ஸ்பெஷல் 1
Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

மாதா ரூ.30 ஆயிரம் லாபம்...

 கு.ராமகிருஷ்ணன்

அள்ளித் தரும் அலுமினிய பாத்திரங்கள் !

''ஒரு தொழிலைப் பத்தின பொதுப்பேச்சை, வெளித்தோற்றத்தை மட்டுமே வெச்சு அதோட வெற்றி, தோல்வியை அனுமானிக்கக் கூடாது. காலப்போக்குல மதிப்பிழந்ததா பேசப்படற தொழில்லகூட... வெற்றிக்கான அம்சங்கள் மறைஞ்சிருக்கலாம். அதைக் கண்டுபிடிச்சு, அந்தத் தொழிலை கையில எடுத்துட்டா, பெரிய அளவுல போட்டிகள் இல்லாம ரிலாக்ஸ்டா சக்சஸ் பண்ணலாம்!''

- வெற்றிக்கான சூத்திரத்தை, மிக எளிமையாகச் சொல்லித் தருகிறார் மகேஷ்வரி.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
##~##

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், படிப்புக் கனவை துறந்து, நெருக்கடியான சூழலில் தன் குடும்பத்துக்காக உழைத்ததோடு... புகுந்த வீட்டில் வளமான வாழ்க்கை அமைந்திருந்த போதிலும்கூட, சொந்தமாக உழைக்க வேண்டும் என்கிற துடிப்பு காரணமாக அலுமினிய பாத்திரத் தயாரிப்பு தொழிலில் இறங்கி சாதிக்கத் தொடங்கியிருக்கிறார் மகேஷ்வரி. இன்று மாதம் முப்பதாயிரம் வரை லாபக் கணக்கு எழுதும் தொழில் முனைவோராக இருக்கும் அவருடைய வார்த்தைகள், நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன.

''பிறந்து வளர்ந்ததெல்லாம் கும்பகோணம். எங்க வீட்ல என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பிள்ளைங்க. அப்பா, சாதாரண சைக்கிள் ரிப்பேர் கடை வெச் சிருந்தார். வறுமை எங்களை ரொம்பவே வாட்டியெடுத்தாலும், படிப்பு நம்மள கரையேத்திடுங்கற நம்பிக்கையோட நல்லா படிச்சேன். ஆனா, பத்தாவதுல நல்லா மார்க்கெடுத்தும்கூட, குடும்பச் சூழ்நிலையால மேற்கொண்டு படிக்க முடியல. ஆனாலும், வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்கல. சின்ன அளவுல அலுமினிய பாத்திரங்கள் தயார் பண்ணி, விற்பனை பண்ணிக்கிட்டு இருந்த எங்க பெரியப் பாவுக்கு உதவியா வேலைகள் செய்ய ஆரம்பிச்சேன். இட்லித் தட்டுக்கு ஓட்டை போட்டுத்தர்றது, வடை சட்டிக்குக் காது வெச்சி தர்றதுனு செஞ்சு கொடுத்து, என்னால முடிஞ்சதை சம்பாதிச்சி வீட்டுல கொடுத்திட்டு இருந்தேன். இப்படியே ஆறு வருஷம் ஓடுச்சு'' என்பவருக்கு திருச்சி மாவட்டம், பாலக்கரை, காஜாப்பேட்டை யில் பாத்திரக்கடை நடத்தி வரும் வினோபாவுடன் திருமணம் நிகழ்ந்திருக்கிறது.

''கல்யாணம் பண்ணி வந்த இடத்துல, ஆண்டவன் புண்ணியத்தால எந்தக் கஷ்டமும் இல்ல. ஆனாலும், அடுப்படியிலயே முடங்கிக் கிடக்கப் பிடிக்கல. சொந்த முயற்சியில ஏதாவது தொழில் பண்ணணுங்கற ஆசை எனக்குள்ள ஓட ஆரம்பிச்சுது. அடுத்தடுத்து ரெண்டு குழந்தைகள் பிறந்து, ஓரளவுக்குக் குழந்தைகள் வளர்ந்ததும், என்னோட எண்ணத்தை கணவர், மாமனார்கிட்ட சொன்னேன். உடனே 'சரி'னு சொல்லி உற்சாகப்படுத்தினாங்க'' என்பவர், பல வகைகளிலும் யோசனை செய்து அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கலாம் என தீர்மானித்திருக்கிறார்.

''திருச்சி மாவட்ட தொழில் மையத்துல கிடைச்ச ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் அதுக்கு முக்கியமான காரணம். 'கிராமப்புற மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ உள்ள மக்கள் இப்பவும் கூட, அலுமினிய பாத்திரங்களைத்தான் அதிகம் பயன்படுத்துறாங்க. ஆனா, அதை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் குறைஞ்சிக் கிட்டே வருது. அதனால, அலுமினிய பாத்திரங்கள் தயாரிப்புத் தொழிலுக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும். கூடவே, கடுமையான போட்டிகளைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியும் இருக்காது'னு சாதகமான அம்சங்களை எல்லாம் தெளிவுபடுத் தினாங்க'' என்றவர், தொழில் முதலீட்டில் இருந்து வியாபாரம் வரை இன்னும் பல கூறுகளையும் தெளிவுற தெரிந்துகொண்டு, ஒரு வெற்றித் திரு நாளில் தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கிறார்.

''எதிர்பார்த்த சாதகமான அம்சங்கள் எல்லாம் சரியாத்தான் அமைஞ்சுது. ஆனா, வேற வகையில சில சிக்கலான சவால்கள் காத்திருந்திச்சு. இருந்தாலும் மனம் தளரல. எல்லா தடைகளையும் தாண்டி வந்தேன். தொழிலை ஆரம்பிச்ச இந்த ரெண்டு வருஷத்துல, இப்போ இதை வெற்றிப் பாதையில திருப்பிட்டேன். இங்க ஏழு பேர் வேலை பார்க்கறாங்க. மாசம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. போகப் போக இன்னும் கூடுதலா கிடைக்கும்''

- தன் திறமை, உழைப்பின் மீது வைத்துள்ள நம்ப்பிக்கையால் உறுதிபட பேசுகிறார் மகேஷ்வரி!

இத்தொழிலுக்கான முதலீடு, பயிற்சி, வாய்ப்பு, சிறப்பம்சம், சவால்கள் உள்ளிட்ட ஏ டு இஸட் விவரங்கள்... - அடுத்த இதழில்

- சாதனைகள் தொடரும்... 
படங்கள்: கே.குணசீலன்