக்கின்றனவா?' என்று ஆராய்ந்து, எல்லாவித சூழ்நிலைகளையும் கணக்கில் கொண்டுதான் நீதிபதி தண்டனையை அளிப்பார்.

'விதிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம்' என்று குற்றவாளியும், 'தண்டனை போதாது' என்று குற்றம் சாட்டியவர்களோ அல்லது அரசுத் தரப்போ மேல்முறையீடு செய்தால், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் விசாரித்து, தக்க தீர்ப்பு வழங்க மட்டுமே சட்டத்தில் இடமுண்டு. சில அசாதாரண சூழ்நிலைகளில், குற்ற வழக்கில் மேல்முறையீட்டை விசாரிக்கும் உயர் நீதிமன்றம், தன்னிச்சையாக தண்டனையை உயர்த்தித் தீர்ப்பு வழங்கவும் சட்டத்தில் இடமுண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களிடம் தண்டனை குறித்துக் கருத்துக் கேட்க சட்டத்தில் இடமில்லை. பல நாடுகளில் குற்றம் இழைக்கப்பட்டவரிடமோ... அவருடைய குடும்பத்தாரிடமோ குற்றவாளிக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று கேட்டு முடிவெடுக்கும் நடைமுறை இருக்கிறது.  இது, நம் நாட்டில் இல்லை.

சட்டத்தால் யுத்தம் செய்! - 12

அபூர்வமாக... குற்றம் செய்தவரிடமே கருத்துக் கேட்டு, வித்தியாசமான தண்டனை வழங்கிய வழக்கு ஒன்று, உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் முகபத் பீவி. கணவரை இழந்து 40 நாட்கள் துக்கம் கடைபிடித்து வந்த நிலையில், ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு அவர் வீட்டில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தா தலைமையில் 10 பெண் போலீஸார் புகுந்து, அவரைக் கைது செய்தனர். துணிமாற்றக்கூட அனுமதிக்கவில்லை. ரமலான் நோன்பில் இருந்தவரை, நோன்பு திறக்கவும் அனுமதிக்கவில்லை. தெருவே வேடிக்கை பார்க்க... காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டவரை, உறவினர்களைத் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கவில்லை. 'நெஞ்சு வலிக்கிறது' என்று கூறியும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. மருமகள் கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில்தான் இந்த அதிரடி. ஆனால், அதையும் அவரிடம் கூறவில்லை.

கைது செய்து காவலில் வைக்கப்படும் நபருக்கு எத்தகைய உரிமைகள் உண்டு என்பதை நம் நாட்டுச் சட்டங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. 1997-ம் ஆண்டில் டி.கே. பாசு என்பவர் தொடர்பான வழக்கில், காவல்துறைக்கு 11 கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம் என்றும் கூறியுள்ளது.

இதையெல்லாம் மீறிவிட்டதாக ராமநாதபுரம் ஆய்வாளர் வசந்தா மீது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் முகபத் பீவியின் வழக்கறிஞர். அதை விசாரித்த நீதிமன்றம், வசந்தாவை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. அவரது சமாதானத்தையும், மற்ற காவல்நிலைய ஆவணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், முகபத் பீவிக்கு மருத்துவ சிகிச்சைக்கு வழி செய்யவில்லை... அவருடைய கைது பற்றி உறவினர்களுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை. ஆக, ஆய்வாளர் வசந்தா, அந்த 11 கட்டளைகளில் 2 கட்டளைகளை மீறியதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் அளித்ததாகவும் குற்றம்சாட்டியது.

சட்டத்தால் யுத்தம் செய்! - 12

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 6 மாத சிறைத் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. இப்படி தண்டனை பெற்ற அரசு அதிகாரியை, பதவியில் இருந்து நீக்கவும் அரசுக்கு அதிகாரமுண்டு. ஆனால், இந்த ஆய்வாளர் தண்டிக்கப்படுவதன் மூலம், பாதிக்கப்பட்ட முகபத் பீவிக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை. நோன்பிலிருந்த இஸ்லாமிய விதவைப் பெண்மணியை... பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவரது மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? அச்சமயத்தில் அவர் அடைந்த அவமானத்தை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அதேநேரம், ஆய்வாளருக்கு வேலையே பறிபோய்விடும் சூழல்.

