Published:Updated:

கேபிள் கலாட்டா!

'ஐய்'கொடுத்த ஐஸ்க்ரீமும்... அவதிப்பட்ட 'சித்தி'யும் !

 ரிமோட் ரீட்டா

 சன் டி.வி 'மாமா மாப்ளே’ சீரியல் செம்ம ஹிட்! குட்டீஸெல்லாம், ஸ்கூல் ஹோம் வொர்க்கைகூட தூக்கி ஓரம்கட்டிட்டு, டி.வி. முன்னால உக்கார்ந்து நான்-ஸ்டாப்பா சிரிச்சுட்டிருக்காங்க. அப்படிப்பட்ட 'மாமா மாப்ளே’ ஜாலி டீமைப் பார்க்க வளசரவாக்கம், எம்.வி.எம். ஹவுஸுக்கு விட்டேன் ஸ்கூட்டியை!

கல்பனா ஈஸி சேர்ல சாய்ஞ்சபடி உட்கார்ந்திருக்க, ''கொஞ்சம் சாப்பிடு சித்தி... சரியாயிடும்''னு ஐஸ்வர்யா அவங்களை கவனிக்க, ''உன்னாலதான் கண்டதைச் சாப்பிட்டு இப்படி எங்கள பயமுறுத்திட்டா... தள்ளிப்போ...''னு அவரை மோகன்ராம் முறைக்க... ''எப்ப சார் ஷூட்டிங் முடியும்?''னு அங்கிருந்தவங்ககிட்ட கேட்டேன்.

கேபிள் கலாட்டா!

''ஐயோ ரீட்டா... இது ஷூட்டிங் இல்ல! நிஜமாவே கல்பனா அம்மாவுக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்ல. எல்லாம் ஐஸ்வர்யா தந்த ஐஸ்க்ரீம்னால வந்த பாச ஜுரம். அதான் எல்லாரும் துக்கம் விசாரிச்சிட்டிருக்கோம்''னு சொல்லி லகலக சிரிப்பை எடுத்துவிட்டாரு பாலாஜி!

ஆரம்பமாச்சு 'மாமா... மாப்ளே...’ அசெம்ப்ளி! அதே உருட்டின கண்களோட வந்த பாண்டியராஜன் சார்தான் போட்டாரு ஃபர்ஸ்ட் பிட்... ''சினிமா டு சீரியல்... எனக்கு இது ரொம்ப புது அனுபவம் ரீட்டா. சினிமாவுல ஸீன் முடிஞ்சதும், மூட்டை முடிச்சை எடுத்துட்டு தனியா போயிடுவோம். ஆனா, இந்த சீரியல்ல நடிக்கும்போது ஏதோ உறவுகளோட வீட்டுக்குள்ள இருக்கற மாதிரியே இருக்கு. அதுவும் என் மாமனாரா வர்ற மோகன்ராம் சார் எத்தனை பெரிய சீனியர் ஆர்டிஸ்ட்... ஆரம்பத்துல அவரை 'வாடா போடா’னு திட்டவே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, அவரே நிறைய புது வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து, 'கூச்சப்படாம திட்டு’னு சொல்வாரு''னு பாண்டியராஜன் சொல்லிட்டு இருக்கும்போதே...

''ரொம்ப ஸீன் போடாதடா''னு இடையில் சரடுவிட்டார் மோகன்ராம்.

சட்டுனு டிராக் மாறின பாண்டியராஜன், ''ஒரு தடவை நான் ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு சின்ன பையன், 'அங்கிள் நீங்க மாப்பிள்ளைதானே?’னு கேட்டான். கூட இருந்த அவனோட ஃப்ரெண்ட்., 'இல்லடா இவரு... அந்த வில்லனா வர்ற மாப்பிள்ளை’னு சொன்னான். எங்க சீரியலோட 'ரீச்’சை நினைச்சு எனக்கு சந்தோஷமா, ஆச்சர்யமா இருந்தது''னு சொன்னவர்,

''இந்த பாலாஜி இருக்கானே... என் கூடவும் ஃப்ரெண்டா நடிக்கறான், என் பையன் கூடவும் ஃப்ரெண்டா நடிக்கறான். என்ன அநியாயம் பாரு ரீட்டா''னு பாண்டியராஜன் பாலாஜியை முறைக்க,

''அந்தளவுக்கு நான் இளமையா இருக்கேன்னு அர்த்தம்''னு காலரைத் தூக்கி விட்டாரு பாலாஜி!

''எங்க டீம்ல பாருங்க... யாருக்குமே வயசாகல. எல்லாருமே இளமையாதான் இருக்கோம். காரணம்... காமெடி!''னு வெடியா சிரிச்ச பாண்டியராஜனை, ''போதும் போதும்... பெண்களை கொஞ்சம் பேச விடறீங்களா...''னு ஓவர்டேக் பண்ணினாங்க ஐஸ்வர்யா!

''யு நோ ஒன் திங் ரீட்டா... எங்க எல்லாருக்கும் தினமும் பாண்டிய ராஜன் சார் வீட்டுல இருந்துதான் சாப்பாடு வரும். ஸ்ஸ்சூப்பரா இருக்கும்''னு சப்புக் கொட்டினவங்க, ''ஆக்சுவலி நானும்கூட நல்லா சமைப் பேன்''னு சொன்னதுதான் தாமதம்... எல்லாரும் பாய்ஞ்சு வந்து அவங்களை பஞ்சர் ஆக்கிட்டாங்க.

