Published:Updated:

எழுத்துலகில் ஓர் ஈர உள்ளம் !

ஆர்.சூடாமணி

ரேவதி

 'இன்று உன்னிடம் இருப்பது, நாளை வேறொருவருடையதாகிறது!’

- பகவத் கீதை சொல்லும் உண்மை இது. சென்ற நூற்றாண்டின் பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் சூடாமணியின் இறுதி நாட்கள், இந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கவே காத்திருந்திருக்கிறது.

தன்னிடமிருந்த பத்து கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புகொண்ட பூர்விக சொத்துக்களை அநாதை இல்லங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்துவிட்டு சூடாமணி காத்திருக்க... சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அவர் மறைவுக்குப் பின் பல வறியவர்களின் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்க தற்போது சென்றடைந்து கொண்டிருக்கின்றன அந்தச் சொத்துக்கள்!

எழுத்துலகில் ஓர் ஈர உள்ளம் !
##~##

சூடாமணியின் கொடைக்கு மனமெங்கும் நன்றி ஏந்தியும், அவர் ஆத்மாவின் சாந்திக்கு உள்ளமெங்கும் பிரார்த்தனை நிரப்பியும் நெகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பல இல்லங்களில் வாழும் ஆதரவற்ற ஜீவன்கள்!

1931-ல் சென்னையில் பிறந்த சூடாமணிக்கு, மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர். சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கி எலும்பு வளர்ச்சி இல்லாமல் போனது. மகளுக்கு எந்த மனச்சோர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக குடும்ப நண்பரும், எழுத்தாள ருமான மகரம் (கே.ஆர்.கல்யாணராமன்) மூலம் வீட்டிலேயே கல்வி பயிற்றுவித்தனர் பெற்றோர். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றதோடு, ஓவியமும் கற்றுத் தேர்ந்தார் சூடாமணி. அவரின் எழுத்து, சிறுகதை உலகில் தனி சிம்மாசனம் போட்டுக் கொடுத்தது.

சூடாமணி எழுதிய கதைகளின் பிரதான அம்சமே... அவற்றின் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். எந்தச் சூழ்நிலையிலும் சிறியதொரு கசப்பு உணர்வையும் வெளிக்காட்டாமல் 'எழுத்து’ என்ற நடவடிக்கையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது. அதேபோல, எந்த சந்தர்ப்பத்திலும் அவர் தம் கதைகளிலும் எதேச்சையாகக்கூட தன்னிரக்கம் கசிந்துவிட இடம் கொடுத்ததில்லை.

எழுத்துலகில் ஓர் ஈர உள்ளம் !

கிட்டத்தட்ட 600 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள சூடாமணி, தன் எழுத்துக்காக பெற்ற பரிசுகளும் நிறைய..! 2001-ல் வெளியான 'ஆர். சூடாமணி கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்புக்குத் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதை படைப்புக் கான பரிசை வழங்கியது. 2009-ல் 'கலைஞர் பொற்கிழி விருது'ம் பெற்றார். உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளின் பட்டியலிலும் இவருடைய கதைகள் இடம்பிடித்திருப்பது சிறப்பானது.

தற்போது சூடாமணியின் உயிலின்படி சொத்துக் களை சம்பந்தப்பட்ட  சமூக சேவை அமைப்புகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அவரின் கால் நூற்றாண்டு நண்பரான பாரதி கூறும்போது, ''அவரிடம் மிகுந்த செல்வம் இருந்தும், தன் எளிய தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்தார். ஒரு முற்போக்கு சிந்தனையாளராக, பெண் நிலைவாத சிந்தனையாளராக இருந்தும்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் சிந்தனைகள் தெளிவாக இருந்ததும், உண்மை தன்மையுடன் இருந்ததுமே அதற்குக் காரணம்.  

துறவி போல் எப்போதும் வெள்ளை காட்டன் புடவைதான் கட்டுவார். பார்வையற்றவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கான பாட புத்தகங் களைப் படித்து உதவுவார். திருமணமே செய்து கொள்ளாத சூடாமணி, சகோதரிகளின் மறைவுக்குப் பிறகு எண்பது வயது வரை தன் பூர்விக வீட்டிலேயே, உதவிக்கு சில ஆட்களுடன் தன்னந்தனியாகவே வாழ்ந்து கழித்தார். வீட்டின் அலமாரி முழுவதும் இருந்த சென்ற நூற்றாண்டின் 750-க்கும் மேற்பட்ட அபூர்வமான புத்தகங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு கொடுத்துவிட்டோம். சூடாமணியின் சொத்துக்கள் அனைத்தையும் அவர் பட்டியலிட்டு வைத்திருந்த அநாதை இல்லங்கள், சமூக அமைப்புகளிடம் சேர்ப்பித்து விட்டோம். நிறைய ஷேர்ஸ் மீதம் உள்ளன. அதையும் ஒப்படைத்துவிட்டால், என் பொறுப்பு முடிந்தது. ஆனால், அந்த தொண்டுள்ளத்தின் இழப்பை யாரால் ஈடு செய்ய முடியும்..?!''

- வார்த்தைகளில் ஏக்கமும் துக்கமும் தேங்கி நிற்கிறது பாரதிக்கு!

எழுத்துலக ஈர உள்ளத்துக்கு அஞ்சலி!

படம்: எம்.உசேன்