மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி -249

மனதை ரணமாக்கும் மகன் வாழ்க்கை !

வாசகிகள் பக்கம்
ஓவியம்: பாரதிராஜா

என் டைரி -249

'என் மகனே... என் வாழ்க்கை' என்று வாழ்ந்து வரும் பாசத் தாய் நான். ஆனால், எந்த சந்தோஷமும் இல்லாமல், ஒரு சாபம் போல அவன் இந்த வாழ்க்கையை இப்போது தூக்கிச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இதயமே வெடிக்கிறது எனக்கு!

பெரிய பணக்காரர் என் கணவர். ஆனால், சுயபுத்தி இல்லாமல் சேராதவர்களோடு சேர்ந்து எல்லாவற்றையும் இழந்து, என்னையும் மகனையும் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் நிராதரவாக விட்டுட்டு, எங்கோ ஓடிவிட்டார். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்தும் அத்தனை அவமானங்களையும், வறுமையையும் மீறி 'என் புள்ளையை ஆளாக்கியே தீரணும்...’ என்று அவனுக்காகவே புதுப்பிறவி எடுத்ததுபோல வாழ ஆரம்பித்தேன்.

என் நகைகள் அனைத்தையும் விற்று, அதில் சிறுதொழில் தொடங்கி, வருமானத்தை ஓரளவு ஸ்திரமாக்கினேன். மகனுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தேன். குணத்திலும் தங்கமாக வளர்த்தேன். அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

##~##

அழகான, அறிவான, பண்பான என் மகனைச் சுட்டிக் காட்டி, 'எப்படி வளர்த்திருக்கேன் பாருங்க என் புள்ளைய...’ என்ற பெருமிதத்துடன் பெண் பார்க்க ஆரம்பித்தேன். வந்த ஜாதகங்கள் எல்லாம், அவனுடைய அப்பாவைப் பற்றிக் கேள்விப்பட்டு பின்வாங்கின. ''எனக்கு கல்யாணமே வேண்டாம்...'' என்று அவன் மனம் வெறுத்துப் போக, சமாதானப்படுத்தி இறுதியாக ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது. ஆனால், அவர்களுக்குள் சரிப்பட்டு வராமல் போகவே... சீக்கிரமே விவாகரத்தாகிவிட்டது. நான் ஒடிந்தே போனேன்.

சில ஆண்டுகள் கழித்து மறுமணம் செய்து வைக்க நினைத்தேன். தீவிர தேடலுக்குப் பிறகு, ஏற்கெனவே விவாகரத்தான ஒரு பெண்ணை, அவனுக்கு மணம் முடித்தேன். ஆனால், அந்தப் பெண் சரியான மனநிலையில் இல்லாதவர் என்பது போகப் போகத்தான் தெரிந்தது. எங்களைப் படுத்தி எடுத்துவிட்டாள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு, மீண்டும் விவாகரத்து.  

இப்போது நாற்பது வயதைத் தாண்டிவிட்ட மகன், வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல், நடைபிணம் போல வேலைக்குப் போய் வந்து கொண்டிருக்கிறான். 'இரண்டு கல்யாணமாகி விவாகரத்தானவன்...’ என்ற பெயருடன், விதியே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். வீடே சூனியமாகிவிட்டது. இன்னொரு திருமணம் பற்றிப் பேசினால், ''பட்டதெல்லாம் போதாதா..?'' என்று ஆத்திரத்தில் வெடிக்கிறான். ஓரளவுக்கு மேல் அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க பயமாக இருக்கிறது. அதேசமயம், அவனை அப்படியே விட்டுவிடவும் மனது மறுக்கிறது.

'என் குடும்ப வாழ்க்கைதான் சாபமாகிவிட்டது. என் பிள்ளைக்காவது நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக நான் பட்ட பாட்டுக்கெல்லாம் இப்படி பலனில்லாமல் போய்விட்டதே..? எந்தத் தவறும் செய்யாத பத்தரை மாற்றுத் தங்கமான என் பிள்ளைக்கு, ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..?' என்று அடிக்கடி விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறேன்.

என் காலம் முடிவதற்குள் எப்படியாவது என் பிள்ளையைக் கரை சேர்க்க, ஒரு வழி சொல்லுங்கள் தோழிகளே..!

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு.... சிநேகிதிக்கு ....

