Published:Updated:

சட்டம் உன் கையில் !

வீழ்வேன் என நினைத்தாயோ..?

சுதா ராமலிங்கம்
ஓவியம் : பாரதிராஜா

ஒரு பாந்தமான திருமண பந்தத்தில் ஒருவர் மட்டும் நேசித்துக் கொண்டே இருக்க... அந்த நேசிக்கும் இதயத்தை சுயநலத்துக்காக ஈவு இரக்கம் இன்றி மிதித்தால்..? சுருண்டு போவதுதான் சாதாரண மனிதர்களின் இயல்பு. ஆனால், அந்தப் பிரச்னையுடன் நேருக்கு நேர் மோதி, அந்தக் காயம் ருசித்து, உயிர் உரம் பெற்று 'இந்தப் பிரச்னைகள், என்னை என்ன செய்து விடமுடியும்?’ என இறுமாப்புடன் நிமிர்ந்து நிற்பவர்கள் வெகுசிலர்தான்! அவர்களுள் ஒருவர்தான் லோகநாயகி!

சட்டம் உன் கையில் !
##~##

லோகநாயகி, தன் மனம் நிறைய இல்லறக் கனவுகள் சுமந்து, உலகநம்பியுடன் திருமண வாழ்க்கையில் இணைந்தவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என பெரும் தலைவர்கள் எல்லாம் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த, தான் ஒரு எம்.பி-யின் மனைவி என்ற பெருமிதத்தில் மிதந்தவருக்கு, வாழ்க்கை மிக அழகானதாக தெரிந்தது.

அந்த இனிய மயக்கத்தில், அம்மா வீட்டிலிருந்து சீதனமாகக் கொண்டு வந்த நகைகள், பணம் அத்தனையையும் தன்  கணவரின் கையில் ஒப்படைத்தார். ஆனால், அவர் கணவருக்கோ இன்னொரு 'காதலும்' இருக்க,இவரிடம் கொஞ்சமும் காதலும் கருணையும் இல்லாமல் நடந்து கொண்டதுடன், அதீத வெறுப்பையும் தீயாகக் கொட்டினார்.

'அவர் பெருமைவாய்ந்த அரசியல் வாதி. நாம் கொஞ்சம் அமைதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று இதயத்தை இறுக்கிக் கொண்டார் லோகநாயகி. தன்மானத்தைக் கீறி, ரத்தம் வரவைத்த வார்த்தைகள்... தவறாமல் விழுந்த அடி, உதைகள் அத்தனையையும் சகித்துக் கொண்டு, அந்த வாழ்க்கையை வாழ்ந் தார் என்பதை விடவும், சிலுவையாகச் சுமந்தார்.

திடீரென ஒரு நாள் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் உலகநம்பி.

சட்டம் உன் கையில் !

நிலைகுலைந்து கலங்கினாலும் வேறு வழியில்லாமல் விவாகரத்தைப் பெற்றுக் கொண்ட லோகநாயகி, ஜீவனாம்ச வழக்கைத் தொடர்ந்தார். அதை பிச்சை யாகக் கேட்கவில்லை, சட்டப்படியும் தார்மீகரீதியாகவும் பெண்ணின் உரிமை என்பதற்காகவே கேட்டார். ஆனால், தான் சம்பாதித்த பணத்தை தன்னிட மிருந்து பிரிந்து போகும் மனைவிக்கு கொடுக்கக்கூடாது என்பது ஆண்களின் கோர எண்ணம். அது, அவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் சிந்திக்க வைக்கும். உலகநம்பி, உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். என்ன வென்று..?

'என் முன்னாள் மனைவி நடத்தை சரியில்லாதவர். அவர் கோர்ட் வளாகத் தில் நடந்து செல்லும் விதத்திலேயே அவருக்கு பால்வினை நோய் இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. அப்படியான ஒருவருக்கு நான் ஏன் ஜீவனாம்சம் தரவேண்டும்?’ என்று!

ஒரு பெண்ணை, அவள் தன்னை எதிர்த்துப் போரிடாமல் தடுக்கக் கூடிய அற்பத் தந்திரம் அவளுடைய நடத்தையை விமர்சிப்பதுதான் என்கிற தரம் தாழ்ந்த சிந்தனை எல்லா காலங்களிலும் உண்டு.

உலகநம்பி எதிர்பார்த்தது, 'இதைக் கேள்விப்பட்டவுடன் லோகநாயகி முடங்கிப் போய்விடுவாள்’ என்பதுதான். ஆனால், நத்தையாகச் சுருங்கிவிடாமல், முன்னிலும் அதிகமாகப் போர்க்குணத் துடன் பதில் மனு தாக்கல் செய்தார். 'நான் மருத்துவ பரிசோதனைக்குத் தயார்’ என்று அவர் கூற... மொத்த கோர்ட்டும் ஸ்தம்பித்தது. இதுதான் பெண்மையின் சக்தி!

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஒருவரின் மேல் பழி சுமத்தி, அவரை அந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விடாமல் செய்வதற்கான வழிமுறையே இம்மாதிரியான வீண்பழி குற்றச் சாட்டுகள்... என பாஞ்சாபை சேர்ந்த ஆர்.பி.கபூர் என்பவரின் வழக்கின் மூலம் சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தீர்ப்பளித்து விட்டது’ என்று சரியான காரணத்தைச் சொல்லி, லோகநாயகிக்கு எதிரான பழிபாவம் நிறைந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

அற்ப பழிக்கு அஞ்சாமல், தனி மனுஷியாக அரசியல் பலம், ஆள்பலம், பணபலம் நிறைந்த மனிதரை, மனபலத்தை மட்டுமே தேக்கி வைத்து, இடைவிடாமல் கோர்ட்டுக்கு நடையாய் நடந்து... ஒரு நாள் வென்றார் லோகநாயகி. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்... 'தர்மம் வெல்லும்’!

ஜீவனாம்சத்துக்காக பெரும் போராட்டம் நடத்தி அதை வாங்கிய லோகநாயகி, இப்போது அந்த பணத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. '' 'ஜீவனாம்சம் தரக்கூடாது’ என்ற மமதையில் அலைந்தவரிடம் இது எனக்கான உரிமை என்பதை நிலைநாட்டுவதே என் லட்சியம். அதையே நான் செய்தேன்'' என்கிறார் அமைதியாக!

இரு கால்களும் ஊனமான நிலையிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் அநீதிக்கு எதிராக சட்டத்தின் மூலம் உக்கிரமாகக் குரல் கொடுத்து தலை நிமிர்ந்த கல்பனாவின் யுத்தம், அடுத்த இதழில்!

- ஆர்டர்... ஆர்டர்...