மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘லவ்’வே பிடிக்காத ஷபானா!

கேபிள் கலாட்டாரிமோட் ரீட்டா

##~##

லைஞர் டி.வி. 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ சீரியல்ல... ஜாலியான கேரக்டர்; சன் டி.வி. 'சொந்தபந்தம்’ சீரியல்ல ரொம்ப பொறுப்பான கேரக்டர்னு... மாத்தி மாத்தி கலக்கிட்டிருக்காங்க ஆஷ்ரிதா.

அம்மணிகிட்ட பேச்சுக் கொடுத்தா... ''ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல!''னுதான் சொல்லணும்.

''நிஜம்தான் ரீட்டா... ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவாச்சும் நான் சைலன்ட்டா இருந்தா போதும்... 'என்னம்மா, உடம்பு ஏதும் சரியில் லையா?'னு ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பிச்சுடு வாங்க. அந்த அளவுக்கு துறுதுறு பொண்ணு. சின்ன வயசுல இருந்தே நான் ஃபீல்டுக்கு வந்த வங்கறதால, செட்ல உள்ளவங்களுக்கு நான் எப்பவுமே செல்லம்'' என்று சொல்லும் ஆஷ்ரிதா, மூணு வயசுல சன் டி.வி. 'அப்பா அம்மா’ சீரியலில் நாகேஷ் சாருக்கு பேத்தியா நடிச்சதுதான் ஆரம்பம். பிறகு... 'அண்ணாமலை’, 'கீதாஞ்சலி’, 'சலனம்’, 'கனாகாணும் காலங்கள்’, 'அனுபல்லவி’னு தொடர்ந்து ஓடிட்டே இருக்காங்க.

''எங்க அப்பா தாஸ், டெலி மீடியால புரொடக்ஷன் மேனேஜரா இருந்ததால, சின்ன வயசுலயே இதுக்குள்ள வந்துட்டேன். அதனால் நான் ஜாலியா இருந்தாலும்.. 'ஷாட் ரெடி’னு சொன்னதும் நடிப்புல வெளுத்துக் கட்டிடுவேன். ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முன்ன திடீர்னு அப்பா தவறினதுதான் கொடுமை. ஆனாலும், அவரோட ஃப்ரெண்ட்ஸ் இன்னிக்கு வரை ஃபீல்டுல எனக்கு ரொம்பவே உதவியா இருக்காங்க'' என சென்டிமென்ட்டாக பேசிட்டிருந்த ஆஷ்ரிதாவை ஜாலியாக்க...

‘லவ்’வே பிடிக்காத ஷபானா!

''ஆமா, உங்க குடும்பமே கலைக்குடும்பமாமே?'' கேள்வியை எடுத்துவிட்டேன்.

ரொம்ப உற்சாகமாயிட்ட பொண்ணு, ''ஆமா ரீட்டா... இதை எப்படி கண்டுபிடிச்சே? எங்கம்மா புஷ்பாவும் ஆர்ட்டிஸ்ட்தான். என்னோட சித்தி தீபா, சீரியல் ஆக்டர் நேத்ரன் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு பேருமே நடிக்கறாங்க. இன்னொரு சித்தி சப்னாவும் 'தேன்நிலவு’ சீரியல்ல நடிச்சுட்டிருக்காங்க. அவங்க பையன்தான் விஜய் டி.வி. '7- சி’ சீரியல்ல கலக்கற கண்ணன். தீபா சித்தியோட பொண்ணு அபிநயா, விஜய் டி.வி. 'ஜோடி நம்பர்-1’ , 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ல டான்ஸ் ஆடி இருக்கா. அடுத்ததா எங்க குடும்பத்துல இருந்து இன்னொரு ஆளும் ரெடியாயிட்டு இருக்கு. சீக்கிரமே உன்கிட்ட சொல்றேன்''னு சொன்ன ஆஷ்ரிதாகிட்ட...

''வெள்ளித்திரை?''னு கேட்டேன்.

''ஆல்ரெடி வந்தாச்சு’'னு படக்குனு பதில் வரவே... ''சொல்லவே இல்ல''னு நான் 'ஷாக்' ஆனேன்.

