ஸ்பெஷல் 1
Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150
ஓவியங்கள்: ஹரன்

'எனக்கு இட்லி பூ வேணும்!’

குட்டீஸ் குறும்பு !

என் தங்கையின் மகளுக்கு நான்கு வயது. அன்று காலை கிச்சனுக்கு வந்து, ''பசிக்குது... எனக்கு இட்லி பூ கொடுங்க...'' என்று கேட்க, நானும் பூ போல இட்லி செய்து ஆசையுடன் தட்டில் வைத்துக் கொடுத்தேன். பார்த்தவள் முகம் மாறி, ''இது இல்ல... நேத்து நைட் எனக்கு கொடுத்தீங்கள்ல... வெள்ளை கலர்ல இருந்துச்சே... அந்த இட்லி பூ...'' என்று எனக்குப் புரிய வைக்கும் பரிதவிப்புடன் விளக்கிச் சொன்னாள். முதல் நாள் செய்த இடியாப்பம் நினைவுக்கு வர, அதற்குத்தான் தன் மழலை மொழியில் 'இட்லி பூ’ என்று பெயர் வைத்திருக்கிறாள் என்பது புரிய, மலர்ந்து சிரித்தோம் நாங்கள் அனைவரும்!

- இந்திராணி தங்கவேல், மும்பை

எம்.பி.ஏ-வுக்கு தோன்றாத ஐடியா!

குட்டீஸ் குறும்பு !
##~##

என் சகோதரிக்கு இரண்டு மகன்கள். மூத்தவனுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது. அன்று இருவரையும் அவசரமாக பள்ளிக்கு கிளப்ப, பாத்ரூமில் ஒரு பெரிய வாளியில் சுடுநீர் கலந்து, இருவரையும் சென்று குளித்து வரச்சொன்னோம். சரியாக புரிந்துகொள்ளாமல், தனக்குத் தான் தண்ணீர் ஊற்றியிருக்கிறார்கள் என்று எண்ணி தான் மட்டும் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான் மூத்தவன். நேரம் போதாது என்பதால் கதவைத் தட்டினோம். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. சிறியவன், ''ஒரு ஐடியா!'' என்று சொல்லி, பாத்ரூம் லைட் ஸ்விட்சை மாற்றி மாற்றி ஆன், ஆஃப் செய்ய, பெரியவன் 'என்னவோ குழப்பம்...’ என்று உணர்ந்து கதவைத் திறந்தான்!

எம்.பி.ஏ. படித்த எனக்குத் தோன்றாத யோசனையை, ஐந்தாம் வகுப்பு சுட்டி செயல்படுத்தியதை வியந்து மகிழ்ந்தோம்!

- டி.எஸ், சென்னை-106