டீன் ஏஜ் திருமணம்... 'திக் திக்' விளைவுகள் !
நாச்சியாள்
சென்னை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை. மகப்பேறு மருத்துவருக்காக காத்திருந்தவர்களின் வரிசையில், எண்பத்தி ஆறு கர்ப்பிணிப் பெண்கள். அவர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள். எலும்பும் தோலுமாக சுடிதாருக்குள் தன்னை போர்த்திக் கொண்டிருந்த பெண், முகம் வெளிறி 'எனக்கு ரத்தசோகை’ என்பதை கண்களாலேயே சொல்லிக் கொண்டிருந்த பெண்... இன்னும் குழந்தைபோல தன் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த பெண்... என அவர்களில் பலர் பரிதாபமாகத் தெரிந்தார்கள்.

##~## |
'இந்தியாவில் 47 சதவிகிதம் பெண்களுக்கு, பதினெட்டு வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகிறது’ என்று அபாய மணி அடிக்கிறது அமெரிக்காவின் 'பாப்புலேஷன் ரெஃபரன்ஸ் பீரோ’ என்கிற அமைப்பு.
''டீன் ஏஜில் திருமணம் செய்து வைக்கப்படும் பெண்களின் உடல்... அந்த வாழ்க்கையையும், கர்ப்பத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தயாராக இருக்குமா?'' என்ற கேள்வியை மகப்பேறு மருத்துவரும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் முன் வைத்தபோது,
''பூப்பெய்திவிட்டாலே திருமணத்துக்கு தயார் என்பது தவறான புரிதல். ஒரு மொட்டு பூவாகி, அது காயாக மாறுவதற்கு ஒரு சிறு செடிக்கே கொஞ்ச காலம் தேவைப்படும்போது... ஒரு மனுஷிக்கு? பூப்பெய்திவிட்டாலும், மாதவிடாய் சுழற்சி உடனே முழுமை பெற்றிருக்காது. அதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகும். நன்கு வளர்ச்சியடைந்த கருமுட்டை இருந்தால்தானே ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்? கருமுட்டை முழுமையாக வளர்ந்திருக்காத காரணத்தால், அவர்களுக்கு அடிக்கடி அபார்ஷன் உண்டாகி, ரத்தசோகை, சத்துக்குறைபாடு என மொத்த உடல் நலமும் பாதிக்கப்படும். குறைப்பிரசவம் நேரும். குழந்தை குடல் சுற்றி பிறப்பது போன்ற பிரசவச் சிக்கல்களும் ஏற்படும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் காலம் முழுக்கத் துரத்திக் கொண்டே இருக்கும்'' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் தமிழிசை.

''சிறுவயது திருமணம் மனரீதியாக என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்?'' என்பதை, மனநல மருத்துவர் பத்மாவதி புரியவைத்தார்.
''கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்துவிட்ட இந்நிலையில், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற உடல் நல சிக்கல்களைத் தனி ஆளாக எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் பெண்கள். தன் வயது பெண் இன்னும் ஹாயாக வலம் வந்து கொண்டிருக்கும்போது, தான் மட்டும் இப்படி அல்லாடுகிறோமே என்கிற மனஅழுத்தமும், ஏக்கமும் ஏற்படும். இதில் பாதிப் பேருக்கு பாலியல் உறவு என்பதற்கான முழு அர்த்தமும் தெரிந்து இருக்காது. அதனால் அதுகுறித்த தேவையில்லாத அச்சம், அதன் மீது மிகுந்த வெறுப்பையும் கசப்பை யும் உண்டாக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக் குள் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால், சமயங்களில் தற்கொலையில்கூட முடியும்!'' என்று பிரச்னையின் கோணங்களைக் காண்பித்தார்.
''பெண் என்றால் அவளின் வாழ்க்கையில் திருமண மும், குழந்தைப் பேறும்தான் மிக முக்கியமான

விஷயம், அவள் பிறப்பே இதற்காகத்தான் என்கிற சமூக சிந்தனை மிக ஆழமாக இங்கே வேரோடி இருப்பது, இதற்கு மிக முக்கியமான காரணம்'' என்று சமூகக் காரணத்தை முன் வைத்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஷெரிபா,
''இந்த நிலை மாற வேண்டுமானால், குறைந்தபட்சம் ப்ளஸ் டூ வரையாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாய, இலவசக் கல்வியை அரசு வழங்க வேண்டும்!'' என்று தீர்வையும் சொன்னார்.
சிறுவயது திருமணம், சட்ட விரோதமானது மட்டுமல்ல... சக்தி மிக்க பெண் குழந்தைகளை முடக்கும் நஞ்சும்கூட என்ற புரிதல் பெற்றோருக்கு வேண்டும்!
ஓவியம்: எஸ்.இளையராஜா