ஸ்பெஷல் 1
Published:Updated:

'அச்சு முறுக்கு' தந்த அசத்தல் வெற்றி !

செல்வகுமாரியின்

எஸ்.கே.நிலா

'அச்சு முறுக்கு' தந்த  அசத்தல் வெற்றி !

பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்’ ரொம்ப பிரபலம். வீட்டுச் சொந்தங்களுக்கு செய்ததுபோல 'ஹோம்லி டச்' பலகாரங்களைத் தயாரிப்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு! தற்போது திருச்சி, சென்னை என மாநகரங்களிலும் கிளைகளைப் பரப்பி வரும் இவர்களின் தொழில் முயற்சிக்கான வித்து, செல்வகுமாரியின் கைகளில் ஒளிந்திருக்கிறது!

பத்து வருடங்களுக்கு முன் ஒரே ஒருவரின் உதவியுடன், வீட்டு அடுப்பங்கரையில் ஆரம்பித்த தொழில் முயற்சியை, இன்று நூறு பெண்கள் உட்பட முந்நூறுக்கும் மேலான தொழிலாளர்களை இயக்குமளவுக்கு பிரமாண்டமாக வளர்த்தெடுத்திருக்கிறார் செல்வகுமாரி. குக்கிராமம் ஒன்றில் பிறந்து, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, விவசாயியின் மனைவியாக வாழ்க்கையைத் துவங்கியவர், இவ்வளவையும் சாதித்தது எப்படி?

'கழனிவாசல் கிராமம்தான் பூர்விகம். பதினெட்டு வயசானவொடன கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. கணவர் கணேசன், டிராக்டர் வாங்கி ஓட்ட, வயிற்றுப்பாட்டுக்கு வழி கிடைச்சது'' என்று சொல்லும் செல்வ குமாரியை, அவருடைய கணவரின் சுபாவங்கள் இரண்டுதான், இன்று வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கு முடுக்கிவிட்டிருக்கிறது.

##~##

''நாக்கு ருசிக்க நல்லா சாப்பிடக்கூடியவர் என் வீட்டுக்காரர். மூக்கு நுனி கோபக்காரரும்கூட! அதுவே யார் கீழயும் நீடிச்சு வேலை செய்யவிடாம விரட்ட, சொந்தமா தொழில் செஞ்சாதான் கரையேற முடியும்ங்கறது எனக்குப் புரிஞ்சுது. அப்பதான், என்னோட கைப்பக்குவத்தையே தொழிலாக்கற வகையில அவர் யோசனை சொல்ல... உற்சாகமா தயாரானேன். பெரம்பலூர்ல புதுசா பேருந்து நிலையம் உருவாக, அங்க ஒரு கடையைப் பிடிச்சு 'அஸ்வின் ரெஸ்டாரன்ட்’னு உணவகம் ஆரம்பிச்சோம். சமையலை நான் கவனிச்சுக்க... அவர் டீ மாஸ்டரானார். பேருந்து நிலையம் செயல்படறதுல சிக்கல் வரவே... கடையை மூட வேண்டியதாயிடுச்சு'' எனும் செல்வகுமாரி, அடுத்த தொழில் முயற்சியை வீட்டு சமைய லறையிலேயே சத்தமில்லாது ஆரம்பித்திருக்கிறார். அது, தன் கணவர் வழக்கமாக ருசித்து சாப்பிடும் வீட்டுப் பலகாரங் களின் தயாரிப்பு.

'அச்சு முறுக்கு' தந்த  அசத்தல் வெற்றி !

கைக் குழந்தைகள் நிஷா, அஸ்வின் இருவரையும் தூங்க வைத்துவிட்டு, தன் தாயாரை உதவிக்கு வைத்துக் கொண்டு அச்சு முறுக்கு செய்ய ஆரம்பித் தார். பாக்கெட்டில் அடைக்கப் பட்ட அச்சுமுறுக்கு உள்ளூரில் தெரிந்த சில கடைகளில் முதலில் அறிமுகமானது. அப்புறம் ஸ்வீட் ஸ்டால்களில் அதிகமாக கேட்டு வாங்கினார்கள்.

'நல்லா போயிட்டிருந்த அச்சு முறுக்கு திடீர்னு சில கடைகள்ல இருந்து ரிட்டர்ன் ஆச்சு. செல்வகுமாரியோட கைப்பக்குவத்திலேயும், என் னோட ருசி ரசனையிலயும் எந்தக் குறையும் இல்லாம தயாரான பலகாரங்கள், ஏன் ரிட்டர்ன் ஆச்சுங்கற தவிப்பு எங்களைத் தூக்கமில்லாம செஞ்சுச்சு. கடைசியில அதுக்கு விடையைக் கண்டுபிடிச் சப்போ, சந்தோஷ ஷாக்.

