உங்களை மாற்றும் சூப்பர் மேக்கப் !
உங்களை மாற்றும் சூப்பர் மேக்கப் !
'அழகு கலை அரசி’ வீணா குமரவேல்
'உங்கள் முகம்... என்ன வகையான முகம்? ஆயிலி ஸ்கின்னா... ட்ரை ஸ்கின்னா... அல்லது அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் இருக்கும் காம்பினேஷன் ஸ்கின்னா... அல்லது நார்மல் ஸ்கின்னா... என சருமத்திலிருந்து ஆரம்பிக்கலாம்’ என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.

அதற்கு முன்பாக... அழகு என்பது பற்றி 'அழகுக் கலையின் அத்தாரிட்டி’ என்று போற்றப்படும் சிண்டி கிராஃபோர்ட் (Cindy Crawford) என்ன சொல்கிறார் என்பதை கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
ஒரே வாரத்தில் உங்களை அழகாக்குவதாக ஒரு சில விளம்பரங்கள் கூவி அழைத்திருக்கும். இந்த மாதிரி மந்திரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்வதை முழுமையாக பின்பற்றினால்... சில மணி நேரங்களிலேயே அழகாகிவிட முடியும். 'அது என்ன க்ரீம்? ஒருவேளை 'ஓம் ரீம் க்ரீம்’ என்று ஏதாவது மந்திரமாக இருக்குமோ..?’ அது மந்திரமல்ல. தந்திரம். அந்த தந்திரத்தை உலகுக்கு பலர் சொல்லியிருந்தாலும்... பெண்களுக்குப் புரியும் வண்ணம் அவர்களிடம் உணர்வுபூர்வமாகச் சொன்னவர்தான் சிண்டி கிராஃபோர்ட்!
##~## |
மாடலிங், நடிப்பு என்று பல துறைகளிலும் பரிமளித்த அமெரிக்கப் பெண்ணான அவர், அழகு பற்றி சொன்ன ஒவ்வொரு கருத்துமே மேக்-அப் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு மூலாதார மந்திரம்... இல்லை தந்திரம். அடுத்த நொடியே உங்களை அழகாக மாற்ற சிண்டி சொன்ன தந்திரம் இதுதான்...

''என் முகத்தில் ஒரு மச்சம் இருந்தது. அது என்னை அசிங்கமாக்குவதாக நினைத்தேன். கண்ணாடிக்கு எதிரே போனால், அந்த மச்சம்தான் முதலாவதாக என் கண்ணில் படும். சினிமாவில் நடிக்க ஸ்கிரீன் டெஸ்ட் வரை போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தபோது, இந்த மச்சத்தால் அந்த வாய்ப்பு நழுவிப் போய்விடுமோ என்று பயந்தேன். ஆனல், 'உனக்கு அழகே உதட்டின் மீது இருக்கும் இந்த மச்சம்தான்’ என்றார் டைரக்டர். அவருடைய வார்த்தைகள் என் கண்களைத் திறந்தன. முகத்தில் மச்சம் இருப்பது அழகு என்பதற்காக பலர் செயற்கை யாக புள்ளிகள் வைத்துக் கொள்வதை அதன் பிறகுதான் கவனித்தேன். பல்வரிசை அழகாக இருப்பது ஓர் அழகு என்றால், தெத்துப்பல் இருப்பதும் ஒரு வகையில் அழகுதான். கண்களின் கறுமை நிறம் சற்றே மாறி இருந்தால் பூனைக் கண் என்று கிண்டல் செய்கிறவர்களும் உண்டு. ஆனால், அதுவே கிறங் கடிக்கும் கண்களாகவும் பலருக்கும் தெரியும்.

அதனால், உங்கள் முகத்தில் உங்களுக்கு எது அழகில்லை என்று நினைக்கிறீர்களோ... அதுதான் உங்களுக்கு அழகு என்பதை உணருங்கள். அடுத்த முறை கண்ணாடி பார்க்கும்போது, உங்களின் ப்ளஸ் என்று எதை நினைக்கிறீர்களோ அதை ரசித்துப் பாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் பாசிட்டிவான அம்சங்களை நீங்களை அங்கீகரிக்கத் துவங்கினால், மற்ற அம்சங்களும் உங்களுக்கு மெள்ள மெள்ள பிடித்துப் போகும். உதாரணத்துக்கு... உங்கள் கண்கள்தான் உங்கள் முகத்தில் இருக்கும் அழகான அவயம் என்று நீங்கள் எண்ணினால், கண்களின் அழகை கூட்டிக்காட்ட முயற்சி எடுங்கள். முகத்தின் அழகைக் கெடுக்கும் விஷயங்கள் என்று நீங்கள் எதை நினைத்தாலும் கொஞ்ச நேரம் அதை மறந்துவிடுங்கள். அழகு நம் கையில்!''
என்ன... சிண்டியின் வார்த்தைகள் உங்கள் சிந்தனையைச் சீண்டியதா? நீங்கள் அழகு என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். உங்களின் அழகை நீங்கள் ரசிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்களுக்கு உங்கள் அழகு புலப்படும். 'ஐயோ... நாம அழகா இல்லையே...’ என்று தாழ்வு மனப்பான்மையில் நீங்கள் துவண்டு போனால், உங்கள் முகம் வாடிவிடும். இந்த வாட்டத்தை எந்த க்ரீம் கொண்டும் போக்க முடியாது!
அந்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு காத்திருங்கள்... உங்களின் சருமம் என்ன வகை, அதற்கு என்ன சிகிச்சை என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்!
மிளிரும்...
படங்கள்: கே.ராஜசேகரன்
மாடல்: ஹாஷ்னி