பல் போனால் எல்லா சொல் போச்சு !
'தலைவலியும் காய்ச்சலும், தனக்கு வந்தால்தான் தெரியும்' என்பார்கள். அந்த வலிகளின் வரிசையில் பல் வலியையும் தவிர்க்க முடியாது. உணவுப் பொருளை மெல்வதற்காக படைக்கப்பட்ட பற்கள், முக அழகையும் கூட்டித் தருவது மனிதர்கள் செய்த பாக்கியம். ஆனால், அத்தகைய பற்கள், சில பிரச்னைகளுக்கு ஆளாகும்போது, அப்பப்பா... ஒரேயடியாக அல்லவா படுத்தி எடுத்துவிடுகின்றன! அதேசமயம், அந்தப் பற்களை முறைப்படி கவனித்து வந்தால்... நீங்கள்தான் எப்போதும் புன்னகை அரசி!
இங்கே பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நம்மிடம் பேசுகிறார் டாக்டர் வி.ஜானகிராமன். 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா முதல், 'புன்னகை இளவரசி’ சினேகா வரையிலான திரைப்பிரபலங்கள் பலருக்கும் இவர் 'ஃபேமிலி பல் டாக்டர்’!

##~## |
''அந்தக் காலத்தில், சாப்பிட்டதும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்று தாம்பூலம் போடும் வழக்கம் இருந்தது. இதனால், பற்களில் நுண்கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. இன்றோ, உணவுப் பழக்கங்கள் மாறி, நொறுக்குத் தீனியைச் சாப்பிட்டு, பல் வியாதிகளுக்கு நாமே வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். சாப்பிட்டவுடன் வாயைக் கொப்பளிக்காமல் விடுவதால், உணவுத் துகள்கள் பற்களின் இடுக்குகளில் படிந்துவிடும். உடனே, குண்டூசி அல்லது குச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி குத்தி எடுக்க நினைக்கிறோம். விளைவு, பல் சொத்தை பிரச்னை, பரம்பரை சொத்தாக மாறிவிடுகிறது!'' என்று சிரித்த டாக்டர் ஜானகிராமன், தொடர்ந்தார்.
''இதயம், சிறுநீரகம் போன்றே பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. பல் துலக்காததால் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வாய் துர்நாற்றத்துக்கு பல் துலக்காதது மட்டுமே காரணம் இல்லை. சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, ஜீரண உறுப்பில் கோளாறு, வயிற்றுப் போக்கு, மூக்கு, தொண்டை, சைனஸ் போன்ற பலவித பிரச்னைகளும் வாய் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையலாம்.

வைட்டமின் 'சி’, வைட்டமின் 'கே’ பற்றாக்குறையாலும்... கேன்சர், லுகேமியா நோய்களாலும் ஈறுகளில் கசிவு ஏற்படலாம். சில வகை தோல் நோய், முடக்குவாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும். பொதுவாக, உடலில் எங்கு பிரச்னை என்றாலும், முதலில் பற்களைத்தான் பரிசோதிப்பார்கள்!'' எனச் சொன்ன டாக்டர், துணைத் தலைப்புகளோடு ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து விவரித்தார்.
பல் சொத்தை: சாப்பிடும் உணவுப் பொருட்கள் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் மாட்டிக்கொள்ளும். பல்லை சரியாக சுத்தம் செய்யாதபோது, அந்த இடம் பாக்டீரியாக்கள் வந்து தங்கக்கூடிய இடமாக மாறிவிடும். இந்த பாக்டீரியாக்கள், பல்லில் ஒட்டிக்கொள்ளும் இனிப்பு, மாவு வகை உணவுத் துணுக்குகளைச் சாப்பிட்டு வளர்ந்து, 'லேக்டிக்’ எனப்படும் ஒரு வகை அமிலத்தை மிக நுண்ணிய அளவு சுரக்கின்றன. இந்த அமிலங்கள் முதலில் பல் எனாமலை மெதுவாகத் தாக்கியதும், பற்களின் மேல்புறம் கறுப்பாக புள்ளிபோல் தோன்றும். இது பல் சொத்தைக்கான ஆரம்ப அறிகுறி.
அப்படியே விட்டுவிட்டால் எனாமலை முழுவதுமாக அரித்து, 'தந்தம்’ (டென்டின்) என்ற உணர்வுப் பகுதியை தாக்கி, பற்களையே கரைக்க வைக்கும். தித்திப்பு, புளிப்பு சாப்பிட்டாலோ, தண்ணீர் குடித்தாலோ பல் வலியும், கூச்சமும் ஏற்படும்.

