Published:Updated:

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

பி.ஆரோக்கியவேல்

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

சமீபத்தில் சென்னையில் தொடர்ச்சி யாக மூன்று நாட்கள் நடைபெற்ற 'சென்னை இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடல்களில், பளிச்சென்று ஒரு பெண் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தனைக்கும் மற்ற மாடல்களைப் போல அவர் விலையுயர்ந்த மேற்கத்திய ஆடைகளை அணிந்து வரவில்லை. அடுத்த வீட்டில் நாம் பார்க்கும் பெண்ணைப் போல சாதாரண புடவையை, சாதாரணமாகவே அணிந்து வந்தார். ஆர்ப்பாட்டமான அழகுப் புயல்களுக்கு இடையே அவரின் அமைதியான அழகு, நிறைய கைதட்டல் களை வாங்கியது. அவர்... பிந்தியா! சர்வதேச மாடலிங் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் சென்னை பெண்!

சில ஆண்டுகளுக்கு முன் நல்லி, குமரன், சென்னை சில்க்ஸ் என்று தோன்றி நமக் கெல்லாம் பரிச்சயமான அதே பெண்தான்!

''என்னாச்சு நடுவுல ரொம்ப நாள் காணாம போயிட்டீங்களே?’' என்றால், ''ஆமா... நான் எம்.ஓ.பி-யில படிச்சுட்டு, 2003 வருஷம் மிஸ்.சென்னையா தேர் வானப்போ, பல பத்திரிகைகள் போட்டோ வைப் போட்டு தமிழ்நாட்டுக்கு அறிமுகப் படுத்துச்சு. அப்புறம் எம்.பி.ஏ. படிக்கறதுக் காக அமெரிக்கா போயிட்டேன்.

##~##

கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணாவே இருந்தாலும், படிப்புச் செலவுக்காகக்கூட அப்பா, அம்மாகிட்ட பணம் எதிர்பார்க்க மாட்டாங்க அமெரிக்காவுல. படிக்கும் போதே பகுதிநேர வேலை பார்ப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச வேலை மாடலிங்கறதால, அதையே செய்ய ஆரம்பிச்சேன்'' எனும் பிந்தியா, அந்த அந்நிய தேசத்தில் மாடலிங் துறையில் சந்தித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''பொதுவா, அமெரிக்காவுல இருக்கற மாடல்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவங்களுக்கு எல்லாம் சின்ன வயசுல இருந்தே இந்த இண்டஸ்ட்ரி பற்றி பெரிய எக்ஸ்போஸர் இருக்கும். பல ஃபேஷன் ஷோக்களை நேராவே பார்த்து வளர்ந்திருப்பாங்க. அவங்ககூட போட்டி போட்டு எப்படி மாடலிங் துறையில வளர்றதுனு ஆரம்பத்துல எனக்கு தயக்கம் இருந்தது'' என்று நிறுத்தியவர்,

''ஆனா, ஒரு ஃபேஷன் ஷோனா, வெறும் வெள்ளைக்காரப் பெண்களை மட்டுமே நடக்க விட்டா கலர்ஃபுல்லா இருக்காது. கறுப்பர் இனத்தை சேர்ந்த பெண்கள், ஆசிய மற்றும் தெற்காசிய பெண்களும் கலந்துக்கும் போதுதான் பூர்ணத்துவமான அழகு கிடைக்கும்னு அமெரிக்க டிசைனர்கள், கொரியோகிராஃபர்கள் உறுதியா நம்புறாங்க. அதுதான் அந்த நாட்டோட ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் எனக்கும் ஒரு ஸீட் கிடைக்க வெச்சது. இது, இமயமலை ஏறுற மாதிரி ரொம்ப கஷ்டமான விஷயமாவும் இல்ல... பரங்கிமலையில ஏறுற மாதிரி சுலபமாவும் இல்ல!''

- பேச்சும் அழகு பிந்தியாவுக்கு.

''ஒரேயடியா நாம தலையெடுக்கறதுக்கும் விட்டுட மாட்டாங்க. அதேமாதிரி நம்மள தள்ளியே வைக்கவும் விரும்ப மாட்டாங்க. வெள்ளைக்கார பெண்களை வெச்சு நாலு படம் எடுத்தா... நம்மள வெச்சு ரெண்டாவது எடுப்பாங்க. அப்படியே உள்ள நுழைஞ்சுதான் நூற்றுக்கணக்கான ஃபேஷன் ஷோக்கள்ல இடம் பிடிச்சேன். இந்தியாவுல இருந்து போனதாலேயே அழகு பத்தின நம்மளோட அறிவை அவங்க குறைவாத்தான் எடை போட்டாங்க. அவங்க அளவுக்கு நாம அழகை ரசிக்கறவங்களா இருக்க முடியாதுங்கறது... அவங்கள்ல பலரோட அசைக்க முடியாத எண்ணம்.  கொஞ்சம் கொஞ்சமா அவங்க மத்தியில பேசி, அந்த எண்ணத்தை எல்லாம் நான் உடைச்சேன். இந்தியாவுல அழகோட பாரம்பரியம் என்னங்கறத புரிய வெச்சேன். புராண, இதிகாசத்துல இருந்தெல்லாம் உதாரணங்களை எடுத்துப் போட்டதும்... அசந்து போனவங்க, அதுக்குப் பிறகு என்கிட்ட ஒருவிதமான மரியாதையோடத்தான் நடந்துக்கறாங்க'' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தும் பிந்தியா, தற்போது மாடலிங்குக்காக சென்னை, மும்பை மற்றும் அமெரிக்கா என்று பறந்து கொண்டே இருக்கிறார்.

உலக அளவில் கலக்கும் அழகியிடம் அவருடைய அழகின் ரகசியம் பற்றி கேட்காமல் இருக்க முடியுமா?

''தூக்கம் வரும்போது தூங்கு. பசிக்கும்போது சாப்பிடு!'' - ஜென் துறவி மாதிரி பேசிய பிந்தியா,

''நமக்கு எந்த அளவுக்கு உணவு தேவையோ, அந்த அளவு மட்டுமே சாப்பிடணும்!'' என்று அதில் ஒரு கரெக்ஷனும் போடுகிறார்!

படம்: கே.ராஜசேகரன்