ஸ்பெஷல் 1
Published:Updated:

'நாங்களும் ஓட்டுவோம்ல !'

'நாங்களும் ஓட்டுவோம்ல !'

ஆர்.ஷஃபி முன்னா

 காற்றைக் கிழிக்கும் 'கடகட’ இன்ஜின் சத்தம், ஆயில் கருகி வெளியேறும் கரும்புகை இவற்றோடு பார்ப்பதற்கு பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கும் அந்த டிராக்டரில் அமர்ந்தபடி, அந்த நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்... 16 வயது இளம்பெண் பாரதிதேவி!

'நாங்களும் ஓட்டுவோம்ல !'
##~##

வயல்களில் டிராக்டர் மூலம் உழவு செய்வது என்பது ஆண்களுக்கே சவாலான விஷயம். கரடு முரடான நிலத்தில் டிராக்டரை உருட்டும்போது, கவிழ்வதற்குக்கூட வாய்ப்புகள் உண்டு. ஆனால், பழக்கப்பட்ட டிரைவரைப் போல் சளைக்காமல் கியரை மாற்றி, முன்னும் பின்னுமாக டிராக்டரை ஓட்டும் இந்தப் பெண்ணைப் பார்க்க, அத்தனை வியப்பாக இருக்கிறது! உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா அருகிலுள்ள மனோகர்பூர் கிராமத்தில்தான் இந்தக் காட்சி!

''சமீபத்தில் 'மகேந்திரா அண்ட் மகேந்திரா’ நிறுவனத்தின் சார்பில், பெண்களுக்காக இங்கே டிராக்டர் ஓட்டும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றதன் பலன் இது. ''ஆரம்பத்தில் டிராக்டரை பார்க்கவே பயமாக இருந்தது. பழகியபின், அது அத்தனை சுவாரஸ்யமாகிவிட்டது. அப்பா, மாமா, சித்தப்பா, அண்ணன் என ஆண்கள் மட்டுமேதான் இதுவரை டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தனர். பெண்கள் எல்லாம் வாய்க்கால் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. இப்போது பாருங்கள்... அவர்கள் எல்லாம் அங்கு ஓரமாக நின்று எங்களை வேடிக்கை பார்ப்பதை!''

- அத்தனை பெருமை பத்தாம் வகுப்பு மாணவியான பாரதிதேவியின் கண்களில்!

'நாங்களும் ஓட்டுவோம்ல !'

''எங்கள் கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். வயல் வேலைகளில் என்னதான் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் நின்றாலும், டிராக்டர் மூலம் உழவு செய்வது மட்டும் ஆண்களுக்கான அதிகாரபூர்வ வேலையாகவே இருந்தது. இந்தப் பயிற்சி மூலம் ஆண்களை எதிர்பார்க்காமல் நாங்களே நிலங்களை உழத் தயாராக இருக்கிறோம். படிப்பை முடித்தால், கையிலே தொழில் இருக்கிறது. எங்களுடன் சேர்த்து மொத்தம் 16 பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மற்ற கிராமத்துப் பெண்களுக்கு, நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம்'' என ஆர்வமுடன் பேசும் சங்கீதா லாலும், பத்தாம் வகுப்பு மாணவிதான்!

''முறையாக கிளட்சை அழுத்தி கியரை போட்டால், பூப்போல் நகர்கிறது வண்டி! இதை ஓட்டுவது இவ்வளவு எளிதாக இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இனி, எங்கள் நிலத்தை உழவு செய்ய நானும் உதவுவேன்!'' எனப் பூரிப்படைகிறார் சங்கீதா லால்.

இந்தப் பெண்களுக்கு பயிற்சிஅளித்த மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் ஆக்ரா கிளையின் நிர்வாகி திலீப்சிங், ''இந்த பயிற்சி முகாம், இக்கிராமப் பெண்களுக்கு தந்திருக்கும் நம்பிக்கை பெரிது. இதன் வெற்றியால், இந்த பயிற்சித் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றவர்,

''பெண்கள் டிராக்டரைக் கைப்பற்றியிருப்பதால், இம்மாநிலத்தின் விளைநிலங்கள் எல்லாம்... இனி, முன்னிலும் நேர்த்தியாக உழப்படவிருக்கின்றன பாருங்கள்!'' என்றார் உற்சாகத்துடன்!

 படங்கள்: விஷால் கண்டல்வால்