Published:Updated:

எங்கே எனது கவிதை ?

எங்கே எனது கவிதை ?

ம.பிரியதர்ஷினி

எங்கே எனது கவிதை ?

மனம் கனக்க வைக்கிறது அந்தச் செய்தி. பதினைந்து ஆண்டு தவத்துக்குப் பிறகு, பெற்றெடுத்த குழந்தையைப் பறிகொடுத்து நிற்கிறார் பாடகி சித்ரா!

ஏ.ஆர். ரஹ்மான் நடத்தும் இசை நிகழ்ச்சிக்காக, கணவர் விஜயசங்கர் மற்றும் எட்டு வயதுக் குழந்தை நந்தனா ஆகியோரோடு துபாய் சென்ற சித்ரா, ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்தார். கணவர் அருகில் எங்கேயோ சென்றிருக்க, நந்தனாவுக்கு கார்ட்டூன் சேனலை ஆன் செய்துவிட்டு குளிக்கச் சென்ற சித்ரா, திரும்பி வந்தபோது... டி.வி. முன்பாக அவள் இல்லை. சற்றே திகிலுடன் தேட ஆரம்பித்தால்... வீட்டின் பக்கவாட்டில் இருந்த நீச்சல் குளத்தில் கிடந்திருக்கிறாள். அலறியடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு அள்ளிச் சென்றபோது, அந்த இரக்கமற்ற செய்தியை உறுதி செய்துள்ளார்கள் மருத்துவர்கள். அதிர்ச்சியில் சுயநினைவை இழந்த சித்ராவை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு அந்த அந்நிய தேசத்தில் கண்ணீருடன் கணவர் விஜயசங்கர் தவித்த தவிப்பு, இன்னும் பரிதாபம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் நம் 'தீபாவளி மலரு’க்காக சித்ராவை சந்தித்த கணங்கள் நம் முன் வந்து போகிறது. அது, நந்தனா பள்ளிக்குச் சென்றிருந்த நேரம். அவள் பெயரைச் சொல்லிப் பேசும்போதெல்லாம் அவர் மனதில் நிரம்பி முகத்தில் வழிந்த பூரிப்பில், நந்தனா அவருக்கு எத்தனை பொக்கிஷமானவள் என்பதை உணர முடிந்தது. நந்தனா ஒரு 'சிறப்புக் குழந்தை’ என்பது, தன் தாயின் அன்பை, அக்கறையை, பரிவை, தாய்ப்பாசத்தை இன்னும் அதிகமாக அவளுக்குப் பெற்றுத் தந்தது. கொஞ்சம் அதிக அக்கறை காட்ட வேண்டிய குழந்தை என்பதால், தன் இசையுலக கமிட்மென்ட்கள் தவிர, மீதி நேரம் முழுமையையும் மகளுக்காகவே வாழ்ந்தார் சித்ரா.

##~##

துக்கத்தின் ஈரம் பரவிய குரலுடன் அதைப் பற்றி பேசினார் பாடகர் மனோ...

''சித்ராவோட மொத்த சந்தோஷமும் நந்தனா தான். அவங்க எங்க போனாலும் அவங்ககூட நந்தனாவையும், குழந்தையைக் கவனிச்சுக்க ஒரு பெண்ணையும் கூட்டிட்டுத்தான் போவாங்க. துபாய் கிளம்பினப்போகூட, 'ஸ்கூல் இப்போ லீவுதானே...’னு நந்தனாவையும் அழைச்சுட்டுப் போயிருக்காங்க. ஆனா...'' என்று வார்த்தைகள் கம்மினார்.

சித்ராவின் நெருங்கிய தோழியும், பாடகியுமான எஸ்.பி.ஷைலஜாவுக்கு பேசும்போதே வார்த்தை களுக்கு இடையில் கண்ணீர் கோக்கிறது. ''சித்ரா, எங்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவா. பதினஞ்சு வருஷமா அவ குழந்தைக்காக ஏங்கின ஏக்கம், ரொம்ப கொடியது. அத்தனை ட்ரீட்மென்ட், அத்தனை மன உளைச்சல், அத்தனை கண்ணீர். ஆனாலும் ஒருபோதும் மனசு தளராம, 'எனக்கு கண்டிப்பா ஒரு குழந்தை வேணும் ஷைலு...’னு சொல்லி, அந்த குருவாயூரப்பனைதான் வேண்டிட்டே இருப்பா. அப்படி வரமாதான் அவளுக்கு கிடைச்சா நந்தனா. அதுக்கு அப்புறம் தான் சித்ரா முகத்துல ஒரு தேஜஸை நான் பார்த்தேன்.

குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நடந்த எங்களோட சந்திப்புகள்ல எல்லாம், அவ பேச்சு முழுக்க நந்தனாதான் இருப்பா. 'அவ மகா குறும்புக்காரி ஷைலு. அதே மாதிரி கோவக்காரியும் கூட. அவளுக்கு நான் பக்கத்துலேயே இருக்கணும். அதுவும் அவளுக்காக ஸ்பெஷலா பாட்டுப் பாடணும். நான் அவளை விட்டுட்டு வெளிய எங்கயாச்சும் போயிட்டு வந்தா, கோபமா உட்கார்ந்திருப்பா. செல்லத்தை சமாதானப்படுத்திதான் பேச வைக்கணும்...’னு சின்னக் குழந்தை மாதிரி கன்னக்குழி விழ சித்ரா பேசினதெல்லாம் காதுல ஓடிட்டே இருக்கு. ஆனா கடவுள் இவ்ளோ பெரிய தண்டனையை எதுக்கு சித்ராவுக்கு கொடுத்தார்..?!'' என்று மனம் தாங்காமல் சொல்லி முடித்தார் ஷைலஜா.

எட்டு வயதாகும் நந்தனாவுக்கு ஆசையாக பதினைந்து வயது வரைக்கு  தேவைப்படும்  உடைகள் வாங்கி அடுக்கி வைத்துள்ளார் சித்ரா. அன்று, சென்னை வீட்டில் அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் நிரந்தரமாக தூங்கிக் கொண்டிருந்த நந்தனாவுக்கு, அவளுக்குப் பிடித்த ஃப்ராக் ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.

'எங்கே எனது கவிதை..?’

- சித்ரா குரலில் உருக்கும் அந்த பாடல் வரிகள் நம் நினைவுக்கு வந்து உயிரைத் துளைத்தது!