Published:Updated:

'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்

'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்

ம.பிரியதர்ஷினி

 'பொன்னர் சங்கர்’ வரலாற்றுப் படத்தில் பெண் பாத்திரங்கள் மட்டுமல்ல... ஆண் பாத்திரங்கள் அணிந்து வரும் நகைகளும் அத்தனை அழகு, நேர்த்தியுடன் பாரம்பரியமும், கம்பீரமும் காட்டி அனைவரையும் ஈர்க்கின்றன.

பாராட்டுக்குரிய அந்த மூளைக்குச் சொந்தக்காரர்... ப்ரீத்தி! இவர்... படத்தின் இயக்குநர் தியாகராஜனின் மகள், படத்தின் ஹீரோ பிரசாந்தின் தங்கை!

'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்
##~##

ஃபிலிம் காஸ்ட்யூம் டிசைனர், ஜெம்மாலஜிஸ்ட், பிஸினஸ் உமன் என இவருக்கான அடையாளங்களின் வரிசையில்... இப்படத்தின் மூலம் இப்போது 'ஜூவல்லரி டிசைன’ரும் சேர்கிறது!

ஒரு மதிய வேளையில் சென்னையில் இருக்கும் தன் வீட்டில், ''இதுதான் என் கன்னிப் பேட்டி...'' என்று சிரித்தபடியே வந்தமர்ந்தார் ப்ரீத்தி!

''சில வருஷங்களுக்கு முன்ன தி.நகர்ல ஜுவல்லரி ஷாப்களுக் காக 'பிரசாந்த் கோல்ட் டவர்' கட்டினாங்க அப்பா. அந்த சமயத்துலதான் நகைகள்ல பயன்படுத்தற கற்களைப் பத்தி படிக்கறதுக்காக அமெரிக்காவில இருக்கற 'ஜெம்மாலஜி இன்ஸ்டிடியூட்’க்கு போனேன். கற்களோட இயல்பு, சிறப்பு என்ன, அதுல ஒரிஜினலை எப்படி கண்டுபிடிக்கறது, எப்படி பராமரிக்கறதுனு ஆழமான அறிவியல் படிப்பு அது. அப்புறம் 'ஜுவல்லரிக்கான டிசைனிங்’ கோர்ஸ் படிச்சேன்.

இப்ப 'பிரசாந்த் கோல்ட் டவர்’ல இருக்கற என் ஜெம் ஸ்டூடியோவுல குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் கன்சல்டேஷன் பண்றேன். அந்த டவர்ல இருக்கற அஞ்சு ஃப்ளோர்ல இருக்கிற ஷாப்களுக்குமே நான்தான் மேனேஜிங் அத்தாரிட்டி'' என்பவரின் இந்தப் பின்புலம்தான் 'ஜூவல்லரி டிசைனர்’ அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது!

''ஏற்கெனவே அப்பாவோட 'மன்னவா’, 'ஜெய்’, 'ஷாக்’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனரா, போஸ்ட் புரொடக்ஷன் சைட்லனு வேலை பார்த்த அனுபவம் இருக்கு. 'பொன்னர் சங்கர்’ படத்துக்கான ஜுவல்லரி டிஸைனர் வேலையை அப்பா எங்கிட்ட அப்பா கொடுத்தப்போ சந்தோஷத்தைவிட பொறுப்புதான் அதிகமா தெரிஞ்சுது. ஏன்னா, நகை அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கற படமாச்சே! கிட்டத்தட்ட என்னோட ரெண்டரை வருஷ உழைப்பை இதுக்குக் கொடுத்திருக்கேன்'' என்றவர், அதற்கான தன் மெனக்கெடல்களைப் பேசினார்.

''பொன்னர் - சங்கர் புத்தகத்துலயே நகைகள் பத்தின பல விவரங்கள் இருந்தாலும், அதோட நின்னுடாம பல கோயில்கள், சிற்பங்கள், நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள்னு அலைஞ்சு, தகவல்களைத் திரட்டினேன். பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

பொதுவா... அந்தக் காலத்துல பெண்களோட நகைகள், அவங்க வாழற சமுதாயப் பிரிவை பிரதிபலிக்கற மாதிரி இருந்திருக்கு. நம்ம தென்னிந்திய நகைகள்ல மாங்கா மாலை, நாத ஜடை, வங்கி, ஒட்டியாணம், கால்ல போடுற தண்டை... இதெல்லாம்தான் முக்கிய நகைகளா இருந்திருக்கு. அதைப் பத்தி எல்லாம் முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துல பெண்கள் ஒட்டியாணத்தை எப்பவும் இடுப்போட ஒரு உடை மாதிரி அணிஞ்சிருந்திருக்காங்க. அவங்க போட்டுக்கிட்ட ரவிக்கை நழுவிடாம பிடிக்கத் தான் கையில வங்கி போட்டு இருந்திருக்காங்க. இப்படி அழகுக்காக மட்டுமில்லாம, அவசியத் தேவைக்காகவும் ஆபரணங்களை அணிஞ்சிருக்காங்க நம்ம பூட்டிகள்...'' என்று ரசிக்க ரசிக்கப் பேசியவர்,

'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்

''படத்தைப் பொறுத்தவரைக்கும் காட்சியோட ஒன்றிப்போற நகைகளைத்தான் டிசைன் பண்ணினேன். உதாரணமா, கதை நாயகிகளா வர்ற முத்தாயி, பவளாயிக்கு நகைகள் எப்பவும் கிராண்டா இருக்கணும். ஆனா, செல்வந்தர் வீட்டு மகளா வந்த தாமரை நாச்சியாருக்கு (குஷ்பூ), பல காட்சிகள்ல நகைகளே தேவைப்படல.

சிறப்பு என்னனா... கோரல், மூன் ஸ்டோன், ரூபி, முத்து, ஜிர்கான்னு ஒரிஜினல் ஜெம் ஸ்டோன்களைத்தான் படத்துல பயன்படுத்தினேன். ரிஸ்க்தான். இதனால டிசைனிங் மட்டுமில்லாம, அந்த நகைகளோட பாதுகாப்புக்கும் நான் பொறுப்பேற்க வேண்டியதாச்சு. இப்ப, 'ரொம்ப தீர்க்கமா இருந்துச்சு அந்த நகைகள்’னு எல்லாரும் பாராட்டறப்போ... ஏக சந்தோஷம்! குறிப்பா, 'ம்ம்ம்... படத்துல உன் வேலையை நீ சூப்பரா பண்ணியிருக்கியாம்... எல்லாரும் சொல்றாங்க... நானும்!’னு என் அப்பா சிரிச்சப்போ, அவ்ளோ பெருமையா இருந்துச்சு. இதுக்கான பரிசுதான் அப்பாவோட அடுத்த படமான 'மம்பட்டியான்’ல நான்தான் ஜுவல்லவரி டிசைனர். எல்லா உழைப்புக்கும் இந்த அங்கீகாரம்தானே முதல் முக்கிய ஊதியம்!''

- சின்ன சிரிப்பு உதிர்த்து காற்றில் பறந்த கூந்தலை கைகோதி முடித்தார் ப்ரீத்தி தியாகராஜன்!

படம்: வி.செந்தில்குமார்