Published:Updated:

உலகம் எல்லாருக்கும் பொதுவானது !'

குடும்ப பாரத்தை ஆட்டோவில் சுமக்கும் ரோஸ்மேரி

கு.ராமகிருஷ்ணன்
படம்: எம்.ராமசாமி

உலகம் எல்லாருக்கும் பொதுவானது !'

பரபரப்பான பகல் நேரம்... மூன்று பிரதான சாலைகள் ஒன்றாகச் சந்திக்கும் நெருக்கடியான பகுதி... அடுத்தடுத்து வந்த பல வாகனங்களை படுசாமர்த்தியமாக ஓவர்டேக் செய்து, வேகமாக வரும் அந்த ஆட்டோ, பேருந்து நிறுத்தத்தில் நம் அருகே பிரேக் அடித்து நிற்கிறது.

''எங்க சார் போகணும்... ஆட்டோ வேணுமா..?''

- டிரைவர் ஸீட்டில் இருந்து வெளிப்படுகிறார் ஓர் இளம்பெண்!

''சுவாமிமலை போகணும்...'' என ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஆச்சர்யத்தோடு பேச்சு கொடுத்தோம்.

''இதுல ஆச்சர்யப்படறதுக்கு என்ன சார் இருக்கு..? பெண்கள் ஃப்ளைட் ஓட்டற காலமிது. அவமானங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் திறமையும் இருந்தா, எதுல வேணும்னாலும் சாதிக்கலாம்'' என ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்துகிறார் ரோஸ்மேரி. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இருந்து பயணிக்கிறது ஆட்டோ... அவரது பேச்சும்தான்!

##~##

''பாபநாசம், புது பஸ்ஸ்டாண்டு பக்கத்துலதான் என்னோட ஆட்டோ ஸ்டாண்ட். இப்ப 23 வயசாகுது. 'ஒரு பொம்பளப்புள்ள, இந்த சின்ன வயசுலயே சுயமா உழைச்சி சம்பாதிக்கணும் நினைக்குது பாரு’னு பாராட்டறவங்க... 'வேற தொழிலே இல்லையா... திமிர் எடுத்து அலையுது’னு கருத்து சொல்றவங்க... எல்லாத்தையும் கடந்து, 'என் வேலை உண்டு'னு போயிக் கிட்டே இருக்கேன்'' என்றவர், அவருடைய கரங்கள் ஆட்டோ பிடித்த சூழலைப் பேசினார்.

''ஸ்கூல் பியூனா வேலை பார்த்து ரிட்டயர்டு ஆன எங்கப்பாவுக்கு ஆக்ஸிடென்ட்ல கால் எலும்பு முறிஞ்சிடுச்சு. ஒரு மாசம் முழுக்க தஞ்சாவூருக்கு நான்தான் வாடகை ஆட்டோவுல கூட்டிட்டுப் போனேன். அந்த ஆட்டோக்கார செந்தில் அண்ணன்கிட்ட, 'எனக்கு ஆட்டோ ஓட்டக் கத்துத்தாங்க’னு ஆசையா கேட்டேன். அவரும் கத்துக் கொடுக்க, ஒரே மாசத்துல சூப்பரா கத்துக்கிட்டேன்.

அப்பாவோட ஆக்ஸிடென்டால குடும்பச் சூழல் மாறினதால, அந்த வருஷம் பத்தாவது பப்ளிக் எக்ஸாம் எழுத முடியாம போச்சு. உடனடியா ஒரு வேலைக்குப் போகணுங்கற பொருளாதார நிலையில, 'ஆட்டோ வாங்கி ஓட்டினா என்ன?’னு தோணிச்சு. அப்ப 15 வயசுங்கறதால, டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கல. ஜவுளிக்கடை, ஃபர்னிச்சர் கடைனு மூணு வருஷம் வேலை பார்த்தேன். மனசு ஆட்டோவுலயே இருக்க... 18 வயசானதும் டிரைவிங் லைசென்ஸ் வாங்கினேன். வீட்டுல தடுத்தப்ப... 'உங்க பென்ஷன் பணத்தை மட்டும் வெச்சு எப்படிச் சமாளிக்கறது? அக்கவோட கல்யாணத்துக்காகவும், உங்க சிகிச்சைக்காகவும் வாங்கின கடனை எப்படி அடைக்கறது. வெளியில வேலைக்குப் போனா, இந்த அளவுக்கு வருமானம் வராது... உழைப்புதான் விரயமாகும்’னு பேசிப் பேசி சம்மதத்தை வாங்கினேன்'' என்றவர், லோன் போட்டு ஆட்டோ வாங்கி ஒருவழியாக ஸ்டாண்டில் நிறுத்தியிருக்கிறார்.

''ஆட்டோ ஸ்டாண்ட்ல கூடப் பிறந்த சகோதரி மாதிரிதான் அக்கறை எடுத்துக்கிட் டாங்க. ஆனா, ஆரம்பத்துல சவாரி கிடைக்கறதுதான் சிக்கலா இருந்துச்சு. ஸ்டாண்டுல முதல் ஆட்டோவா என்னோட வண்டி நின்னாலும்கூட, தாண்டிப் போயி, பின்னாடி உள்ள ஆட்டோவைத்தான் கூப்பிடுவாங்க. 'நீ ஆட்டோ ஓட்டுவியா..?! ஏதோ பள்ளிக்கூட புள்ளைதான் உட்கார்ந் திருக்குனு நினைச்சிப் போயிட்டேன்’னு சொல்லுவாங்க. 'பொம்பளப் புள்ளையா இருக்க, உனக்கு ஒழுங்கா ஒட்ட தெரியுமானு?’னு கேட்டுட்டு நகர்ந்துடுவாங்க. குடிபோதையில சிலர் வம்படியா வண்டியில ஏறிக்கிட்டு வம்பு பண்றதும் உண்டு. இப்படி பல அனுபவங்கள். வேதனையில மனசு துடிக்கும். குடும்பச் சூழ்நிலையை நினைச்சு பொறுத்துக்குவேன்.

போகப் போக என் திறமையையும் சுறுசுறுப்பையும் பார்த்து எல்லாருமே என்னை வெளிப்படையா பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப எனக்கு எந்தப் பிரச்னையுமே இல்லை. பெட்ரோல் போக, தினமும் 200 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் கிடைக்குது.

'இதுதான் பெண்களுக்கு ஏத்த வேலை, தொழில்’னு ஒரு வட்டத்துக்குள்ளயே சிலர் முடங்கிடறாங்க. அதுல இருந்து வெளிய வரணும்... உலகம் எல்லாருக்கும் பொதுவானது!''

- சுவாமிமலையில் நம்மை டிராப் செய்த ரோஸ்மேரி, ''120 ரூபாய் கொடுங்க சார்...'' என்று பெற்றுக்கொள்ள, மின்னல் வேகத்தில் பாபநாசத்தை நோக்கிப் பறந்தது ஆட்டோ!