காபி ஷாப் கலாய்ப்பு...
நாச்சியாள்
'அழகர்சாமியின் குதிரை’ - மண்ணும் மக்களுமாக இன்னுமொரு படம்!
ஊர் திருவிழா சமயத்தில், அழகர்சாமி கோயிலின் குதிரை சிலை காணாமல் போகிறது. ஜோசியக்காரர் சொன்னதை நம்பி தேடிச்செல்லும் ஊர்க்காரர்கள், நடுக்காட்டில் நிற்கும் நிஜ குதிரையை ஊருக்குக் கொண்டு வருகின்றனர். ஆனால், அது அப்புக்குட்டியின் நேசக் குதிரை. அதைக் கொண்டு சென்றால்தான், சிவப்பாக இருக்கும் பெண்ணை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலை. இதை வைத்து நகைச்சுவையோடு மண் மணக்க மணக்கக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

##~## |
தியேட்டர் ரேஸில் தற்போது ஜெயித்துக் கொண்டிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை’ ஜாக்கிகளை (இயக்குநர் சுசீந்திரன்... கதாநாயகன்கள் சிவபாலன், பிரபாகர்... நடிகர்கள் அருள்தாஸ், சூரி... கதாசிரியர் பாஸ்கர் சக்தி, சினிமோட்டோகிராஃபர் 'தேனி’ ஈஸ்வர், எடிட்டர் காசிலிங்கம்) காபி ஷாப் சந்திப்புக்கு அழைத்தோம். ''ஒரு குரூப்பாத்தான் வந்திருக்காங்க போல'' என்ற உற்சாக கலாய்ப்புடன் அவர்களை வரவேற்றது சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் எலெக்ட்ரானிக் மீடியா மாணவிகள் ஸ்வேதா, ஸ்வாதினி, மாதுர்பாஷினி, கலைஸ்ரீ, ராகவி அடங்கிய ஐவர் குழு.
வந்ததிலிருந்தே 'அப்புக்குட்டி’ ஹேர்ஸ்டைலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதா, ''சார் இது வளர்த்த முடியா, செஞ்ச முடியா..?'' என்று லந்து கொடுக்க,
''இல்லீங்க... இது என்கூடவே பிறந்த முடிதாங்க'' என்று வெள் ளந்தியாகச் சிரித்தார் கதாநாயகன் 'அப்புக்குட்டி’யாகிய சிவபாலன்.
வம்புப் பெண்கள், தங்களின் அம்பை மற்றொரு கதாநாயகன் பிரபாகர் பக்கம் திருப்பி னார்கள்.
''படத்துல உங்கள 'லவ்’ பண்ற பொண்ணை, அவ்வளவு கூட்டத்திலயும் கண்ணால சிக்னல் காட்டியே தனியா கூட்டிட்டுப் போறீங்களே... சான்ஸே இல்ல... என்ன ஒரு எக்ஸ்பிரஷன்..!'' என்று கேர்ள்ஸ் புகழ்ந்ததில் திக்குமுக்காடிப் போனார் பிரபாகர். திடுதிப்பென, ''எக்ஸ்பீரியன்ஸோ..?!'' என்று அவர்கள் கொக்கியைப் போட, ''இன்னி வரைக்கும் நான் யாரையுமே லவ் பண்ணினது இல்லீங்க!'' என்றார் அப்பாவியாக.

''நம்பிட்டோம் நம்பிட்டோம்!'' என்று கோரஸ் பாடினர் கேர்ள்ஸ்.
''சூரி சார், பரோட்டானா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? 'வெண்ணிலா கபடிக்குழு’வுல இருந்து, 'அழகர்சாமியின் குதிரை’ வரைக்கும் சாப்பிடறதுல அவ்வளவு சமர்த்தா இருக்கீங்களே...?'' என்று கலைஸ்ரீ கலாய்க்க, ''ஆனா... எவ்வளவு சாப்பிட்டும் கொஞ்சம்கூட குண்டான மாதிரி இல்லையே!'' என்ற துணைக் கேள்வியை விட்ட ஸ்வாதினி, அருகிலிருந்த அப்புக்குட்டியை நோட்டம் விட்டபடியே, ''குண்டா இருந்தா மட்டும் பலசாலியாகிட முடியாது'' என்று கலாய்க்க...
''என்னது..?'' என்று பொங்கிய அப்புக்குட்டி, ''குண்டா இருக்கற நானும், ஒல்லியா இருக்குற நீங்களும் மோதிப் பார்க்கலாமா?'' என்று ஸ்வாதினியை ஆட்டைக்கு இழுக்க... அமர்க்களமாக ஆரம்பமானது போட்டி. அப்புக்குட்டி எவ்வளவோ போராடியும் கோப்பையை வென்றது ஒல்லிக்குச்சி ஸ்வாதினிதான்!
