தனிமை...வெறுமை... தீர்வுதான் என்ன ?
வாசகிகள் பக்கம்
ஓவியங்கள்: எஸ்.சிவபாலன்

ஆனந்தம் விளை யாடும் வீடாக இருந்த எங்கள் இல்லம், இன்று வெறுமையின் கூடாரமாக இருக்கிறது. இந்த நான்கு சுவர்களுக்குள் தனிமை யுடன் போரிட்டுக் கொண்டு இருக்கும் பெண்மணி நான்!
கிராமத்தில் அனை வரும் கண் போடும்படி தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், மச்சான்கள், கொழுந்தனார்கள், நாத்த னார், குழந்தைகள் பட்டா ளம் என்று கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்த வீடு எங்க ளுடையது. எப்போதும் திருவிழாக் கூட்டம் போல கலகலவென இருக்கும். மூத்த மருமகளாக அனை வருக்கும் சமைத்துப் போட்டதில் ஒரு நாளும் சலிப்பே தட்டியதில்லை எனக்கு... சந்தோஷம்தான் கூடும்!
குழந்தைகள் வளர்ந்து, அவர்களின் படிப்பு, வேலை காரணமாக ஒவ் வொரு குடும்பமும் வேறு வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்துவிட, வீட்டின் கூட்டமும் களையும் கொஞ் சம் கொஞ்சமாகக் குறைந் தது. எங்கள் மகனுடன் நாங்களும் சென்றிருக்கலாம். ஆனால், 'மூத்த மகன்' என்ற பொறுப்பால் என் கணவரும், நானும் எங்கள் வீட்டு முதியவர்களுடன் கிராமத்திலேயே தங்க வேண்டியதானது. காலப்போக்கில் தாத்தா, பாட்டி, மாமனார், என் கணவர் என்று ஒவ்வொருவராக காலமாக, இப்போது நானும் மாமியாரும் மட்டுமே அத்தனை பெரிய வீட்டில் இருக்கிறோம் - வெறுமையுடன்.
என் ஒரே மகன், மும்பையில் செட்டிலாகியிருக்கிறான். அவன் மனைவியும் வேலைக்குப் போகிறாள். மூத்த பேரன் நான்காம் வகுப்பு படிக்க, பேத்தி கிரெச்சில்! ''நீங்களும் எங்ககூட வந்திருங்கம்மா...'' என்று அழைக்கிறான் மகன். எனக்கும் கொள்ளை ஆசைதான். ஆனால், மாமியார்?
என் மாமியார், எனக்கு இன்னொரு அம்மா. இத்தனை வருடங்களாக எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு அந்தளவுக்கு அன்பால் பலப்பட்டது. அதனால், அந்த ஜீவனை விட்டுப்போக மனசில்லை எனக்கு. அவரையும் அழைத்துச் செல்ல நினைத் தால், ''கடைசி காலத்துல இந்த வீட்டை யும், ஊரையும் விட்டு என்னால வெளி யேற முடியாது... நீ போம்மா'' என்கிறார். என் ஓரகத்திகளுக்கும் இங்கு வந்து தங்க விருப்பமும், சூழ்நிலையும் இல்லை.
இப்போது இந்த வீடு தரும் தனிமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக்கு. எத்தனையோ பேருக்கு சமைத்துப் போட்ட இந்தக் கைகளால்... என் பேரன், பேத்திக்கு வேண்டியதை செய்து கொடுக்க முடியாமல் சபிக்கப் பட்டிருக்கும் என் நிலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேசமயம், என் வயோதிக மாமியாரை நிர்க்கதியாக விட்டுச் செல்லவும் மனதில்லை.
என்ன செய்வது நான்..? - ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 249-ன் சுருக்கம்
''என்னையும், மகனையும் நிராதரவாக விட்டுவிட்டு, கணவர் எங்கோ ஓடிவிட்டார். வறுமை, அவமானங்களையும் தாண்டி, நகைகளையெல்லாம் விற்று, ஒரு சிறுதொழில் செய்தேன். என் மகனுக்கு அழகு, அறிவு, பண்பு, படிப்பு என எல்லாம் இருந்தும், அவன் அப்பாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவனை மணமுடிக்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக ஒரு பெண்ணை மணமுடித்து, அவர்களுக்குள் சரிப்பட்டு வராததால், சீக்கிரத்திலேயே விவாகரத்தானது. சில ஆண்டுகள் உருண்ட பிறகு, விவாகரத்தான வேறு ஒரு பெண்ணை அவனுக்கு மணம் முடித்தேன். அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்பது போகப் போகத் தெரிய, மீண்டும் விவாகரத்து. வாழ்வில் பிடிப்பே இல்லாமல் வேலைக்கு சென்று வரும் என் மகனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க நினைத்தாலும், 'பட்டதெல்லாம் போதும்’ என்று வெடிக்கிறான். என் வாழ்க்கைதான் சாபமாகிவிட்டது. பிள்ளைக்காவது நல்வாழ்க்கை அமைய வேண்டாமா? வழி சொல்லுங்கள் தோழிகளே!''
