'சூப்பர் மாம்' சரண்யா !
க.நாகப்பன்

''பாசமான அம்மா, வெகுளியான ஆத்தானு குணச்சித்திர கேரக்டரா... கூப்பிடுங்க சரண்யாவை!'' என்பது நம் கோடம்பாக்க வழக்கம். அந்த அளவுக்கு பாத்திரத்துடன் ஒன்றிப் போய்விடும் இயல்புடைய சரண்யா... '2010-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை' என மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் - 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக!
வாழ்த்துகள் அள்ளிச் சென்றோம். ''என்னோட முதல் படம் 'நாயகன்’. 'தென்மேற்கு பருவக்காற்று' 100-வது படம். சதம் அடிச்ச படமே, தேசிய விருதை வாங்கித் தந்திருக்கறதை நெனைச்சா... ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்று குழந்தையின் குதூகலத்துடன் பேசினார் சரண்யா
பொன்வண்ணன்.
##~## |
''மூத்த பொண்ணு பிரியதர்ஷினி பத்தாவது படிக்கறா. ரெண்டாவது பொண்ணு சாந்தினி ஏழாவது படிக்கறா. பொண்ணுங்களை ஹோம் வொர்க் செய்ய வைக்கறது, அவங்களுக்கு வெரைட்டியா டிரெஸ் தைக்கறது, வாய்க்கு ருசியா சமைச்சுப் போடறதுனு எல்லாரையும் போல ஹாலுக்கும் கிச்சனுக்கும் பரபரப்பா ஓடற அம்மாதான் நானும். என் பொண்ணுங்கள நல்லா படிக்க வெச்சு, நல்ல போஸ்ட்டிங்ல உட்கார வைக்கணும்ல!'' எனும்போது, தாய்மையின் அடர் அன்பு அவர் வார்த்தைகளில்.
தென்மேற்குப் பருவக்காற்று இயக்குநர் சீனுராமாசாமி உட்பட தனக்கு நல்ல கேரக்டர்களை உருவாக்கித் தந்த எல்லா இயக்குநர் களுக்கும் நன்றிகள் சொல்லும் சரண்யாவுக்கு ஒரு ஆசை - ''ரஜினிசாரோட ஒரு படத்துலயாவது நடிக்கணும். இதை பேராசைனுகூட சொல்லலாம்!'' - விழிகள் விரிக்கிறார் சரண்யா!
படம்: அ.ரஞ்சித்