''நம்பு ரீட்டா... நம்பு. 'திருமணம் என்னும் நிக்காஹ்’ அப்படிங்கற படத்துக்காக ஜெய்க்கு அத்தை பொண்ணாவும், 'தெகிடி’ படத்தில் ஜனனி ஐயரோட ஃப்ரெண்டாவும் நடிச்சுட்டிருக்கேன்'' என கலகலத்தவருக்கு.... வீட்டுல வெச்சுருக்கற செல்லப் பேரு 'கிங்கிணி’யாம்!

அம்மணி பொறந்த சமயத்துல மலையாள ஹிட் சாங்... 'கிங்கிணி'. இதுதான் பேருக்கு பின்னணி!

''இந்த ஷபானா பொண்ணு செம்ம டெடிகேடட்பா''னு யூனிட்ல ஒரே பேச்சா இருக்காம்.

''நிஜமாவா சங்கதி?''னு... சன் டி.வி. 'தேவதை' சீரியலில் நடிக்கும் ஷபானா பர்வின்கிட்ட கேட்டேன்.

''ஓ, அதுவா... பாட்டில் பாட்டிலா கோக்கை  என் மேல கடகடனு ஊத்தி, அப்படியே ஷூட் பண்ணினதுதான் 'தேவதை' சீரியல்ல என்னோட முதல் ஷாட். கோக் பாட்டில்களை உடைச்சு ஊத்தினதும் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். ஆனாலும் அசராம ஆக்ட் கொடுத்துட்டிருந்தேன். அதுக்குப் பிறகும், தொடர்ந்து பல எபிசோட்கள்ல குங்குமத்தை மேல கொட்டுறது, சேற்றை அள்ளி மேல அடிக்கறது, சோப்பு தண்ணியை ஊத்துறது... எல்லாத்தையும் தாங்கிட்டே இருக்கேன். அதான், 'இவ ரொம்ப நல்லவப்பா’னு... இப்படி பட்டம் கொடுத்துட்டாங்க...'’னு சொன்ன ஷபானாவை...

''ஏம்மா... ஏன் இப்படி?''னு அதிர்ச்சியா பார்த்தேன்.

‘லவ்’வே பிடிக்காத ஷபானா!

''எனக்கு நடிப்புனா ரொம்ப இஷ்டம். அதனாலதான் எதைக் கொட்டினாலும் தாங்கிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன் (பாறாங்கல்லைக் கொட்டினா கூடவா?!). சன் மியூசிக், கலைஞர் டி.வி, இசையருவினு காம்ப்பயர் பண்ணிக்கிட்டே நடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன். ஆனா, இதெல்லாம் எனக்கு பெரிசா தெரியல. கதைல நான் உருகி உருகி லவ் பண்றனே அதான் காமெடியா இருக்கு. ஏன்னா, நெஜத்துல எனக்கு 'லவ்’வுனா சுத்தமா புடிக்காது. கல்யாணமே பண்ணிக்காம, அன்னை தெரசா மாதிரி சர்வீஸ் பண்ணணும்ங்கிறதுதான் என் ஆசை''னு சொன்னாங்க.

அன்னை ஷபானா பர்வீன்... வருக வருக!  

‘லவ்’வே பிடிக்காத ஷபானா!

சுடச்சுட ஜேக்கப்!

சன் டி.வி. 'ஆஹா என்ன ருசி’ நிகழ்ச்சியில் வரும் செஃப் ஜேக்கப்... கடந்த வருஷம் நவம்பர்ல திடீர்னு ஹார்ட் அட்டாக் காரணமாக இறந்துபோனது... அவரோட ரசிகர்கள் பலருக்கும் பேரதிர்ச்சி. அதேசமயம், இன்னிக்கு வரை அவரோட நிகழ்ச்சி மட்டும், சுடச்சுட எபிசோடா தொடர்ந்து வந்துகிட்டிருக்கறது இன்ப அதிர்ச்சி!

