பெண்களின் எதிரி எண்டோசல்ஃபான் !
ஆர்.குமரேசன்
''ம்... இந்த மூட்டுவலி எங்கிருந்துதான் வந்துச்சோ தெரியலையே?'’
''அதென்னமோ தெரியல... பிரெஸ்ட் கேன்சர்ங்கறாங்க, கர்ப்பப்பை கேன் சர்ங்கறாங்க... எங்க காலத்துலயெல் லாம் இதைக் கேள்விப்பட்டதே இல்லை.'
''இப்பல்லாம் குழந்தை இல்லாதவங்க ளோட எண்ணிக்கை பெருகிக்கிட்டே இருக்கு. அதுக்குனே ஸ்பெஷல் ஆஸ்பத் திரிங்களும் பெருகிகிட்டே இருக்கு!’'

##~## |
- நமக்கு ஏற்படும் நோய்கள் ஒவ்வொன்றையும் பற்றி, இப்படி கவலையோடு விவாதிக்கும் நாம், அவற்றுக்கெல்லாம் ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்துக் கொள்கிறோம். அல்லது கற்பிக்கப்படுகிறோம். கடைசியில், ''ம்... எல்லா கலிகாலம்!'' என்றபடி விஷயத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
ஆனால்... ''எல்லாம் எண்டோசல்ஃபான் காலம்'' என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் டாக்டர்கள் சிலர்.
''ஆம், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் விஷம்தான் நிறைந்திருக் கிறது. அந்த விஷத்தன்மை, விளைபொருட்களில் கலந்து, அவை உணவுப்பொருளாக வடிவெடுத்து நம் உடலுக்குள் புகும்போது, விஷமும் கூடவே நுழைகிறது. அது, புதிது புதிதாக நோய்களை உற்பத்தி செய்து, மக்களை நடைபிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது'' என்பதுதான் அவர்கள் தரும் ஆராய்ச்சி முடிவு!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அரசாங்க முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது. விளைவு, அங்கே உள்ள பல கிராமங்களில் பெரும்பாலான குழந்தைகள் கை, கால் ஊனத்துடனும், உள் உறுப்புகளில் பல பிரச்னைகளுடனும் பிறக்க ஆரம்பித்தன. இதுதான்... எண்டோசல்ஃபான் பயங்கரத்துக்கான முதல் அபாய மணி!
'' 'இது எங்கோ ஒரு மூலையில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிதானே..?’ என்று இந்தப் பிரச்னை யைக் கடப்பவர்களுக்கு... குறிப்பாக, பெண் களுக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு சென்றடைய வேண்டும். காய்கறிகள், பால், இறைச்சி, அரிசி என நம் வீட்டில் பயன்படுத்தும் ஏதாவது ஒரு உணவுப் பொருள் வாயிலாக, இந்த எண்டோசல்ஃபான் நம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் ஒடுக்கிக் கொண்டிருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது அசீல். இவர், எண்டோசல்ஃபான் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருபவர்.

''2002-ம் ஆண்டில் டென்மார்க், ஸ்பெயின் நாடுகளில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில் எண்டோசல்ஃபான் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரணம், இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள்தான். இப்படி எண்டோசல்ஃபானை அதிகமாகப் பயன்படுத்தாத இந்த நாடுகளிலேயே இந்தளவுக்குப் பாதிப்பு என்றால், உலகளவில் அதன் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கும் நம் இந்திய மக்களுக்கு, என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைக்கவே பதைபதைக் கிறது. இந்தியாவிலும் ஹரியானா, ஒரிஸ்ஸா மாநிலங் களில் உணவுப் பொருட்களில் எண்டோசல்ஃபான் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது'' என்று சொல்லும் அசீல்,
''இது, பெண்களுக்குத்தான் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மார்பகப் புற்று நோய், கருக்கலைதல், குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை, தோல் நோய்கள்... என பட்டியல் நீளமானது. கர்ப்பப்பையை பாதிப்பதால், கருவுற்றிருக்கும்போதே எண்டோசல்ஃபான் பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறது சிசு. தாய்ப்பாலிலும் கலந்துவிட்டதால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், மூளை வளர்ச்சி இல்லாமை, சிறிய வயதிலேயே கண்ணாடி அணிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வயதானவர்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு, ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது'' என்று சொல்லி கலங்க வைத்தார்.
உலகில் பல நாடுகளிலும் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் ஆதரவோடு அதன் பயன்பாடு அதிகரித்தபடியே இருக்கிறது. இந்நிலையில், கேரளத்தின் 'ஜனநாயக வாலிபர் சங்க' பிரதிநிதிகள், இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல... தற்போது, தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இடைக்கால தடைவிதிக்கப் பட்டிருக்கிறது.
'சரி, இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா?’ என்று மதுரை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணரான டாக்டர் சௌந்திரபாண்டியனிடம் கேட்டபோது,
''காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எல்லாவற்றையும் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்துவது நல்லது. அதேசமயம், இது ஓரளவுக்குத்தான் நம்மைக் காப் பாற்றும். விளைபொருட்களின் உள்ளே ஊடுருவியிருக்கும் விஷத்தன்மையை இதன் மூலம் அகற்ற முடியாதே...'' என்றவர்,
''முடிந்தவரை இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களாகத் தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது'' என்று எதார்த்த நிலையை எடுத்து வைத்தார்.
படங்கள் உதவி: மதுராஜ், மாத்ருபூமி