ரொமான்ஸ் ரகசியங்கள் !
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள் : மணியம் செல்வன்
'நான் சரி, நீ சரியல்ல’ (I am ok, you are not ok ) - பிரபல 'செக்ஸாலஜிஸ்ட்' கோத்தாரி வகைப்படுத்தும் மூன்று வகை மனிதர்களில் இவர்களும் ஒருவர். தாங்கள் முழுக்க முழுக்க மிகச் சரியானவர்கள், மற்றவர்கள் எல்லோருமே தப்பு செய்பவர்கள் எனும் எண்ணத்தில் வாழும் இவர்களைப் பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
இவர்களின் மனதை ஆக்கிரமிப்பது காதலும் ரொமான்ஸும் அல்ல; தான் என்கிற அகம்பாவமும், தான் செய்வதுதான் சரி என்கிற ஈகோவும்தான். பிரபாவதியின் கேஸ் அதற்கு ஓர் உதாரணம்.

##~## |
பிரபாவதி, அவளுடைய அம்மாவின் அச்சு வார்ப்பு. அம்மாவுக்கு அரசு உத்யோகம். கொஞ்சம்போல நிலபுலன்கள் உண்டு. ஆனால் ''நாம் பணக்காரர்...'' என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார் பிரபாவதியை. உடை, உணவு, பயணம் எல்லா வற்றுக்குமே தகுதிக்கு மீறிச் செலவழிப்பாள். ஏழைப் பிள்ளைகளை அண்டவிட மாட்டார். பிரபாவதி அழகாக வேறு பிறந்துவிட்டதால், ''உலகிலேயே மிக அழகான பெண் நீதான்'' என்று அடிக்கடி சொல்வார். இவை எல்லாமே பிரபாவதியின் மனதில் நெகட்டிவாகப் பதிந்தன. அம்மா காண்பித்த உலகமும் சிந்தனைகளும்தான் வாழ்க்கை என்று அவள் சின்ன வயதிலேயே நம்ப ஆரம்பித்தாள்.
பிரபாவதியின் அப்பா, ஓர் அப்பாவி. நிரந்தரமான வேலைக்குச் செல்லா விட்டாலும், கிடைத்த வேலையைச் செய்து பணம் எடுத்து வருவார். அம்மா அதை என்றுமே மதித்ததில்லை. அப்பாவை உட்கார வைத்துக்கூட பேச மாட்டார். மகளின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், தன் மனைவி தவறான வழியில் குழந்தையை வளர்ப்பது கண்டு மனம் வெதும்பிக் கொள்வார். ஒரு கட்டத்தில் குடிகாரராகிப் போனார். பிரபாவதியின் அம்மாவுக்கு, லோக்கல் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவருடன் கம்பேர் செய்து, கணவனை அடிக்கடி கிண்டல் செய்ததால், வீட்டுக்கு வருவதை அறவே நிறுத்திய கணவர், ஒரு நாள் மின்சார ரயிலின் முன் பாய்ந்து இறந்து போனார். ''நம்ம மேல எந்தத் தப்பும் இல்ல பிரபா. அந்தக் குடிகாரன் வீணா செத்துப் போனா... நாமளா பொறுப்பு?'' என்று நியாயம் பேசி விஷயத்தை முடித்தார் அம்மா.
இந்நிலையில்தான் கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்பட்டாள் பிரபாவதி. அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதலித்த ரவிக்குமார், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பையன். கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரி வாங்கி, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தான். இடையே, பிரபாவதியின் காதல், அவனை தடுமாற வைத்தது.
காதலை, அம்மாவிடம் சொல்லிவிட்டு, ரவிகுமாரை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அவள் அம்மாவின் தோரணையும், தன் குடும்பத்தைப் பற்றி விசாரித்து அடித்த கமென்ட்டுகளும் ரவிக்குமாரை எரிச்சல் அடைய வைத்தன. பிரபாவதிக்காகப் பொறுத்துக் கொண்டான். பிரபா எதை ஆசைப்பட்டாலும் அதை 'என்ன விலை கொடுத்தாலும்’ வாங்கித் தந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மா, ரவிக்குமாரின் சம்பந்தத்தை வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார்.
