நினைவுகளே...நினைவுகளே...
நாச்சியாள்
அருணா சாய்ராம்
''என் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும், சந்தோஷப்படுத்தும் ஒரு அற்புத நிழற்படம் இது!'' - இனிய நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் அந்த அரிய புகைப்படத்தை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் கர்னாடக இசைப் பாடகி அருணா சாய்ராம்... 'நினைவுகளே... நினைவுகளே...’ பகுதிக்காக!

##~## |
'இந்த போட்டோ என் கனவை நனவாக்கிய பொக்கிஷம்! என் கல்யாணத்துக்கு எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மா வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணினதை வாழ்க்கையின் பெரும் பாக்கியமா நினைக்கிறேன். 'எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை?'னு நினைச்சு நினைச்சு பூரிச்சுப் போவேன்!
எம்.எஸ். அம்மா திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஊஞ்சல் பாட்டான 'டோலயாம்’-ஐ மனம் உருகிப் பாடறதை சின்ன வயசுல கேட்டிருக்கேன். அந்த ஊஞ்சல் பாட்டைக் கேக்கற ஒரு பிரம்மச்சாரிக்குகூட கல்யாண ஆசை தானா வந்துடும். அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம், 'நம்ம கலயாணத்துல ஊஞ்சல் பாட்டு பாடுறப்போ... எம்.எஸ். அம்மா பாடினா எப்படி இருக்கும்..?!’னு ஒரு பேராசை எனக்குள்ள எட்டிப் பார்க்கும். கூடவே, 'அருணா, இது கொஞ்சம் ஓவரா இல்லியா..?’னு என்னைப் பார்த்து என் மனசு சிரிக்கும்.
'ஒரு விஷயத்தை நினைச்சுட்டே இருந்தோம்னா... அது நடந்துடும்'னு உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட் சொன்னது, என் வாழ்க்கையிலயும் உண்மையாயிடுச்சு. என் கல்யாணத்துக்கு அம்மா வந்து ஆசீர்வாதம் செஞ்சுட்டுப் போயிடுவாங்கனுதான் நெனச்சிருந்தோம். ஆனா, யாரும் எதிர்பார்க்காதப்போ.. 'டோலயாம்’ ஊஞ்சல் பாட்டை அம்மாவே பாடினப்ப... அந்தக் கலை தெய்வம் சரஸ்வதியே நேர்ல வந்து ஆசீர்வாதம் பண்ணின மாதிரி இருந்துச்சு!
எங்க அம்மா, அப்பா, என் மாமா, மாமி, சொந்தக்காரங்க எல்லாருக்கும் சந்தோஷ அதிர்ச்சி. அம்மா புகழ் உச்சியில இருந்த நேரம் அது. எவ்வளவு பெரிய லெஜண்ட் அவங்க! ரொம்ப சாதாரணமா கூட்டத்தோட நின்னு அவங்க பாடினது எத்தனை பெரிய எளிமை..?!
பாட்டெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் எடுத்த போட்டோ இது. என்னைப் பாருங்களேன்... அந்த ஆச்சர்யமான, இன்பமான அதிர்ச்சியைத் தாங்க முடியாம... நம்ப முடியாம நின்னுட்டு இருக்கேன்!'' - அருணா சாய்ராமின் கண்களில் மீண்டும் அந்த அருமையான பொழுதின் நினைவு அழகாக நீண்டு கொண்டிருந்தது!