திருவப்பூர் அம்மாவே !
கரு.முத்து

புராண தெய்வங்களைவிட, இன்னும் அதிகமாக மக்களிடம் உரிமை எடுத்துப் பழகும் தெய்வம், மாரியம்மன். 'ஆத்தா மகமாயி...’ என்று தன் அடி சேரும் பக்தர்களுக்கெல்லாம் தாயாக இருந்து தயவுபுரிகிறாள் அன்னை திருவப்பூர் முத்துமாரி! புதுக்கோட்டையை ஆண்ட மன்னனிடமே பல திருவிளையாடல்களைக் காட்டி, அவனை தன் பக்தனாக ஆக்கிக் கொண்ட இந்த அன்னையை தமிழகம் முழுவதிலிருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய ஆதர்ச தெய்வமாக வழிபடுகிறார்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர், தென்னங்குடி, எலந்திரப்பட்டி, வைத்தூர், இலஞ்சாவூர், கொன்னையூர், நார்த்தாமலை, தென்னலூர் ஆகிய எட்டு ஊர்களிலும் முத்துமாரியம்மன் புகழோடு கோயில் கொண்டு விளங்கு கிறாள். இவற்றில் மிகவும் பழமை வாய்ந்தது திருவப்பூர் கோயில். இங்குதான் முதலில் பூச்சொரிதல் விழா நடைபெறு கிறது. அதற்குப் பிறகே மற்ற ஏழு ஊர் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தவிர, பூச்சொரி தலின்போது கூடும் கூட்டம் லட்சக்கணக்கில் இருக்கும்.
பலரும் இப்படி இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட திருவப்பூர் மாரியின் வரலாறு தான் என்ன?
திருவப்பூரில் வாழ்ந்த முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் (கண்ணப்ப நாயனார் குலத்தைச் சேர்ந்த வர்கள்), வேட்டைக்குப் போன போது, அவர்கள் மூலம்தான் வெளித்தோன்ற வேண்டும் என்று விருப்புக்
##~## |
கொண்டிருந்த அன்னை முத்துமாரி, ஒரு உடும்பாக வேடம் எடுத்து அவர்கள் முன் தோன்றினாள். எல்லோரும் உடும்பை விரட்ட, போக்குக் காட்டிய அன்னை, ஒரு புதரில் மறைந்து, பின் கல் விக்கிரகமாக, கண்கள் கூசும் உருவத்தினளாக காட்சியளித் தாள். அவளை தலைமேல் தூக்கி எடுத்து வந்துவைத்து, பசுந்தழைகளால் கூடாரம் அமைத்தனர் அந்த மக்கள். அந்த இடம்தான் இப்போது அன்னை கோயில் கொண்டு இருக்கும் இடம்.
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்துக்கு இந்த அன்னை இஷ்ட தெய்வம். ஆனால், 'எனது எல்லையிலேயே இனி இந்த அம்மன் இருக்கக்கூடாது’ என்று மன்னரே உத்தரவு போடும் ஒரு கொடுமையான திருப்பமும் உண்டாயிற்று 1883-ல்! அரண்மனையின் ஒரே ஆண் வாரிசு, அம்மை நோய் கண்டு இறந்து போனான். 'இவ்வளவு நம்பிக்கை வைத்து வணங்கியும் அம்மன் நம் வாரிசை காப்பாற்றவில்லையே' என்ற கோபத்தில்தான் அப்படி உத்தரவிட்டார் மன்னர். தவித்த வேட அடியார்கள், அன்னையைத் தூக்கிக் கொண்டு போய் அடர்ந்த காட்டில் வைத்தனர்.
அன்று இரவே மன்னனின் கனவில் சாந்த சொரூபியாக, குங்கும பொட்டிட்டு, மஞ்சள் உடையுடுத்தி, வேப்பிலை கையில் கொண்டு மன்னனின் மகனுடன் அவனுக்கு காட்சி தந்தாள் அன்னை. ''உன் மகனை என் மகனாக நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். வருந்தாதே. கோபம் குறைத்து என் பழைய இடத்தில் என்னை அமர்த்தி வழிபடு. உன்னையும் உன் நாட்டு மக்களையும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்!'' என்று உத்தரவிட்டாள்.

