ஒரு தெய்வம் தந்த பூவே !
ரேவதி
''அக்கா, அண்ணன், தம்பி, தங்கைனு வாழறதுதான் வாழ்க்கை. பாசத்தைக் காட்ட ஒரு சொந்தம்கூட இல்லாம தனிமரமா ஒரு புள்ளையை விட்டுடறது, அந்தப் புள்ளைக்கு நாம பண்ற அநீதி!'
- ஏப்ரல் 9, 2004 தேதியிட்ட 'அவள் விகடன்’ இதழுக்காக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று வளர்க்கும் பொறுமைசாலி அம்மாக்கள் சிலரைச் சந்தித்தபோது, சென்னையைச் சேர்ந்த ரேவதி லஷ்மிநாராயணன், உறவுகள் தரும் உரம் பற்றி நம்மிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை!

##~## |
ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராத விபத்து ஒன்றில் ரேவதி சிக்க, அவரின் உறவுகள்தான் இன்று மீட்டெடுத்திருக்கிறது ரேவதியின் உயிரை. இன்று ஒரு எல்.கே.ஜி. குழந்தையின் மன, மூளை வளர்ச்சியுடன் இருக்கும் ரேவதிக்கு உலகமாக இருப்பதும்... அவரின் உன்னத உறவுகள்தான்.
ரேவதிக்கு வங்கியில் வேலை. அன்று, வழக்கம்போல தன் டூ வீலரில் ஆபீஸுக்குப் கிளம்பியவர், சைதாப்பேட்டை சப்வே ஒன்றில் விபத்தில் சிக்க... ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலையில் பலத்த அடி. பல லட்சங்களை விழுங்கிய சிகிச்சைக்குப் பிறகு, உயிரை தக்கவைத்து, அவரைத் தேற வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரின் ரத்த சொந்தங்கள்.
ஆவடியில், தன் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் ரேவதியை சந்திக்கச் சென்றபோது, கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தார். ''உன்னைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க. நீ அவங்ககூட சமர்த்தா பேசுவியாம்...'' என்று அவரின் மூத்த மகள் அவரை நம்மிடம் திருப்ப, விநோதமாக, வேதனையாக இருந்தது அந்தச் சூழல்!
''அஞ்சு மாசம் கோமா நிலையில இருந்தா. ஏகப்பட்ட சர்ஜரிகள். கால் எலும்பு ஃப்ராக்சர், சுகர், கிட்னி ஃபெயிலியர், பெட் ஸோர்னு வரிசையா பிரச்னைகள். உச்சகட்டமா... மெமரி லாஸ். எல்லாமே மறந்துடுச்சு அவளுக்கு.''
- ரேவதியின் தாய் சந்திரா அந்தக் கறுப்புப் பக்கங்களை கண்கள் கலங்க திருப்ப, தொடர்ந்த நாட்களைப் பேசினார் ரேவதியின் கணவர் லஷ்மிநாராயணன்...

''ரேவதி எப்பவுமே உறவுகளை உயிரா நினைப்பா. அந்த அன்பைத்தான் அவளுக்கு இப்போ நாங்க எல்லாம் திரும்பச் செலுத்திட்டு இருக்கோம். அவளோட மூணு அக்காக்களும், அண்ணன், தம்பிகளும் ஒருத்தர் மாத்தி ஒருத்தரா கண்ணுக்குள்ள வெச்சு கவனிச்சுக்கறாங்க. பிறந்த குழந்தை தவழறப்பவும், நடக்கறப்பவும் சந்தோஷப்படற மாதிரி அவளோட ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் கண்ணீரால சிரிக்கறாங்க அவளோட அம்மா, அப்பா. என் குழந்தைகள்... பாடம், சுலோகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கறாங்க. எந்த நொடியும் மனசு கோணாம எப்பவும் நிறைஞ்ச புன்னகையோட அவளுக்கு பணிவிடை செய்ற இவங்க எல்லாரோட அன்பும், அக்கறையும்தான் அவளைக் கொஞ்சம் கொஞ்சமா குணமாக்குது'' என்று லஷ்மிநாராயணன் நெஞ்சத்திலிருந்து நெகிழ,
''எங்க எல்லாரையும்விட தன் மனைவிக்கான இவரோட அன்பும், அர்ப்பணிப்பும்தான் அரிது...'' என்று இடைமறித்த ரேவதியின் தந்தை குருமூர்த்தி,
''மூணு பிள்ளைங்களுக்கும், ரேவதிக்கும் தாயுமானவரா இருக்கார் இவர். வாங்கியிருந்த இடம், வீடு கட்ட வெச்சிருந்த பணம்னு கிட்டத்தட்ட 36 லட்சங்களை மனைவிக்காகவே செலவழிச்சிருக்கார். இப்பவும் மாசம் 35,000 செலவாகுது. புரமோஷனை ஏத்துக்கிட்டா வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகணும்கறதுக்காக அதைக்கூட வேணாம்னு சொல்லிட்டு அவர் படற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்ல'' என்று மருமகனுக்குப் புகழ் மாலை கோத்தார்.
''ஒரு வருஷமா அவளுக்கு பேச்சுல ஒரு தெளிவு வந்திருக்கு. கணவர், குழந்தைகளை அடையாளம் கண்டுக்கறா. எழுந்து நடக்கறா. வெளியில போகணும்னு அடம்பிடிக்கிறா. ப்ளஸ் டூ-ல சயின்ஸ் பாடத்துல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவ ரேவதி. இப்போ அவளுக்கு, அவளோட குழந்தைங்க வாரம் தவறாம எல்.கே.ஜி. பாடங் களைச் சொல்லித் தர்றாங்க'' என்று ரேவதியின் தாய் கண்கலங்க, குழந்தைகளின் பிஞ்சுக் குரல்களிலும் தங்கள் அம்மாவுக்கான பிரார்த்தனைகளே நிரம்பியிருக்கின்றன- ''ஆண்டவன் அருளால எங்கம்மா சீக்கிரமே குணமாகிடணும்...'' என்று அந்தப் பிள்ளைகள் சொல்லும்போது, ரேவதி அவர்களை சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
'தெய்வம் மனுஷ ரூபேண!' என்பார்கள். இங்கே அந்த தெய்வங்கள், உறவென்ற பெயரில்... ரேவதியைச் சுற்றி அன்பெனும் மருந்தெடுத்து நிற்கின்றன!
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்