'ஆடை அலங்கார நிபுணர்’ அனுராதா பிஸானி
சென்னை ஃபேஷன் உலகின் தவிர்க்க முடியாத பெயர்... அனுராதா பிஸானி! இன்று சென்னையின் பல பிரபலங்களுக்கும், பிரபல குடும்பங்களுக்கும் ஆஸ்தான டிசைனரான இவர்...

##~## |
தன் அப்பாவின் வங்கி வேலை டிரான்ஸ்ஃபர் உபயத்தால் இந்தியாவின் பல மாநில வாழ்க்கையையும் உள்வாங்கியவர். அதனால், புடவை, தாவணி, சல்வார், சுடிதார்... என்று எந்த ஆடைகளை இவர் வடிவமைத்தாலும், அதில் இன்றைய நாகரிகத்துடன்... பல மாநிலங்களின் கலாசாரங்களையும் இழையோட விடுவது அனுராதாவின் ஸ்பெஷல்!
'டிரெஸ்ஸிங் ரூம்’ டிப்ஸ்களை உங்களிடம் தொகுத்துக் கொடுப்பதற்கு முன், அனுராதா உங்களுடன் கொஞ்சம் பேசுகிறார்...
''தமிழ்நாட்டுப் பெண்களுக்கேயான தனித்துவமான, குடும்பப்பாங்கான, அமைதியான அழகு... இந்தியாவின் மற்ற எந்தப் பிரதேச பெண்களுக்கும் அந்தளவுக்கு இல்லை. சுமாரான அழகு கொண்ட பெண்கள் எல்லாம், தான்தான் உலக அழகி என்பதைப் போல ஆர்ப்பாட்டமாக டிரெஸ் செய்து கொள்ளும்போது... அவர்களிடம் இருக்கும் அழகு மங்கிப் போகிறது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீங்கள் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவையும் தங்க நகைகளையும் அணிந்து கொண்டால்கூட, பந்தாவே இல்லாமல் அமைதியாகவே இருக்கிறீர்கள். அதற்காக, டிரெஸ் விஷயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீங்கள் கற்றுக் கொள்ள எதுவுமே இல்லை என்று அர்த்தமில்லை.

எந்தப் பொது இடங்களுக்குப் போனாலும் நம்மில் பலர் புடவையின் முந்தியை சரிசெய்து கொண்டே இருப்பது ஏன் என்று நீங்கள் யோசித்து உண்டா? புடவையிலிருந்து சுடிதார், சல்வார் கமீஸ் என்று மாறிவிட்டவர்கள்கூட துப்பட்டாவை சரி செய்துகொண்டே இருப்பது ஏன்? பிளவுஸ் அல்லது சுடிதார் பொருத்தமாக இல்லை என்பதுதான் காரணம். அளவு சரியில்லாத ஆடைகளை உடுத்திக் கொள்ளும்போது தன்னம்பிக்கை காணாமல் போய்விடுகிறது.
இன்னொரு பக்கம், ஆடைகளைத் தேர்வு செவதற்கே ஒரு தன்னம்பிக்கை வேண்டும். அழகான ஆடைகளும், 'டிசைனர் வேர்’களும் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே உரிய விஷயமல்ல. திருமணமான பெண்கள், இளம் தாய்மார்கள், நடுத்தர வயதில் இருக்கிறவர்கள் ஏன்... வயதானவர்கள் என்று எல்லோருக்குமே உரித்தான விஷயம்தான். 'இந்த டிரெஸ்ஸை நாம எல்லாம் போட்டா நல்லாவா இருக்கும்..?’ என்று ஏக்கப் பார்வையோடு நிறுத்தாமல், 'இந்த டிரெஸ் எனக்கு நல்லா இருக்கும்!’ என்று, அணியும் அனைத்தும் உடைகளையுமே தன்னம்பிக்கையுடன், திருப்தியுடன் அணிய வேண்டும்.

அந்தத் தன்னம்பிக்கையையும், திருப்தியையும் உங்களுக்குத் தரத்தான் உடல், நிறத்துக்கு ஏற்ப எப்படி டிரெஸ் செய்வது, உயரமானவர்களுக்கு ஏற்ற டிரெஸ் எது, உயரம் குறைவானவர்கள் எப்படி டிரெஸ் செய்ய வேண்டும் என்று துவங்கி, உடல் வாகுக்கு ஏற்ற டிரெஸ், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்ற டிரெஸ், பட்ஜெட்டுக்கு ஏற்ற டிரெஸ்... என்று ஆடைகள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உதாரணத்தோடு பதில் தேட இருக்கிறோம். நீங்கள் எழுதி அனுப்ப இருக்கும் கேள்விகள்தான் இந்தத் தொடரை மேற்கொண்டு நகர்த்த இருக்கிறது என்பதால்... உங்கள் சந்தேகங்களை (தேவைப்பட்டால் எந்த ஆடையைப் பற்றி சந்தேகமோ அந்த ஆடையை உடுத்திக்கொண்டு எடுக்கப்பட்ட முழு உருவப் புகைப்படத்துடன்) எழுதி அனுப்புங்கள்.
ஒரு சகோதரியாக உங்கள் ஒவ்வொருவருடனும் நான் மனம்விட்டு பேச இருக்கிறேன். உங்கள் மனதில் எழும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் உங்களோடு சேர்ந்து பதிலை கண்டுபிடிக்க இருக்கிறேன்!''
- ஜொலிக்கும்...
அனுராதா பற்றி...
குடும்ப டாக்டர் மாதிரி சென்னையில் இருக்கும் பலருக்கும் குடும்ப டிசைனராக இருக்கிறார் வயதுக்கு வந்த இரண்டு பெண்களுக்குத் தாயான அனுராதா. மஞ்சள் நீராட்டு, நலங்கு, திருமணம், வளைக்காப்பு என்று குடும்பத்தில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் அனுராதாவிடம் வந்து ஆடைகளை வடிவமைத்துக் கொண்டு போனால்தான் ஆச்சு என்று வரிசை கட்டி காத்திருப்போர் சென்னையில் அதிகம். அதற்குக் காரணம்... சொந்த மகளுக்கோ சகோதரிக்கோ ஆடைகளை வடிவமைப்பது போல, அக்கறை எடுத்துக் கொள்வதுதான். இத்தனைக்கும் இந்த வித்தைகளை ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்கள் எதிலும் போய் இவர் கற்றுக்கொள்ளவில்லை. தனக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் வீட்டிலிருப்பவர்களுக்கு என்று விளையாட்டாக ஆரம்பித்ததுதான்! |
படங்கள்: கே.ராஜசேகரன்