எந்தவித தண்டனை வழங்கினால், பாதிக்கப்பட்ட முகபத் பீவிக்கும் மன அமைதி கிடைக்கும் என்று நீதிமன்றம் ஆராய்ந்தது. ஆய்வாளர் வசந்தாவிடம், தண்டனையைத் தவிர்க்க வேண்டுமென்றால், முகபத் பீவியின் வீட்டுக்கு நேரில் சென்று, தவறுக்கு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். முகபத் பீவி மன்னித்துவிட்டால், தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

முதலில் தயக்கம் காட்டிய ஆய்வாளர், பின்னர் நேரில் சென்று பகிரங்க மன்னிப்புக் கோரினார். அந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தவறிழைத்த ஒரு காவல் அதிகாரி, பாதிக்கப்பட்டவரிடமே பகிரங்க மன்னிப்பு கோரிய முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கும். முகபத் பீவியின் வழக்கறிஞர்... தன் கட்சிக்காரர் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட விவரத்தை தெரிவித்தவுடன், ஆய்வாளரை இதுபோல் தவறுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கக்கூடாது என்று எச்சரித்து வழக்கை முடித்துக்கொண்டது நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட வனிதையர், இப்படி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நியாயம் கேட்கப் புறப்பட்டு விட்ட வேகம், தற்போது புயல் வேகமாகவேதான் இருக்கிறது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் மொத்தமாக குறைந்துவிடவில்லை. ஆனால், பூக்கள் எல்லாம் புயலாக மாற ஆரம்பித்திருப்பது... பூக்களை சிதைக்க நினைப்பவர்களின் நிம்மதிக்கு உலை வைத்திருப்பது உண்மை. பேரமைதி வரும் வரை, புயல்கள் ஓயாதிருக்கட்டும்!

நிறைவடைந்தது

தொகுப்பு: பி.ஆரோக்கியவேல்

படம்: உ.பாண்டி

'இனி, இதுபோன்று நடக்கக் கூடாது!’

''பொதுவாக எங்கள் சமூகத்தில், கணவர் இறந்துவிட்டால், அன்றிலிருந்து 40 நாட்களுக்கு வெளியில் எங்கும் போகக்கூடாது. இந்நிலையில்தான் காரணமே கூறாமல் என்னை தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, வீடு முழுக்க சோதனையிட்டனர். இரவு நேரங்களில் நான் உடுத்தியிருக்கும் கைலி மற்றும் மேலாடையுடன் வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். கணவரை இழந்ததாலும், என் மகனின் குடும்ப வாழ்க்கை வீணானதாலும் மனம் நொந்து கிடந்த எனக்கு அமைதி வேண்டி, நோன்பிருந்து வந்தேன். அதையும் திறக்கவிடவில்லை. பெண் போலீஸாரின் இத்தகைய அராஜக நடவடிக்கை, இனி எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது என்றுதான் நீதிமன்ற கதவுகளைத் தட்டினேன். நான் அடைந்த வேதனையை நீதிபதி ஐயா உணர்ந்திருக்க வேண்டும். உண்மையில் அவர்களின் முகத்தைக் கூட நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால், தவறிழைத்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் தனக்கிருந்தும்கூட, பாதிப்புக்குள்ளான என்னிடமே குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் பொறுப்பை கொடுத்த நீதிபதி ஐயாவின் கருத்தை ஏற்று, அவர்களை மன்னித்தேன்'' என்கிறார் பெரியபட்டினம் கிராமத்தில் வசிக்கும் முகபத் பீவி.

- இரா.மோகன்