Published:Updated:

வலியில் பிறந்த வலிமை !

வலியில் பிறந்த வலிமை !

 ஆர்.ஷஃபி முன்னா

 கைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டில் உலகின் சிறந்த போட்டியாளராவது அருணிமா சின்ஹாவின் கனவு! ஓடும் ரயிலில் சமூக விரோதிகளை எதிர்த்துப் போராடிய அவரை, அந்த அயோக்கியர்கள் ரயிலில் இருந்து தள்ளிவிட, கனவையும், காலையும் பரிதாபமாக இழந்து நிற்கிறார்... உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த விளையாட்டு வீராங்கனை!

வலியில் பிறந்த வலிமை !
##~##

கிராமத்துப் பெண்ணான அருணிமா, தொடர் பயிற்சி மற்றும் முயற்சிகளால் கைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டில் மாநில அளவிலான விளையாட்டு வீராங்கனையாகி, சர்வதேச போட்டிகளுக்கும் தயாரானார். இடையில், நொய்டாவில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) பணிக்கான நேர்முகத் தேர்வுக்காக லக்னோவில் இருந்து ரயிலில் கிளம்பினார். வழியில்தான் அந்தக் கொடூரம்.

பரேலி மாவட்ட மருத்துவமனையில் மயக்கம் தெளிந்திருந்த அருணிமா, ''பெண் பயணிகளைக் கிண்டல் செய்தபடி வந்த மூன்று இளைஞர்கள், அவர்களிடம் தவறாகவும் நடந்து கொண்டனர். என்னையும் சீண்டியவர்கள், எனது தங்கச் செயினையும் பறிக்க முயன்றனர். ரயிலின் அபாயச் சங்கிலியை இழுக்க முயன்றேன். ஆத்திரத்துடன் வெளியே தள்ளிவிட்டனர்.

இருட்டில் ஒரு தண்டவாளத்தில் கிடந்த நான் கண் விழித்தபோது, அதில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. எழுந்து தப்பிவிடலாம் என்ற எனது முயற்சி தோல்வியில் முடிய, கால்களை நசுக்கிவிட்டது அந்த ரயில். மீண்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை, ஊர் மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, இடது முழங்கால் வரை ஆபரேஷன் செய்து வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது...'' - நீர் வற்றிய கண்களுடன் சொன்ன அருணிமா...

''சில லட்ச ரூபாய் நஷ்டஈடும், சி.ஐ.எஸ்.எஃப் வேலையும் அரசு கொடுத்திருக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஷூக்களை இனி அணிய முடியாது. எனினும், அரசு தரும் பணத்தை வைத்து, கிராமப்புற பெண்களுக்காக இலவச விளையாட்டு பயிற்சி நிலையத்தை அமைப்பேன். செயற்கை காலைப் பொறுத்திக் கொண்டு, என்னால் முடியாமல் போனதை அவர்கள் மூலமாக செய்து காட்டுவேன்!'' - வலி அருணிமா வுக்கு இன்னும் வலிமை தந்திருக்கிறது!

 படம் : முகம்மது காலீத் கான்