Published:Updated:

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

சிகரெட்... சீக்ரெட்...
எஸ்.கே.நிலா

'அமெரிக்க அதிபர் ஒபாமா, சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டார். பதின்பருவ வயதிலிருந்தே ஒபாமாவைப் பிடித்தாட்டிய புகைப் பிசாசு, தற்போது

தலைதெறிக்க ஓட்டமெடுக்கக் காரணம், ஒபாமாவின் மனைவி மிச்சேல்!’

- உலகம் முழுக்க இல்லத்தரசிகளிடம் ஹிட் ஆகியிருக்கிறது இந்தச் செய்தி!

ஒரு மனைவி மனது வைத்தால் ..!
##~##

''புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதென 'மறுபடியும்’ நான் முடிவு செய்திருக்கிறேன்...'’ - 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இப்படி ஓபன் டாக் விட்டார் ஒபாமா! அதிபர் நாற்காலியில் அமர்ந்ததும், பொறுப்பு உணர்வோடு புகையைக் குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தார் மனைவி மிச்சேல். ஆனால், முன்னைவிட டென்ஷன் கூடிப்போனதாகச் சொல்லி, சிகரெட்களின் எண்ணிக்கை யையும் ஒபாமா கூட்டியதுதான் மிச்சம்!

வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல முக்கிய முடிவுகளில் அதிபரின் மனைவிக்கும் பங்கு உண்டு என்பது அமெரிக்கா அறிந்த ரகசியம். அப்படித்தான், கிடப்பிலிருந்த 'புகையிலை பொருட்கள் கட்டுப் பாடு மசோதா’வை தூசுதட்டி எடுத்து, அதிபரைக் கையெழுத்திட வைத்துவிட்டார் மிச்சேல்.

இதைச் சாதிக்க, ஓராண்டு காலமாக பிரம்மப் பிரயத்தனமே செய்திருக்கிறார் மிச்சேல் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் ஜிம்மில் 45 நிமிடங்கள், வாரத்தில் இருமுறை ஒபாமாவுக்குப் பிடித்த பேஸ்கட் பால் விளையாட்டு என்று கட்டாயமாக்கிய மிச்சேல், தானும் கணவருடனேயே ஜிம்மிலும், கிரவுண்டிலும் பழியாகக் கிடந்தார். 'உடற்பயிற்சியும், பிடித்தமான விளையாட்டுகளும் ஒருவரை எப்படியான மன அழுத்தத்திலிருந்தும் விடுவித்துவிடும்' என்பதைத் தீவிரமாக மிச்சேல் நம்பியதுதான் இதற்குக் காரணம்!

அடுத்து... புகைக்கு மாற்றாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'நிக்கோடின் சூயிங்க'த்தை ஒபாமா வின் கோட் பாக்கெட்டுகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். புகைப்பதற்கென்றே ஒபாமா வலிய உருவாக்கி வைத்திருந்த 'பிரேக்' நேரங்களை நாசூக்காக நறுக்கினார். முக்கியமாக, அதிபரின் பிரத்யேக மருத்துவரை புகைப் பழக்கம் இல்லாத ஒருவராக தேர்ந்தெடுத்து மாற்றினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒபாமாவின் தினசரி சிகெரெட்டுகள் ஐந்தாக குறைந்தன. இதையடுத்து, வெள்ளை மாளிகை வட்டாரத்துக்குள்ளேயே புகைக்கும் வழக்கம் குறைய ஆரம்பித்ததுதான் ஹைலைட்!

க்ளைமாக்ஸாக, 'புகைப் பழக்கத்தை விட்டொழித்து விட்டேன்’ என்று பகிரங்கமாக கணவரை விட்டே மீடியாவில் அறிவிக்க செய்த மிச்சேல், ''இந்த விஷயத்தில் என்னையே நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கணவர்களைக் காப்பாற்றுங்கள்'’ என்று அமெரிக்க இல்லத்தரசிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்!

சூப்பர்ல?!

30 நிமிட அடிமை!

 

''ஒருவரின் புகைப் பழக்கத்தை மாற்ற, அவருடைய மனைவி கட்டாயம் மனது வைக்க வேண்டும் என்பது உண்மை. அதைத்தான் நிரூபித்திருக்கிறார் மிச்சேல் ஒபாமா'’ என்று சொல்லும் புதுச்சேரியைச் சேர்ந்த நுரையீரல் நோய் நிபுணர்களான டாக்டர் வெங்கடேஷ்வர பாபு - டாக்டர் மஞ்சு தம்பதியர்,

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

''காலையில் கண் விழித்ததிலிருந்து சுமார் 30 நிமிடத்துக்குள் புகைக்கும் கணக்கை ஒருவர் துவக்கினால்... அவர் புகைக்கு அடிமை. 15 நிமிடங்களிலேயே அது துவங்கினால்... நிலைமை ரொம்ப சீரியஸ்! கட்டுப்படுத்தவில்லை என்றால்... உயிருக்கே ஆபத்துதான்.

புகைப் பழக்கம், கணவனை மட்டுமல்ல... குடும்பத்தையே பாதிக்கக்கூடிய மோசமான நோய். புகைப் பழக்கத்தின் காரணமாக கணவனுக்கு ஏற்படும் எல்லா பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வந்து சேரும். குறிப்பாக... குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும். மனைவி கர்ப்பமாக இருந்தால்... வயிற்று சிசுவின் ரத்த ஓட்டக்குறைவு, நுரையீரல் செயல்பாட்டுக் குறைவு போன்றவையும் ஏற்படும். எனவே, புகைக்கு எதிரான விழிப்பு உணர்வு மனைவிக்கு அதிஅவசியம். ஹார்ட் அட்டாக், கேன்சர் அறிகுறி போன்றவை தென்பட்ட பிறகு விழிப்பு உணர்வு அடைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை!'' என்று எச்சரிக்கைக் குறிப்புகளைத் தந்தனர்.