Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150
ஓவியங்கள்: ஹரன்

அரியக்குடி... குன்னக்குடி... சேலங்குடி!

குட்டீஸ் குறும்பு !

சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரின் பாடல்களையும் வயலினையும் சிலாகித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பேரன், ''அதென்ன பாட்டி அரியக்குடி, குன்னக்குடினு பேருக்கு முன்னால சொல்றீங்க?’' என்று கேட்டான். அதற்கு, ''பிரபலமானவங்களை எப்பவும் அவங்க ஊர் சொல்லித்தான் பேர் சொல்வாங்க செல்லம்'’ என்று பதில் சொன்னேன் நான். உடனே, ''நான் எந்த ஊருல பொறந்தேன்?’ என்று கேட்டான் பேரன். இதற்கு, ''சேலத்துல...'’ என்று அவனுடைய அம்மா பதில் சொல்லவும்... ''ஓ... அப்படினா நான் 'சேலங்குடி ரோஹன்!’ ’' என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். அவனுடைய புத்திசாலித்தனத்தையும் குழந்தைத்தனத்தையும் ரசித்துச் சிரித்த எங்களுடன் காரணம் தெரியாமலே சேர்ந்து கொண்டான் அவனும்!

- எஸ்.விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்

'அம்மா... 'பெட்'டுக்கு 'டிரெஸ்' போடுங்க!’

குட்டீஸ் குறும்பு !

அன்று என் இரண்டு வயது மகள் பிளே ஸ்கூலிருந்து வந்ததும் பெட் ரூமுக்குப் போனவள், ''அம்மா... அம்மா... இங்க வாங்க'’ என்று சத்தம்போட, என்னவோ ஏதோ என்று நினைத்து ஓடினேன். ''அம்மா... பெட்டுக்கு அதோட டிரெஸ்ஸை எடுத்துப் போட்டு விடுங்க'’ என்று அவள் பீரோவைக் காட்ட, அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. நான் பீரோவைத் திறக்க, அவள் 'பெட் ஸ்ப்ரெட்'ஐ காண்பித்ததும்தான் விஷயம் புரிந்தது! 'பெட் ஸ்ப்ரெட்'ஐ  துவைப்பதற்காக எடுத்திருந்ததால், பெட் டிரெஸ் இல்லாமல்(!) இருந்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறது எங்கள் வீட்டு சுட்டி.

முதலில் மனதாரச் சிரித்து விட்டுத்தான், பெட்டுக்கு டிரெஸ்(!) போட்டேன்!

- கல்பனா சந்திரமௌலி, நாக்பூர்

'தாத்தானா குப்பை போடலாமா..?’

குட்டீஸ் குறும்பு !

ஒரு நாள் என் ஆறு வயது மகன் காகிதங்களைக் கிழித்து வீடெல்லாம் குப்பை போட்டுக் கொண்டிருந்தான். அதை பார்த்துக் கோபமடைந்த என் அப்பா, ''யார் இவ்ளோ குப்பை போட்டாங்களோ... அவங்களே அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில போடணும்'' என்றார். என் மகனும் அதேபோல் செய்தான். சில நாட்களில் என் அப்பா பழைய கடிதங்களை எல்லாம் கிழித்து கட்டிலுக்கு அடியில் போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த என் பையன், ''தாத்தா... நீங்க மட்டும் குப்பை போடலாமா?'' என்று அவரிடம் நியாயம் கேட்க, ''சரி, நீ அதையெல்லாம் எடுடா'' என்றார் அவர். என் பாட்டியும், அம்மாவும் ''நாங்க எடுக்கிறோம்'' என விரைந்து வர, உடனே என் மகன், ''அதெல்லாம் முடியாது. யார் குப்பை போட்டாங்களோ அவங்களேதான் எடுக்கணும்'' என்றான் ஸ்ட்ரிக்ட்டாக... 'கண்டிப்பானவர்’ எனப் பெயர் வாங்கிய என் அப்பாவிடமே! சிரித்துக் கொண்டே குப்பைகளை எடுத்து போய் குப்பைத் தொட்டியில் போட்டார் அவர்.

என் குடும்பமே மகனை ஆச்சர்யமாகப் பார்த்தது... என் அப்பாவையும்தான்!

- சுந்தரி ஜெ.பட், ஹைதராபாத்