ஸ்வீட் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எங்களோட தயாரிப்புகளை மட்டுமே விரும்பி வாங்கினதால, கடையின் சொந்த தயாரிப்புகள் தேங்க ஆரம்பிச்சிருக்கு. இதுல வெறுப்பானவங்க, ரிட்டர்ன் படலத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஏமாந்த வாடிக்கையாளர் களோ... அங்கே இங்கேனு விசாரிச்சு எங்க வீட்டுக்கே வந்துட்டாங்க. அப்பத்தான் பிஸினஸோட முதல் அனுபவப் பாடத்தை கத்துக்கிட்டோம். தரமான சுவைதான் உண்மையான முதலீடுங்கிறதுதான் அந்த பாடம்'' விரியும் விழிகளில் மனைவியை ஆதுரமாக பார்த்தபடி பெருமை பொங்கியபடி சொன்னார் கணேசன்.

தொடர்ந்த செல்வகுமாரி, ''கடைகள் புறக்கணிச்ச எங்க தயாரிப்புகளுக்குக் கல்யாண ஆர்டர்கள் கைகொடுத்தது. நல்லா யோசிச்சு திட்டமிட்டு பழைய பஸ் ஸ்டாண்ட்ல 'அஸ்வின் ஸ்நாக்ஸ்’னு ஒரு கடையை ஆரம்பிச்சோம். செயற்கையான நிறம், சுவையோட ஏதோதோ இனிப்புகளை ருசிச்ச மக்களுக்கு... முறுக்கு வகைகள், எள் அடை, தேன்குழல்னு நம்ம பாரம்பரிய பலகாரங்களைத் தந்த உத்தி நல்லாவே எடுபட்டது. வாடிக்கையாளர்களோட விருப்பத்துக்காக மற்ற ஸ்வீட்ஸ், கார வகைகளையும் கொண்டு வந்தோம். மறக்காம எங்களோட தனித்துவ 'டச்' அதுல இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டோம். தொடர்ந்து பேக்கரி தயாரிப்புகளையும் கொண்டு வந்தோம். பிரத்யேக விளம்பரமின்றி வாடிக்கையாளர்கள் உபகாரத்துல மற்ற ஊர்கள்லயும் பிரபலமாச்சு. சப் ஏஜன்ட்டுகளை நியமிச்சு, 'அஸ்வின் ஸ்நாக்ஸ்’ சுவை பரப்பினோம்' என்ற செல்வகுமாரி, அடுத்து செய்தவை, பெரும்பாலானவர்கள் தங்கள் தொழிலில் செய்ய மறந்து சறுக்கல்களைச் சந்திக்க காரணமாக இருப்பவை.

'இந்த நிமிஷம் வரைக்கும் புதுசு புதுசா தயாரிப்புகள்ல வெரைட்டி மட்டுமில்ல, அதைத் தர்றதுலேயும் தனித்துவம் காட்டுறோம். மாவு ரகங்களை மெஷின்ல அரைச்சா பதம் கெடும்னு, இடிச்சு தர்ற மெஷின்களை ஸ்பெஷலா வாங்கினோம். உணவுத் தயாரிப்புகளுக்கு முழுக்கவும் நல்ல நீருக்காக சுத்திகரிப்பு பிளான்ட் ஒண்ணை ஆரம்பிச்சோம். ஒரு முறைக்கு மேல எண்ணெயைப் பயன்படுத்தறதைத் தவிர்த்தோம். விளைவு, நாங்க இயக்கி வந்த தொழில் இப்போ எங்களை இயக்குது. திருச்சி, சென்னைனு மாநகரங்கள்ல கிளைகளை ஆரம்பிச்சிருக்கோம்'

- இடையிடையே பணியாளர்களுக்கு பொறுப்பாக பதில் தந்தவாறே வெற்றி இன்னிங்ஸை பகிர்ந்து கொண்ட செல்வகுமாரி, முதன் முதலாக 'அஸ்வின் ரெஸ்டாரன்ட்’ ஆரம்பித்து கையை சுட்டுக்கொண்ட... அதே புதிய பஸ் ஸ்டாண்ட்டில் முன்னைவிட நூறு மடங்கு பிரமாண்டமாக, இரண்டு தளங்களில் அதே பெயரில் உணவகத்தை சில தினங்கள் முன்பு துவக்கி, பழைய கணக்கை நேர் செய்திருக்கிறார்.

'பெரிய பெரிய வெற்றிகளை திறந்துவிடத்தான், அன்னிக்கு அந்த தோல்வி நிகழ்ந்திருக்குனு இன்னிக்கு தீர்மானமா நம்பறோம்!'

- தீர்க்கமாகப் பேசும் சமான்ய மனுஷி செல்வகுமாரியின் வார்த்தைகளில், சர்வதேச பிஸினஸ் குருவாக இருப்பவர்களின் அளவுக்கு சத்தியவாக்கு மிளிர்கிறது!