''சார்... க்ளைமாக்ஸ் ஸீன்ல வர்ற அந்த நிலா, கிராஃபிக்ஸ் நிலாதானே?'' என்று மதூர்பாஷினி கேட்க, ஆச்சயமானார் 'தேனி' ஈஸ்வர். ''மைனூட்டா அப்சர்வ் பண்ணியிருக்கீங்களே! யெஸ்... அது கிராஃபிக்ஸ்தான். உங்களுக்கு சினிமாவுல நல்ல நாலெட்ஜ்!'' என்று ஈஸ்வர் சர்டிஃபிகேட் கொடுக்க,
''சார்... அப்போ என்னை உங்கககிட்ட அசிஸ் டென்ட்டா சேர்த்துக்கோங்களேன்'' என்று ஆன் த ஸ்பாட் அப்ளிக்கேஷன் போட்டார் மதூர்பாஷினி.
''கோர்ஸ்ஸை முடிச்சுட்டு வாங்க..!'' என்றதும் பாஷினிக்கு சந்தோஷ சர்ப்ரைஸ்!
அமைதியாகவே இருந்த பிரபாகரிடம், ''படத்துல முற்போக்குவாதியா ரொம்ப ஸீன் போட்டீங்க. நெஜத்துல எப்படி?'' என்று கலைஸ்ரீ பேட்டி எடுக்க,
''நெஜத்துலயும்...'' என்று இழுத்த பிரபாகரை,
''இழுவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பதிலை சொல்லு!'' என்று கிண்டலடித்தார், படத்தில் சீரியஸ் போலீஸ்காரராக பயமுறுத்திய அருள்தாஸ்.
''நீங்ககூட இவ்வளவு ஜோவியலா பேசுவீங்களா..?'' என்று அவரிடம் ஆச்சர்யப் பட்ட மதூர்பாஷினிக்கு, '' 'நான் மகான் அல்ல’, 'தென்மேற்கு பருவாக்காற்று’ படங்கள்ல வில்லனாவே பார்த்து பயந்து போயிருக்கீங்கனு நினைக்கிறேன். நான் ரொம்ம்ம்ப நல்லவன்மா!'' என்று அருள்தாஸ் சொல்ல, காசிலிங்கத்துக்கு செமசிரிப்பு.
''ஹே கேர்ள்ஸ். க்ளாப்ஸ். இவ்வளவு நேரமா சைலன்ட்டா இருந்த காசிலிங்கம் சார்... ஒருவழியா சிரிச்சுட்டாரு... ரு... ரு!'' என்று ஐந்தருவிகளும் (நம்ம கேர்ள்ஸ்தான்) அவரைக் கலாய்த்தனர்.
'''சரி, நீங்கள்லாம் எலெக்ட்ரானிக் மீடியா ஸ்டூடன்ட்ஸ்... ஒரு நல்ல கதை சொல்லுங்க பார்ப்போம்'' என்று கேர்ள்ஸுக்கு சுசீந்தரன் கேள்வியைப் போட, ''நாங்க சொல்ற கதையை சுட்டு அப்படியே அடுத்த படம் பண்றதுக்கா..?'' என்று உஷார் பதில் தந்த கூட்டத்தின் புத்திசாலித்தனத்தை வேறுவழியில்லாமல் பாராட்டினார் சுசீ.
''நல்ல கதை எழுதறது எப்படி..?'' என்று பாஸ்கர் சக்தியிடம் மதூர்பாஷினி கேட்க, ''உங்களை பாதிச்ச, உங்களுக்குப் பிடிச்சதை உண்மையா எழுதுங்க!'' என்று டிப்ஸ் கொடுத்தார் பாஸ்கர்.
காபி பார்ட்டியோடு முடியவில்லை கூட்டம். ஸ்பெஷல் கிளாஸாக, ஒரு மணிநேரம் சுசீந்திரன் அவர்களுக்கு டைரக்ஷன் வகுப்பெடுக்க, ''நாங்க டைரக்டராகி பேட்டி கொடுக்கும்போது, கண்டிப்பா உங்க பேரைக் குறிப்பிட்டு நன்றி சொல்வோம் சார்!'' என்று கேர்ள்ஸ் சொல்ல,
''ஆல் த வெரி பெஸ்ட்!'' என்று டீமுடன் விடைபெற்றார் சுசீந்திரன்!
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்