மனம் மகிழ்ந்த மன்னவன், திரும்பவும் அன்னையைக் கொண்டு வர உத்தரவிட்டான். அன்றிலிருந்து அதே இடத்தில் அமர்ந்து, புதுக்கோட்டை மக்களை கண் இமைபோல் காத்து வருகிறாள் அன்னை. அவள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடம்... 'காட்டுமாரியம்மன் கோயில்’ என்று மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.
அன்பர்கள் திருப்பணியால் அழகுற கட்டப்பட்டிருக்கும் திருவப்பூர் ஆலயத்தில் கிழக்கு முகமாக அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறாள் அன்னை. நான்கு கைகளில் திரிசூலம், கத்தி, அட்சயபாத்திரம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி வலதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.
அப்படியே மெய்மறந்து அவளை பார்த்துக் கொண்டேயிருந்தார் சென்னையில் இருந்து வந்திருந்த சுபத்ரா. ''எங்க அம்மா பொறந்தது இந்த ஊர்தான். அதனால, இந்தக் கோயிலும் எனக்குத் தாய்வீடுதான். நல்ல கணவனை எனக்குக் கொடுத்த இந்தத் தாய், நாலு பிள்ளைகளையும் குறைவில்லாம கொடுத்தா. இப்போ எங்களுக்கு சில பிரச்னைகள் வந்திருக்கு. வழக்கம்போல 'தீர்த்து வை ஆத்தா’னு அவகிட்ட சரணடைய வந்திருக்கேன். இனி அவ பார்த் துக்குவா!'' என்று அம்மனின் மேல் தனக்குள்ள உரிமையையும் நம்பிக்கையையும் ஒரு சேர சொன்னார்.

இப்படி ஆங்காங்கே அமர்ந்து மணிக்கணக்கில் அம்மாவின் நினைவை மனதில் உருவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதிலும் அம்மாவுக்கு பிடித்த மஞ்சள் ஆடையோடு வருகிறவர்கள் அதிகம்.
தாலிபாக்கியம் நிலைக்க வேண்டும்; திருமணம் ஆக வேண்டும்; குழந்தைப்பேறு வேண்டும் என்றெல்லாம் உரிமையோடு மன்றாடிக் கேட்கிறார்கள். அவர்களின் கண்ணீர் குரலை, கருணையோடு நிறைவேற்றித் தருகிறாள் அன்னை. அதற்குப் பிரதிபலனாக தாலி, பொட்டு, புடவை என்று சமர்ப்பணம் செய்கிறார்கள் பெண்கள். இப்படி கணக்கின்றி கோயிலில் சேரும் இந்தப் பொருட்களே சொல்லுகின்றன முத்துமாரியின் அருள்கருனையை.
வயலில் விளைச்சல் பெருக அதில் ஒரு பகுதியை அம்மனுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் விவசாயிகள். நோயுற்ற கால்நடைகளைக் குணப்படுத்த வேண்டிக்கொள்ளும் குடியானவர்கள்... குணமானதும் பாலோ, கோழியோ, ஆடோ கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

அம்மை நோய் தீர வேண்டுகிறவர்கள்... அது தீர்ந்ததும் உப்பு, வெல்லம் வாங்கி வந்து கோயிலில் செலுத்துகிறார்கள். தங்கள் கோழி இட்ட முதல் முட்டையைக்கூட அம்மனிடம் செலுத்துகிறார்கள். இதிலிருந்தே, அம்மனிடம் மக்கள் வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொள்ளலாம்.
''என்ன வேண்டினாலும் நடத்தித் தருவாள் இந்த வேப்பிலைக்காரி. பௌர்ணமி இரவில் இங்கு தங்கிச் சென்றால் ஆத்தா மனமகிழ்ந்து அவர்கள் கேட்டதைக் கொடுக்கிறாள். உடல்நலம், காரியசித்தி என்று எல்லாம் தருவாள் எங்கள் அன்னை திருவப்பூர் முத்துமாரி. அம்மை நோய் கண்டவர்களுக்கு இவளின் அபிஷேக தீர்த்தமே அருமருந்தாகிறது!'' என்கிறார் ஆலய மூத்த குருக்களான குஞ்சப்ப குருக்கள்.
மகத்தான சக்தி கொண்டவள் மகமாயி. அவளை மனதில் இருத்தினால் முடியும் காரியங்கள் ஜெயமாகி!
- சக்தி வருவாள்...
படங்கள்: கே.குணசீலன்