Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

கிளிப்பேச்சு...மொழி போச்சு !

 குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

ராகுல் சென்... கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். ''குட்டி ராகுலுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்?'' என தமிழில் கேட்டேன். பதில் சொல்லத் தடுமாறினான். அதையே ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் பதிலில்லை. அவன் தாய்மொழியான பெங்காலியில் கேட்டபோதும் தடுமாற்றமே!

''இப்படித்தான்... அவனுக்குப் பேச்சும் சரியா வரல... நாம பேசறதைப் புரிஞ்சுக்கவும் சிரமப்படறான். பேச்சுலயே இவ்வளவு பிரச்னை இருந்தா, பாடமெல் லாம் எப்படிப் படிப்பான்..?'' என்றார் அவனுடைய அம்மா மனதெல்லாம் தவிப்புடன்.

##~##

அவரிடம், ''குழந்தைகிட்ட வீட்ல என்ன மொழியில பேசுவீங்க..?'' எனக் கேட்டேன். ''எங்க தாய்மொழியில தான் பேசுறோம் டாக்டர்...'' என்றார். ''அவனுடைய அப்பா அவனிடம் என்ன மொழியில பேசுகிறார்?’' என்றதற்கு, ''இங்கிலீஷ், பெங்காலினு ரெண்டு மொழி யிலயும் பேசுவார்'' என்றார். ''அக்கம் பக்கத்துல அவன் வயசு குழந்தைங்க அவன் கூட விளையாடும் போதும், ஸ்கூல்லயும் என்ன மொழியில பேசுவாங்க..?'' என்றேன். ''நாங்க இருக்கறது கொஞ்சம் வசதியான அபார்ட் மென்ட். அங்க எல்லா குழந்தைகளும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கறதால பெரும்பாலும் இங்கிலீஷ்தான். ஸ்கூல்லயும் அதேதான்'' என்றார் அவனுடைய அம்மா பயத்துடனும் குழப்பத்துடனும்!

அங்குதான் பிரச்னையே! குழந்தை, தான் வளரும் சூழ்நிலையில் தமிழ், ஆங்கிலம், பெங்காலி என்று மூன்று மொழிகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அங்கே, பெரும்பாலானவர்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம். ஆனால், அவனுடன் அதிகம் பேசும் அம்மா, பெங்காலியில் பேசியிருக்கிறார். அதனால் எந்த மொழியையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாமல் போனதால், பள்ளியிலும் சரியாகப் படிக்க முடியவில்லை; தான் பேச நினைக்கும் விஷயங்களைச் சரியாகவும் முழுமையாகவும் சொல்ல முடியவில்லை அவனால்.

மாநிலம் விட்டு மாநிலமோ, வெளிநாடு சென்றோ வாழும் இளம் பெற்றோர்களின் சிறுவயது பிள்ளைகள் சந்திக்கும் பெரும் பிரச்னை இது. இதற்கு தீர்வு..?! வாழிடத்திலும் சுற்றுப்புறத்திலும் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியையே பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை வளர்க்கும்; நட்பு வட்டமும் விரிவடையும். இல்லையென்றால், 'எனக்கு அவங்ககிட்ட என்ன பேசுறதுனு தெரியலையே...’ என்று வீட்டுக்குள்ளயே சுருங்கிவிடும். அது, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடுக்கும்.

க்ருஷாங்கினியின் கதையைப் பார்ப்போம். உலக மேப்பில் எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், சரியாகக் காட்டுவாள். ஒரு நாட்டின் கொடியைக் காண் பித்தால்... எந்த நாட்டுக் கொடி என்பதை அழகு மழலையில் அடுத்த நொடியே சொல்லி விடுவாள். வீட்டுக்கு யார் வந்தாலும் இவளைக் கூப்பிட்டு 'அதை சொல்லும்மா... இதை சொல்லும்மா’ என்று பெருமைப்படுவார்கள் பெற்றோர். ஆனால், அவளிடம் வேறு எந்த விஷயங் களைச் சொன்னாலும் உடனே புரிந்து கொள்ள மாட்டாள். காரணம், சொன்னதைச் திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளையாகத்தான் க்ருஷாங்கினி வளர்க்கப்பட்டிருக்கிறாள். பெற்றோர் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்தவற்றை மனப்பாடமாக வைத்துக் கொண்டு, யார் கேட்டாலும் 'கடகடவென’ ஒப்பித்திருக்கிறாள்.

உண்மையான மொழியறிவு என்பது சொன்னதைத் திருப்பிச் சொல்லும் 'கிளிப் பேச்சு’ அல்ல. ஒரு விஷயத்தைக் காதால் கேட்டு, கண்ணால் பார்த்து, அறிவால் புரிந்து கொண்டு பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை ஒழுங்காகவும் சரியாகவும் வளர்க்கும். அது இருந்தால்தான் எங்கும் எதிலும் உச்சத்தை தொட முடியும்.

அறிவார்ந்த மொழிப்பேச்சு இருக்கும் குழந்தைதான் தான் நினைக்கும், உணரும் விஷயங்களைச் சரியாகச் சொல்லும். அந்தத் திறன் இருக்கிற குழந்தையால்தான் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்து படிக்க முடியும். அப்படியான திறன் இல்லாத குழந்தைகள், பிராக்டிகல் நாலெட்ஜில் பின்தங்குவார்கள். உதாரணமாக, 'ரைட்டிங்’ என்ற ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங்கை மனப்பாடம் செய்து 'டிக்டேஷன்’ல் சரியாக எழுதி விடுவார்கள். ஆனால், வகுப்பில் 'ரைட்டிங்’ என்ற வார்த்தையை வைத்து ஐந்து வரிகள் சுயமாக எழுதச் சொன்னால்... விழிபிதுங்கி நிற்பார்கள்.

மாறாக, 'ரைட்டிங்’ என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் குழந்தை, அழகான கட்டுரையையே எழுதி மிஸ்ஸிடம் 'வெரிகுட்’ வாங்கி, அந்த நிமிட ஸ்டார் ஆகிவிடுவாள்.

ஆகையால், உங்கள் குழந்தை சொன்னதைச் சொல்லும் 'கிளிப்பிள்ளை’யாக இருக்கிறதா..? அறிவார்ந்த 'மொழிப்பிள்ளை’யாக இருக் கிறதா என்பதை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கவனிப்புதான் குழந்தையை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற வைக்கும் ஏணி!

வளர்ப்போம்...

படம்: என்.விவேக்