என் டைரி 249-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
ஆசைகளைப் புறக்கணியுங்கள்!
வாழ்க்கை என்ற ரதம் ஓட, அன்புள்ளங்கள் கொண்ட அச்சாணி முக்கியம். ஆனால், உங்கள் மகன் விஷயத்தில் அச்சாணியே முறிந்துவிட்டது. இனி புதிதாக மற்றொரு அச்சாணியைப் பொருத்தி, உடைந்த ரதத்தை புதுப்பிக்க முயலாதீர்கள். திருமணம் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். பூதக் கண்ணாடியால் பார்த்தால் பிரச்னை பெரிதாகத் தான் தெரியும். ஆரம்பம் என்று இருந்தால் முடிவு என்பது உண்டு. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ஒரு குழந்தையை தத்து எடுத்து அந்த குழந்தையின் வளர்ப்பில் உங்களை மனதை செலுத்துங்கள். உங்களுக்கு 'பாட்டி’ என்ற பதவியும், உங்கள் மகனுக்கு 'தந்தை’ என்ற அந்தஸ்தும் கிடைக்கும். பெற்றால்தான் பிள்ளையா என்ன? நீங்களும், உங்கள் மகனும் கலந்து பேசி, நல்ல முடிவு எடுத்து, இருவரின் மனதிலும் மகிழ்ச்சியை நிரப்புங்கள். ஆசைகளைப் புறக்கணிக்கும் சக்தி மனதுக்கு வந்துவிட்டால்... ஏக்கம் என்பதே இருக்காது!
- அகிலா பஞ்சாபகேசன், பெங்களூரு
சோலைவனமாக வாழ்த்துக்கள்!

துன்பப் பறவைகள், நம் தலைக்கு மேல் பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் தலையில் அவை கூடுகட்டுவதைத் தடுக்க முடியும்தானே! கடந்தகால வாழ்க்கையின் இருண்ட பகுதியிலிருந்து உங்கள் மகனை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுடையது. மூன்றாவதாக திருமணம் செய்து வைப்பதில் தவறில்லை. அதேசமயம், அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை முதலில் உங்கள் மகனுக்கு ஏற்படுத்துங்கள்.
எல்லா காயங்களையும் ஆற்றக் கூடிய சக்தி காலத் துக்கு உண்டு. தம்பதிகள் அதிகமாக வலம் வரும் திருமண நிகழ்ச்சிகள், கோயில், சினிமா, பார்க், பீச், கடைத்தெரு, ஷாப்பிங், சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று, உலக வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்துங்கள். நகைச்சுவை விஷயங்களைச் சொல்லி, மகனின் மனதை மகிழ்ச்சிப்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் மகனின் மனம் மாறும். நல்ல மருமகளும் அமைவாள். பாலைவனமாக இருந்த இல்லற வாழ்க்கை சோலை வனமாக பூத்துக் குலுங்கும்!
- ஜி.கே.எஸ்.பரிமளாமூர்த்தி, கோபிசெட்டிபாளையம்
இதுவும் கடந்து போகும்!
'பட்டகாலிலேயே படும். கெட்ட குடியே கெடும்' என்பார்கள். வாழ்வில் எதுவுமே நிலையானது அல்ல! 'இதுவும் கடந்து போகும்’ என்பதே நிதர்சனம். நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை மாற்றுங்கள். புதிய மனிதர்களிடம் பழகுவதன் மூலம் உங்களின் கவலைகள் மறையும். நிறைய ஆன்மிக புத்தகங்களைத் தேடிப் படித்து தியானம் செய்யுங்கள். மகனையும் படிக்க சொல்லுங்கள். இது உங்கள் இருவருக்குள்ளும் தெளிவான மனநிலையை ஏற்படுத்தும்.
முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வாருங்கள். பலருடைய வாழ்க்கை கதைகளைக் கேட்கும்போது, அவர்களுக்கு ஏற்பட்ட வலியையும், வேதனையையும் நேரடியாக உணரமுடியும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை வெறும் தூசு என்பதும் புரியும்.
உங்கள் மகன் மனம் மாறி, வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டு, நல்ல மருமகள் அமைந்து, உங்கள் அகத்திலும் முகத்திலும் புன்னகை பூக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- கேத்தரின் சந்திரசேகர், சேலம்