Published:Updated:

வெளிநாட்டு வாசகிகள் பக்கம்

மணல் முழுதும் சர்க்கரை... கடல் முழுதும் குடிநீர் !

உலகம்... அழகுக் கலைகளின் சுரங்கம்!
துளசி கோபால்

தன் 'தடதட’ ஆஸ்திரேலிய டூர் அனுபவங்களை, தன் எழுத்தின் மூலம் நமக்கும் கடத்துகிறார், நியூஸிலாந்து நாட்டில் வசிக்கும் நம் வாசகி துளசி கோபால்!

''ஆஸ்திரேலியாவோட மூணாவது பெரிய நகரமான பிரிஸ்பேன். ஏழாவது மாடியில ரூம். உழக்குல... கிழக்கு, மேற்குப் பார்க்கறா போல ஒன்றரை மீட்டர் இடம்தான்! 'ஹார்ட் ஆஃப் த சிட்டி’ங்கறதால... இன்ச் இடத்துக்கும் அவ்வளவு டிமாண்ட்!

வெளிநாட்டு வாசகிகள் பக்கம்
##~##

அலமாரி, படுக்கை, பாத்ரூம், டி.வி., ஏ.சி-னு சதுர அங்குல இடத்தையும் விடாம உபயோகிச்சுக்கிட்ட அந்த அறையோட சுவத்துல, ஒரு பலகை அடிச்சு அதுல மின்சார கெட்டில். காபி, டீ மட்டும் போட்டுக்கலாம். ஆனா, 'பிரெட் டோஸ்ட்டரை உபயோகப்படுத்தாதே’னு அறிவிப்பு!

முகம் கழுவிக்கிட்டுக் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா வெளியே கிளம்பிப் போய், ராத்திரியில வயித்தைக் காயப் போடக்கூடாதேனு 'சப்வே’யில் சாப்பாட்டை (!) முடிச்சுக்கிட்டு, குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டோம். 600 மில்லி குடிதண்ணீர்... மூணு டாலர் (கிட்டத்தட்ட 150 ரூபாய்). ம்... துளித்துளியா குடிச்சு காலை வரை ஒப்பேத்தினோம்! இங்க ஹோட்டலைவிட, மோட்டல்ல தங்கறதுதான் சிக்கனம்ங்கறத பிறகு தெரிஞ்சுகிட்டோம்.

டிரைவிங் லைசென்ஸைக் காட்டி ஒரு வாடகை கார் எடுத்துக்கலாம். ஹார்ன் அடிக்க தேவையே இல்லாத அளவுக்கு சீரான டிராஃபிக், சூப்பர் ரோடு. அப்படி ஒரு காரை எடுத்துக்கிட்டு விரட்டினா... ஹெலன்ஸ்வேல்ங்கற ஏரியாவுல கூட்டம் தீயா மொய்ச்சுக்கிட்டிருந்தது. காரணம், தீம் பார்க்குகள் இங்க இருந்தே ஆரம்பிச்சுருது. ஒவ்வொண்ணுக்கும் நுழைவுச்சீட்டுக்கு கட்டணம் செமத்தையா தீட்டிடறாங்க.

கடற்கரைச் சாலையில இருக்கற சிங்கிள் ரூம் 'ஹாலிடே இன்’ல தங்கினோம். பதினோ ராவது மாடியில எல்லா வசதிகளோட ஒரு ரூம். திரைச்சீலையை இழுத்ததும் கருநீலக்கடல் பளிச்! கடற்கரை மணல் முழுசும் மக்கள். 'மணல் முழுதும் இங்கு சர்க்கரையா... கடல் முழுதும் இங்கு குடிநீரா'னு 'பாய்ஸ்' படத்துல வர்ற பாட்டு சட்டுனு ஞாபகத்துக்கு வந்துடும்.

'லைஃப் கார்டு’கள் கண் பார்வைக்குப் படற இடத்துல மட்டுமே தண்ணியிலே இறங்கலாம்ங்கறது கறார் கண்டிஷன். மேலே ஹெலிகாப்டர் ஒண்ணும் ஓயாம பறந்து கண்காணிச்சுட்டே இருக்கும். 20 டால ருக்குப் பூப்போட்ட துண்டுத் துணி வாங்கிக் கட்டிக் கிட்டு, வெய்யில்ல படுத்துக்கலாம். யாரும் யாரையும் 'கவனிச்சு’ப் பார்க்கறதில்ல. நம்ம காசைக் கரியாக்கக் கூடிய எல்லா கொண்டாட்டமும் இங்க இருக்கு.

வெளிநாட்டு வாசகிகள் பக்கம்

மறுநாள்... சவுத் பேங்க் டிரிப். இது பிரிஸ்பேன் ஆத்தோட தெற்குப் பகுதி. ஆஹா... அந்த நதிக்கரையில இருக்கற நேப்பாள் ஷாந்தி மந்திர் (நேபாளக் கோயில்) கொள்ளை அழகு. வெள்ளையர்கள், ஆஸ்திரேலியா வுக்கு வந்ததன் நினைவா நேபாள நாட்டுக் கலைஞர்கள் உருவாக்கின கோயில் இது!

இந்த ஊருக்கு 'பீச்’ இல்லாத குறையைப் போக்க, ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வெச்சுருக்கு நகரசபை. அந்தக் கடல்ல ஆர்ட்டிஃபிஷியல் அலை அடிக்குது. அதுல குளிக்கற மக்களை, 'லைஃப்கார்டு’ ஒருத்தர் கவனிச்சுட்டே இருக்கார்.

சின்ன லீவு... சட்னு முடிஞ்சு போச்சு! பிரிஸ்பேனுக்கு சந்தோஷமா 'பை’ சொல்லி யாச்சு! இயந்திர வாழ்க்கையில பேட்டரி டவுனாகிப் போற நம்ம உடம்புக்கும், உள்ளத்துக்கும் இது மாதிரி விஷயங்கள்தானே சூப்பர் ரீசார்ஜ்!

 வெளிநாட்டு வாசகிகளே... பிக்னிக், டூர், கலந்து கொண்ட வித்தியாசமான நிகழ்ச்சி என்று பிரசுரிக்கத்தக்க அனுபவங்களை, மிகவும் தெளிவான போட்டோக்களுடன், 'உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்' என்ற தலைப்பிட்டு, aval@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.