திருமணம் முடிந்தது. உள்ளப் பகிர்தல்களைவிட, உடல் ரீதியாக ரவிக்குமாரை ஏறக்குறைய தன் அடிமையாகவே ஆக்கினாள் பிரபாவதி. அவள் தரும் நீண்ட முத்தங்களில் தன் வாழ்க்கை, கனவு, குடும்பம், லட்சியம், வேலை எல்லாவற்றையும் மறந்து போனான். அம்மா கொடுத்த பணத்தில் சென்ற 'ஹனிமூன்’ டிரிப்களில் ரவிக்குமாரை முழுக்க முழுக்க தன் அரவணைப்பில் கரைத்துக் கொண்டாள் பிரபாவதி. நாட்கள் நகர்ந்தன. பிரபாவதியின் திமிர் பிடித்த பிஹேவியர் ரவிக்குமார் குடும்பத்தை மிரளச் செய்தது. ஒரு கட்டத்தில், 'ஏண்டா இவளைச் சந்தித்தோம்’ என்று ரவிக்குமாரே நொந்து போகும் அளவுக்கு பந்தாக்கள் எல்லை மீறின.
தனியாக வீடு பார்த்து அவர்களைக் குடியமர்த்தினார் பிரபாவதியின் அம்மா. வாழ்க்கை இன்னும் கலவரமாக ஆரம்பித்தது. வீட்டில் பிரபாவதி வைத்ததுதான் சட்டம். அவள் நினைத்ததுதான் சாப்பாடு. அவள் சொன்ன உடையைத்தான் ரவிக்குமார் அணிய வேண்டும். அலுவலகத்துக்கு லீவு போட வேண்டும் என்றால் போட வேண்டும். அவனுடைய தாய், தந்தை உறவினர்களிடம் பேசக்கூடாது. அவர்களும் வீட்டுக்கு வரக் கூடாது. ஆனால், பிரபாவதியின் அம்மா மட்டும் தினமும் வருவாள். அம்மாவும் மகளும் தனியே சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
செக்ஸ்கூட அவள் விருப்பத்தின் மேல்தான் நிகழ வேண்டும். அது காலையோ, மதியமோ, நள்ளிரவோ, அதிகாலையோ அவள் விரும்பினால் அவன் தயாராக இருக்க வேண்டும். இருவருக்கும் சண்டை வரும் போதெல்லாம், ''நான் செய்றதெல்லாம் சரிதான். ஆனா, நீதான் எதுலயுமே சரியில்ல. யோசிச்சுப் பாரு... உனக்கென்ன குறைச்சல்? அழகான பொண்டாட்டி கிடைச்சிருக்கேன். எதிர்காலத்துல என் சொத்தும் உனக்குத்தான் வரப்போகுது. ஆனா, நீ எதுக்காச்சும் லாயக்கா..? அழகும் இல்ல, சொத்தும் இல்ல. அந்த விஷயத்துலகூட உன் மேல எனக்கு திருப்தி இல்ல. எல்லாம் என் தலையெழுத்து...'' என்று ஒரு நாள் அவள் உச்சகுரலில் கத்தியபோது உள்ளுக்குள் உடைந்து போனான் ரவிக்குமார்.
'பொறுத்தது போதும்' என்று பொங்கி எழுந்து, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான். அப்போதும் கலங்கவில்லை பிரபாவதியும் அவளுடைய தாயும். ''நாம 'ஓ.கே’தான். அவன்தான் சரியில்ல. உன் அழகையும், அந்தஸ்தையும் அவனால தாக்குப் பிடிக்க முடியல. நமக்கெல்லாம் பணக்காரங்கதான் சரி. இந்த மாதிரி ஜென்மங்கள் சரிப்படாது...'' என்று அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்ட பிரபாவதி, இன்று தனி மரமாக... நோய்வாய்ப்பட்ட அம்மாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இது, வளர்ப்புக் கோளாறு அவளுக்கு தந்த பரிசு!
ரவிக்குமாரோ... மொத்தத்தையும் கெட்ட கனவாக மறந்து, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 'நான் சரி, நீ சரியல்ல’ என்ற வகைப் பெண்ணான பிரபாவதியைப் போல், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் காதலும் இருக்காது, ரொமான் ஸும் இருக்காது. உண்மையில் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே!
- நெருக்கம் வளரும்...