ஸ்பெஷல் 1
Published:Updated:

இன்ஜினீயரிங்...மெடிக்கல்...

பிரமிக்க வைக்கும் 'தொட்டில் குழந்தைகள்' !

கே.ராஜாதிருவேங்கடம்

பிறந்த குழந்தையை, 'பெண் என்பதால் நீ எனக்கு வேண்டாம்...’ என்று தூக்கி வீசும் பெற்றோர்... கலிகாலத்தின் கண்ணீர் சாட்சி! அப்படி வீசப்படும் சின்னஞ்சிறு உயிர் களைக் காப்பதற்காக 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா ஆரம்பித்ததுதான், 'தொட்டில் குழந்தை திட்டம்!’ இன்றும் அத்திட்டத்தின் தேவை இருப்பது, வேதனை. என்றா லும், தமிழ்நாடு முழுக்க அதனால் உயிர் பிழைத்து வந்திருக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரங் களில்!

இன்ஜினீயரிங்...மெடிக்கல்...
##~##

''பெண் சிசுக் கொலைக்கு ஒரு தீர்வா கொண்டுவரப்பட்ட திட்டம் இது. இதுவரைக்கும் சுமார் 3,500 குழந்தைகள் தொட்டிலுக்கு வந்திருக் காங்க. பெற்றோர் மனசு திருந்தி அறுபது நாட்களுக்குள்ள வந்து கேட்டா, குழந்தையைத் திருப்பிக் கொடுக்கலாம்னு விதி இருக்கு. அப்படி வாங்கிட்டும் போயிருக்காங்க.

குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற 23 தத்து வழங்கும் மையங்கள் கிட்ட ஒப்படைப்போம். குழந்தை இல்லாத தம்பதிங்க தத்தெடுத்துக்கு வாங்க. குழந்தையை நல்லபடியா வளர்க்கறதை கண்காணிச்சிட்டே இருப்போம்.

திட்டம் ஆரம்பிச்சு பத்தொன்பது வருஷம் ஆயிடுச்சு. ஆரம்ப காலத்துல தொட்டிலுக்கு வந்த குழந்தைகள் பலர், இப்போ இன்ஜினீயரிங், மெடிக்கல்னு சிறப்பா படிச்சுட்டிருக்காங்க'' என்றார் சமூக நல அலுவலகத்தில்  ஊழியர் ஒருவர்.

பெருமைக்குக்குரிய அந்தப் பெண் குழந்தைகளில் இருவரைச் சந்தித்த போது, ''நாங்க தொட்டில் குழந்தை கள்னு தெரிஞ்சா, உறவு, நட்புனு எல்லாரும் எங்களை அனுதாபத்தோட பார்ப்பாங்க. அதனால, போட்டோ, பேர் வேண்டாம்!'' என அடையாளங் களை மறைத்தே பேசினர்.

''எங்கப்பா, அம்மா யாருனு தெரிஞ்சுக்கணும்னு நான் என்னிக்குமே நெனச்சதில்ல. 'வேண்டாம்'னு தூக்கி வீசிட்டுப் போனவங்கள பத்தி நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? என்னை வளர்க்கற அப்பாவும் அம்மாவும் ஸ்கூல் டீச்சர்ஸ். அவங்களுக்கு நான்தான் உயிர். பெரியவளானதும் தான், தத்தெடுத்த விஷயத்தையே எங்கிட்ட சொன்னாங்க. ரெண்டு நாள் அழுதேன். அப்புறம் தெளிவாயிட்டேன்'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டவர்,

''எங்க ஸ்கூல்ல பிளஸ் டூ-வுல நான்தான் செகண்ட் மார்க். என் ஆசைப்படி இன்ஜினீயரிங்ல சேர்த்துவிட்டாங்க எங்கப்பா. சின்ன வயசுல இருந்து அப்பா, அம்மாவைப் பிரிஞ்சு இருந்ததே இல்ல. காலேஜுக்காகத்தான் முதல் முறையா பிரிஞ்சு வந்திருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, என்னை பெத்தவங்களுக்கு மட்டும் எப்படி மனசு வந்துச்சோ தெரியல!'' என்றபோது குரலில் அத்தனை வருத்தம்.

இன்ஜினீயரிங்...மெடிக்கல்...

இன்னொருவரும் இன்ஜினீயரிங் மாணவிதான். அவர் நம்மிடம், ''ப்ளஸ் ஒன் படிக்கும்போதுதான், தொட்டில் குழந்தைங்கறதை எங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. கஷ்டமா இருந்தது. என்னைவிட, எங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நான் அழுதா... அவுங்களும் அழுதுடுவாங்கனு, நான் அழவே இல்ல. ராத்திரியெல்லாம் மட்டும் மனசுக்குள்ள இனம் புரியாத கவலை வரும். ஆனா, அப்பாவையும் அம்மாவையும் நினைச்சா அதெல்லாம் காணாம போயிடும்'' என்று நெகிழ்ந்தவர்,

''என்னைப் பெத்தவங்க யாருனு எனக்குத் தெரியாது. ஒரு காலத்துல தெரிய வந்தா, 'நீங்க வேண்டாம்னு தூக்கி போட்ட புள்ளை, இன்னிக்கு நல்ல நிலமைக்கு வந்திருக்கேன் பாருங்க’னு அவங்ககிட்ட சொல்லணும். இப்படிப்பட்ட புள்ளையைத் தூக்கி போட்டுட்டோமேனு அவங்க காலமெல்லாம் வருத்தப்படணும்!'' என்று கண்களில் கோபமும், வைராக்கியமும் நிறைய அவர் சொன்னது... பெண் பிள்ளை என்பதற்காகவே கொன்றொழிக்க துணியும் சமூக அநீதிக்கு எதிராக சாட்டையை சுழற்றுவதாகவே தெரிந்தது நமக்கு!

படம்: எம்.விஜயகுமார்