ஸ்பெஷல் 1
Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

கருவாகும்போதே...உருவாகும் அறிவு !

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

வளர்மதியும் மதிவதனியும் அக்கா - தங்கை. இருவருக்கும் ஒரே நாளில் திருமணம்; இரண்டு வார இடைவெளியில் பிரசவம். இருவருக் கும் பெண் குழந்தை. இருவரின் குழந்தைகளும் தங்களின் அம்மம்மா வீட்டில் ஆறு மாதம் வரை வளர்ந்தன. அப்போது அந்த இரு குழந்தைகளுக்கும் அங்கு ஒரே மாதிரியான அன்பான கவனிப்பு. ஆறு மாதம் கழித்து அவரவர் புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டனர்.

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
##~##

இப்போது இருவரின் குழந்தைகளும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தன் குழந்தையை நினைத்து மதிவதனிக்கு ஏக வருத்தம். 'வளர்மதியின் குழந்தை உடுமலைப் பேட்டை 'சைனிக்’ ஸ்கூலில் படிக்கிறாள். அதனால் அவளுக்கு நீச்சல், குதிரையேற்றம் என பல கலைகள் கைக்குள் கட்டுபட்டு இருக்கின்றன. ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவளாக இருக்கிறாள். இங்கிலீஷ், மேத்ஸ், சயின்ஸ் என எல்லா பாடங்களிலும் கில்லாடியாக இருக்கிறாள். ஆனால், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் நம் குழந்தை அவளைப் போல் அல்லாது ஆவரேஜ் மாணவியாகத்தானே இருக்கிறாள்...’ என்பதுதான் மொத்த வருத்தமும்.

மதிவதனி மட்டும் அல்ல, பெரும்பாலான அம்மாக்கள் தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தோடு அடுத்த குழந்தையின் புத்திசாலித் தனத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக் கொள்வதை முக்கியமாக கடைப்பிடிக்கிறார்கள்.

புத்திசாலித்தனத்துக்கு என்று தனி ஜீன்கள் எதுவும் உண்டா? உடம்பில் இருக்கும் பல கோடி ஜீன்களில் ஏதோ சில ஜீன்கள் அதற்குக் காரணமாகின்றன. ஆனால், அந்த ஜீன்கள் ஒட்டுமொத்த அறிவின் கூர்மையையும் தீர்மானிப்பது இல்லை. பின்..?

குழந்தை கருவில் வளரும்போதே, அதன் புத்திசாலித்தனத்தை தீர்மானிக் கும் சூழல்கள் பல. குழந்தை வயிற்றில் இருக்கும்போது உங்கள் மனநிலை சந்தோஷமானதாகவும் உற்சாகமான தாகவும் பாஸிட்டிவான சிந்தனையு டனும் இருப்பது மிக முக்கியம். இது குழந்தையின் புத்திக்கூர்மையைத் தீர்மானிக்கும் காரணங்களில் மிக முக்கியமானது. வீட்டில் மாமியாருடன், நாத்தனா ருடன் சண்டை போட்டுவிட்டு, நாள் முழுவதும் அதை மனதில் தேக்கி வைத்து, சரியான சத்துள்ள உணவைச் சாப்பிடாமல் புலம்பிக் கொண்டிருந்தால்... கண்டிப்பாக அது குழந்தைக்கு பாதிப்பை உண்டு பண்ணும்.

வளர்மதியின் குழந்தை இப்போது நல்ல பள்ளியில் படிப்பது மட்டுமல்ல... கர்ப்பக் காலத்தில் இருந்தே அவர் உடல், மனதளவில் தன்னையும் தன் சிசுவையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட விதமும்தான் அவர் குழந்தையின் புத்திக் கூர்மைக்குக் காரணம்.  

டாக்டரின் அறிவுரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவது... 'குழந்தை, வயித்துல நல்லா இருக்கானு ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுவோம்...’ என்று அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சுகள் கருவைத் தொடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதில் உங்கள் குழந்தையின் புத்திக்கூர்மைக்கான கூறுகள் அடங்கியிருக்கின்றன அன்புள்ள அம்மாக்களே!

கர்ப்பக் காலத்தில், 'தண்ணியால தொற்றுநோய்’, 'சாப்பாட்டால தொற்றுநோய்’ என்று எந்த 'இன்ஃபெக்ஷனு’ம் அண்டாமல் உங்களை காத்துக் கொள்வது முக்கியம். 'பாத்ரூம்ல தெரியாம வழுக்கி விழுந்துட்டேன்...’ என்று கருவில் குழந்தையை சுமந்துகொண்டு காயங்கள் உண்டாக்கிக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

கர்ப்பிணி மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சிகரெட்டை ஊது ஊது என்று ஊதினால், அதுவும் குழந்தையின் புத்திசாலித் தனத்தைக் கிள்ளி எறியும். நாகரிகத்தின் பெயரால், 'கொஞ்சம் பீர் குடித்துப் பார்க்கிறேன்’, 'வைன் அடிக்கிறேன்’ என்று கர்ப்பிணிகள் ஆல்கஹாலை அண்டினால், அது பேராபத்து!

குறிப்பாக, கரு உருவான 3-5 மாதங்களில் இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்தெல்லாம் குழந்தையைக் காப்பது, அதன் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். ஏனென்றால், 3-5 மாதங்களில்தான் குழந்தையின் மூளை உருவாவதற்கான ஆயிரம் ஆயிரமான செல்கள் உருவாகின்றன. அந்த செல்களை இணைக்கும் லட்சக்கணக்கான நரம்பிழைகளும் உருவாகின்றன. அதனால்தான் 'எண் சாண் உடம்புக்கு... சிரசே பிரதானம்' என்கிறோம். எனவே, அந்தக் காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருந்து சிசுவின் ஆரோக்கியத்தைப் பேணுவதுதான் நீங்கள் குழந்தைக்குத் தரும் பெரும் சொத்து!

சரி, எச்சரிக்கையோடு இருந்து அழகான குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டீர்கள். அது மட்டுமே போதுமா... அந்தக் குழந்தை பண்பான குழந்தையாக பரிமளிக்க..?

- வளர்ப்போம்...