சேலை... சேவை... அதுதான் மம்தா !
ஆர்.ஷஃபி முன்னா
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக இருந்த கம்யூனிஸ்ட்டுகளை, சில ஆண்டுகளாக கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, தற்போது அந்த ஆட்சியையே தகர்த்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்!

##~## |
மம்தாவின் தைரியம், மாணவப் பருவத்திலேயே தொடங்குகிறது. காங்கிரஸை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த முதுபெரும் அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனை எதிர்த்து, நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவருடைய கார் பானட்டில் ஏறி நின்று இவர் கொடுத்த போராட்டக் குரல், சில மாதங்களிலேயே இவரை இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக்கியது!
மம்தா குடியிருக்கும் பகுதியில் வசித்த இரு பெண்களை, விசாரணை என்ற பெயரில் போலீஸார் சித்ரவதை செய்ய, பெண் சிங்கமென போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, சட்டப் பிரிவுகளை நீட்டி போலீஸாரைப் பணிய வைத்து, அந்தப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்தார் மம்தா. அன்றிலிருந்தே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் 'தி' (அக்கா) என்றாகிப் போனார்!
பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் மம்தா, நல்ல ஓவியரும்கூட! மக்களின் பேராதரவோடு கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றுவது என்ற குறிக்கோளுடன் அரசியல் களத்தில் சுழன்றவர், காங்கிரஸில் இருந்து வெளியேறி 'திரிணாமுல் காங்கிரஸ்’ கட்சியை ஆரம்பித்து, தற்போது முதல்வர் பதவியில் அமர்ந்து தன்னுடைய சபதத்தை நிறைவேற்றியும் இருக்கிறார்.
இத்தனைக்கும் பிறகும்கூட... காலில் சாதாரண ரப்பர் செருப்பு; தோளில் ஒரு ஜோல்னா பை; வெண்மை நிற, ஸ்டார்ச் செய்யாத காட்டன் சேலை... என்ற தன்னுடைய எளிய அடையாளங் களை மாற்றிக் கொள்ளவில்லை.
''அவர் அணிவது... மேற்கு வங்கத்தின் நெசவுக் கிராமமான தானேகாளியில் நெய்யப்படும் கைத்தறி சேலை. நலிந்துபோன அம்மக்களின் நெசவை கை தூக்கிவிடவே அதை அவர் அணிய ஆரம்பித்தார். இன்று 'மம்தா சேலை’ என்ற பிராண்ட் பெயருடன் அது வெளிநாடு, உள்நாடு என தானேகாளியின் நெசவாளிகளுக்கு பல கோடிகளுக்கான ஆர்டரைக் கொடுக்கிறது. அதுதான் மம்தா'' என்று புகழ் பாடுகிறார் கொல்கத்தா துணை மேயர் பர்சானா ஆலம்.