பல்லில் சொத்தை உடனே பரவிவிடுவது இல்லை. சொத்தைப் பகுதியில் இருந்து கீழிறங்கி, அடுத்து இருக்கும் பல்லின் மிருதுவானதும், ரத்தநாளங்களும், நரம்பு களும் இருக்கும் பகுதியான 'பற்கூழ்’ பகுதியை பாக்டீரியாக்கள் தாக்குகின்றன. இதனால் வலி மிகுதியாகும். பல்லுடன் தொடர்புடைய கண், காது என்று எல்லாமே சேர்ந்து வலிக்கும். இதுதான் பல்லுக்கான அபாய சங்கு.
கிருமிகள், பற்கூழ் முழுவதையும் துவம்சம் செய்துவிட்டு, வேர் பகுதிக்கு கீழ் இருக்கும் எலும்பை அரித்து சீழ் உண்டாக்கிவிடும். இதனால் கன்னம் வீங்கிவிடும். வீக்கத்தை குறைத்து, சிகிச்சை மூலம் பற்குழியை அடைக்கவேண்டும்.
பல் கிளிப்: முத்துக்களைக் கோத்ததுபோல் பல் வரிசையாக இருந்தால்தானே முகத்துக்கு அழகு..! பலருக்கு பற்கள் அப்படி சீராக இருப்பதில்லை. பற்களுக்கு இடையே இடைவெளியும், முன்னும் பின்னுமாக இடித்துக்கொண்டும் இருக்கும். இந்த இடைவெளியில் உணவுப் பொருட்கள் தங்கி, சுத்தம் செய்வதற்கும் கஷ்டமாக இருக்கும். இலவச இணைப்பாக வாய் துர்நாற்றம் ஏற்பட்டு, பல் சொத்தை, ஈறு நோய் ஏற்படும். பல் வரிசை என்பது பழக்க வழக்கங்களாலும், மரபு வழியாலும் குழந்தைகளாக இருக்கும்போது விரல் சூப்புவதாலும் வருகிறது. இதைச் சரிசெய்ய பற்களுக்கு 'கிளிப்’ போடலாம்.
செயற்கை பல்: பர்மனென்ட் பல்செட், கழற்றி மாட்டும் வகை, பொக்கை வாய்க்கான பல் செட் என வகை வகையான பல்செட்கள் உள்ளன. இவை மூலமாக ஒரு பல் முதல் ஒட்டுமொத்த பற்களையும் கட்டிக் கொள்ளலாம். கழற்றி மாட்டிக் கொள்ளும் பற்களை தினமும் சுத்தம் செய்யவேண்டும். 24 மணி நேரமும் அணியக்கூடாது. இரண்டு வேளையும் பிரஷ் செய்ய வேண்டும். பொதுவாக, வயதானவர்களுக்கு பல் எலும்பு தளர்ந்திருக்கும். அவர்களுக்கு நான்கு பற்கள் ஸ்ட்ராங்காக இருந்தாலே, அதை வைத்தே பல்செட் கட்டலாம். பல் ஆடுகிறது என்றால்தான் அதை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எலும்பு சப்போர்ட் இருக்கிறதா என்று பரிசோதித்து அதற்கேற்ப, பல் எடுக்கவோ, கட்டவோ செய்யலாம்.

சிகிச்சை முறைகள்:
பல்லில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும்போதே பல்லை அடைத்துக்கொள்வது நல்லது. முன் பற்களில் பல்லின் நிறம் கொண்ட சிமென்ட்டினால் அடைக்கும்போது பாதிப்பு இருக்காது. பல்லின் அழகும் கெடாது.
இனிப்புகளில் சுக்ரோஸ் அதிகம். இதுதான் சொத்தையை உண்டாக்கும். அதனால், பற்களில் பிசுபிசுப்பை ஒட்டக்கூடிய சாக்லேட் வகை இனிப்புகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.
சிலரது பற்கள், மஞ்சள், பழுப்பு நிறத்திலும், காரை படிந்தும் இருக்கும். இதை 'கிளீனிங்’, 'பிளீச்சிங்’ செய்து வெண்மையாக்கலாம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும்.
- ரேவதி
படம்: பொன்.காசிராஜன்