''ஆரம்பத்துல தினமும் நிகழ்ச்சியை ஒளிபரப்புற மாதிரி பிளான் இருந்துச்சு. அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டைல் சமையல்னு மூணு மாசத்துக்கு முன்னயே ஷூட் பண்ணிட்டோம். பிறகு, வாரம் ஒரு எபிசோட்னு டி.வி-யில முடிவு பண்ணிட்டதால... தொடர்ந்து பத்து மாசமா வந்துட்டிருக்கு. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துக்கான எபிசோட்ஸும் கையில இருக்கு''னு சொன்ன டைரக்டர் ஜாஃபர்,

''ஷூட்டிங் பண்ணினப்ப நாங்க ரொம்ப பொறுமையா நகர்த்தினாலும்... ஜேக்கப் சார் மட்டும் 'சீக்கிரமா எடுத்து முடிக்கணும்'னு சொல்லி ரெஸ்ட்டே இல்லாம ஸ்பீடா முடிச்சுக் கொடுத்தாரு. எதனால அவ் வளவு அவசரமா முடிச்சுக் கொடுத்தாருனு இன்னிக்குவரைக்கும் தெரியல''னு தழுதழுத்தார்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

‘லவ்’வே பிடிக்காத ஷபானா!

150

ஆணியே புடுங்க வேண்டாம்!

''சன் மியூஸிக் சேனலில் காலையில் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி வருகிறது. குழந்தைகளின் படங்களைக் காண்பித்து வாழ்த்துச் சொல்லி பாடல்களை ஒளிபரப்புவார்கள். சமீபத்தில் ஒரு நாள், 'அடுத்து வரப்போவது இரண்டு வில்லன்கள்' என்று சொல்லிவிட்டு, இரண்டு குழந்தைகளின் படங்களைக் காண்பிக்க, நான் அதிர்ந்து போனேன். கூடவே, 'பாக்கறதுக்கு வில்லன் மாதிரி இருந்தாலும் ரெண்டு பேரும் கில்லி மாதிரி வருவாங்க' என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உளறிக் கொட்டினர். குழந்தைகளை வாழ்த்துகிறேன் பேர்வழி என்று இப்படி வில்லன் என்றெல்லாமா வர்ணிப்பார்கள்? இதைக் கேட்ட அந்தக் குழந்தைகளின் பெற்றோர் மனது என்ன பாடுபடும். இதற்கு வாழ்த்தாமலே இருந்திருக்கலாம்'' என்று வெடிக்கிறார் செங்கல்பட்டில் இருந்து மதிவதனி.

கலாசாரம் காப்பார்களா?

''தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று பல விஷயங்களைச் செய்து வருகிறது மக்கள் டி.வி. ஆனால்,  கலாசார முறைப்படி சேலை அணிந்து வரும் அதன் தொகுப்பாளர்களில் சிலர், தலைமுடியை பின்னாமல், விரித்துப் போட்டபடி வருகிறார்கள். இது எந்த ஊர் கலாசாரம்?'' என்று வருத்தக் கேள்வி எழுப்புகிறார் திருக்கானூர்பட்டியில் இருந்து எஸ்.நித்யலஷ்மி.

நல்லுறவை உருவாக்கும்!

''என்னைக் கவர்ந்த டி.வி. விளம்பரம் அது. இளம்பெண் ஒருவர், சாலையில் காவல் பணியிலிருக்கும் போலீஸ்காரரிடம், தான் செல்லும் இடத்துக்கு வழி கேட்கிறார். வழியெல்லாம் சொல்லி முடிக்கும் அவர், 'சிஸ்டர்' என்று பேச்சை முடிக்கிறார். உடனே அந்தப் பெண், 'அண்ணே, நீங்க ஏன் ராக்கி கட்டிக்கல?’ என்று கேட்க, 'வேலைப்பளு’ என்கிறார்  போலீஸ்காரர் பரிதாபமாக. கையை நீட்டச்சொல்லி அந்தப் பெண் ராக்கி கட்டிவிட, 'ஆஹா, உனக்கு பரிசளிக்க என்னிடம் எதுவும் இல்லையே’ என்று சொல்லும் போலீஸ்காரர், 'பரவாயில்லை, என் மொபைல் எண்ணை குறித்துக்கொள். ஏதாவது உதவி தேவை என்றால் தொடர்பு கொள்' என்று அவளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறார். காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்ல உறவை உருவாக்கும் விதத்தில் இருக்கிறது இந்த விளம்பரம்'' என்று பெருமிதம் கொள்கிறார் ஹைதராபாத்தில் இருந்து பி.ப.கமலாசுந்தர்.