என் டைரி 248-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

என் டைரி -249

என் டைரி 248-ன் சுருக்கம்...

''கேன்டீன் நடத்தி வரும் என்னோடு, பார்ட்னராக சேர ஆசைப்பட்டாள் என் உறவுக்கார பெண் ஒருத்தி. அதை நான் தவிர்த்துவிட்டேன். அதற்காக என்னை வஞ்சம் தீர்க்க நினைத்தவள், தற்போது என் கணவனையே என்னிடம் இருந்து தந்திரமாக தன் பக்கம் ஈர்த்துவிட்டாள். அவரும், 'அப்படித்தான் இருப்பேன்’ என்று அடாவடியாக பேசுகிறார். 'கேன்டீன்ல பார்ட்னரா சேர்க்க மாட்டேன்னு சொன்னீல... இப்ப உன் வாழ்க்கையே பங்கு போட்டுட்டேன் பார்த்தியா’ என்று குத்திக் குத்திக் காட்டுகிறாள். என் கணவரை நான் எப்படி மீட்பது?''

ஆண் துணை மட்டுமே முக்கியமல்ல!

அந்த வஞ்சகி, உன் கணவரையே தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டதற்கு அடிப்படை காரணம், ஆண்களுக்கே உரிய பலவீனம். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உன் கணவர் நல்ல மூடில் இருக்கும் சமயம் பார்த்து, அந்தப் பெண் உங்கள் வாழ்வில் விரிசல் ஏற்படுத்த விரித்த வலைக்கான காரணத்தை பக்குவமாக எடுத்துச் சொல். அதன்பிறகும் அவர் இறங்கி வரவில்லையெனில், அவருடைய அப்பா, அம்மா மற்றும் உறவுகள் மூலமாகவே உன் கணவருக்கு புத்திமதிகளை போதிக்கச் சொல். அதையும் அவர் உதாசீனப்படுத்தினால், 'அவர் தலையெழுத்து’ என்று அவரைவிட்டே நீ ஒதுங்கிவிடு. அன்பு, அந்நியோன்ய பேச்சு எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிவிடு. பிஸினஸில் மட்டும் இன்னும் தீவிரமாக கவனத்தைச் செலுத்து. அதில் நிச்சயமாக நீ கொடிகட்டி பறப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு, அந்த வஞ்சகியின் சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு உன்னவர், உனைத் தேடி வருவதற்குகூட வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லையென்றால்கூட கவலையே படாமல்... உன் வழியில் உன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இரு. ஆண் துணை முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே முக்கியமல்ல என்பதை மனதில் கொண்டால்... உன் பிரச்னைகள் தூள் தூளாகிவிடும்!

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

காலம் கனியும்... காத்திரு!

ஏமாற்றுபவர்களும், துரோகம் நினைப்பவர்களும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது. அந்த பாதகி மூலமாகவே இந்த உண்மை உன் கணவருக்கு சீக்கிரமே புரியவரும். அவளால் உங்கள் கணவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சிக்கூட நாளைக்குக் காத்திருக்கலாம். அப்போது இருவரும் விலகுவார்கள். உன் கணவர் உன்னிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கும் காலம் வரும். அதுவரை, பொறுத்திரு. உன் உற்சாகத்தை குழந்தைகளிடமும், பணியிலும் காட்டு!

- எஸ்.சத்யாமுத்து, வேலூர்

ருசி கண்ட பூனை ரோஷம் பாராது!

பிடிக்காத மனைவி, வாய்க்கு ருசியாகச் சமைத்தாலும், வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுபவர்கள் சிலர் என்றால், வெண்டைக்காய் கரிந்து போனாலும், 'ரொம்ப நல்லா இருக்கு’ என்று சபாஷ் போட்டு சாப்பிடும் அந்நியோன்ய தம்பதிகள் நிறையவே இருக்கிறார்கள். பாவம், உன் தலையெழுத்து இப்படி. 'ருசி கண்ட பூனை, ரோஷம் பாராது’ என்பார்கள். உன் கணவர் அந்தப் பெண்ணின் மேல் ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், அந்த மயக்கம் சீக்கிரமே தானே தெளியும்போதுதான், உண்மை அவரைச் சுடும். அதுவரை பொறுத்திரு மகளே!

- காமாட்சி கல்யாணசுந்தரம், பொன்னேரி