''ஆமா... நேத்திக்கு 'நான் செஞ்சது... ஐஸ்க்ரீம்...’னு சொல்லி ஐஸ்கிரீம் மாதிரி ஏதோ ஒண்ணை இவ கொண்டு வந்தா... அதை சாப்பிட்டுத்தான் எனக்கு ஜலதோஷம் பிடிச்சிடுச்சு... ஹச்...''னு கல்பனா தும்ம, ''உங்களுக்காவது ஜலதோஷம்தான். எனக்கு நேத்துலயிருந்து 102 டிகிரிக்கு ஜுரமே வந்துடுச்சு''னு பாலாஜி வர, ''போங்கப்பா... எல்லார்கூடயும் டூக்கா''னு விட்டாங்க ஐஸ்வர்யா!

அத்தனையையும் ரசிச்சுட்டு இருந்த டைரக்டர் எஸ்.என். சக்திவேல், ''காமெடியையும் மக்கள் விரும்புவாங்கனு நிரூபிக்கத்தான் தொடர்ந்து காமெடி சீரியலா எடுக்கிறேன் ரீட்டா. 'சின்ன பாப்பா பெரிய பாப்பா’, 'அல்லிராஜ்யம்’ எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. 'அடுத்து என்ன..?’னு யோசிச்சப்போ, க்ளிக் ஆனதுதான் 'மாமா, மாப்பிள்ளை’! நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கறதால, 'திங்கள் முதல் வெள்ளி வரை' ஒளிபரப்பறதுக்கான யோசனையும் இருக்கு!''னு சொல்லி, ரெடி, டேக்னு களத்துல இறங்கினாரு சக்திவேல்.

நான் பேக்-அப் சொல்லிட்டு பேக் டு ஆபீஸ்!

கேபிள் கலாட்டா!
மக்கள் டி.வி.யி-ல 'செல்லப் பிராணிகள்’, 'யாருக்கு ஆயிரம்’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கற ஹரிஹரன், பெட் அனிமல்ஸோட பெட்!  ''ஒருமுறை 'செல்லப் பிராணிகள்’ நிகழ்ச்சிக்காக திருவான்மியூர்ல ஒரு வீட்டுல போய் நாய் பற்றி பேட்டி எடுத்தேன். ரொம்ப நேரம் அதை கொஞ்சிட்டு, பேசிட்டு வந்தேன். அன்னிக்கு சாயங்காலமே அந்த புரோகிராம் ஒளிபரப்பாக... அந்த நாய், டி.வி-யில என்னைப் பார்த்ததும் டி.வி-யைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து குரைச்சதாம். அந்த ஐந்தறிவு ஜீவனோட பாசத்தைப் பாருங்க! இதை அந்த வீட்டுக்காரங்க போன்ல சொன்னப்போ, ரொம்பவே மெல்ட் ஆகிட்டேன்!''னு சொல்ற ஹரிஹரனுக்கு பத்திரிகையாளர் ஆகறதுதான் லட்சியம்!

 

''பி.எஸ்சி. விஷ§வல் கம்யூனிகேஷன், எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன் ரீட்டா. பர்காதத், அர்னாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போல பிராட்காஸ்ட் ஜர்னலிஸ்ட் ஆகணும்னு!''னு ரொம்பவே நேசிச்சு சொன்னார்.

வெல்கம்!

 வாசகிகள் விமர்சனம்

 உத்வேகம் ஊட்டுங்கள்!

 

''ஜெயா டி.வி-யின் 'திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில், தமிழ் தாத்தா உ.வே.சா, தமிழின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாக அலைந்து, பண்டைய இலக்கிய தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்ததைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்டார் இயக்குநர் ஜெகந்நாதன். கூடவே, உ.வே.சா பற்றி தான் ஒரு படம் எடுத்ததாகக் கூறி, அதிலிருந்து இரண்டொரு காட்சிகளையும் ஒளிபரப்பச் செய்தார். பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. அந்தப் படப்பிரதியை ஜெயா டி.வி. முழுக்க ஒளிப்பரப்பினால் பலருக்கும் உத்வேகமாக இருக்குமே!'' என்று ஆர்வத்துடன் சொல்கிறார் பெங்களூரில் இருந்து எஸ்.சரோஜினி.

அபத்தமான நிகழ்ச்சி!

''டிஸ்கவரி சேனலை, பெரியவர் களைவிட, சிறியவர்கள்தான் மிக நேசித்துப் பார்க்கிறார்கள்! வலை தளத்தில் வலை வீசித்தேடினாலும் அகப்படாத அற்புதத் தகவல்களை அளித்து, அவர்களின் அறிவை அகண்டமாக்கிக் கொண்டிருக்கிறது அந்தச் சேனல். ஆனால், 'நல் விருந்து உபசரிப்பில் காக்கை எச்சம் விழுந்ததைப் போல்'... ஞாயிறு நண்பகல் அந்தச் சேனல் ஒளிபரப்பும் 'உடலுறவு விளக்கம்’ பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சிறியவர்கள் பார்க்கும் சேனலில் இப்படியரு விளக்க நிகழ்ச்சி தேவையா?'' என்று கேள்வி எழுப்புகிறார் சென்னையில் இருந்து இ.டி.ஹேமமாலினி.

 

 படம்: சொ.பாலசுப்ரமணியன்