ஸ்பெஷல் 1
Published:Updated:

'சிங்கமும் சிறுத்தையும் என்னோட குழந்தைங்க...!

அதிசய அம்மா ஆபிதா

ம.பிரியதர்ஷினி

'சிங்கமும் சிறுத்தையும் என்னோட குழந்தைங்க...!

அந்தக் குட்டிச் சிங்கம், அத்தனை ஆஜானுபாகுவாக எழுந்து நிற்கிறது. ''பாவம், ஜான்ஸிக்கு கண்ணுல பசியைப் பாருங்க...'' என்று பரிவாகச் சென்று சாப்பாடு வைக்கிறார் ஆபிதா. 'போங்கம்மா... நீங்க இன்னிக்கு ரொம்ப லேட்!’ என்று கோபம் காட்டுவதுபோல விலகி நிற்கிறது சிங்கம். ஆபிதா, முதுகைத் தடவிவிட, சமாதானமாகி உணவைக் கவ்வுகிறது ஜான்ஸி!

ஐம்பத்தி நான்கு வயதாகும் ஆபிதா... சென்னை, வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் விலங்குகள் பராமரிப்பாளர். சிங்கம், புலி, சிறுத்தை, யானையில் இருந்து அத்தனை விலங்குகளும் அவருக்கு 'பெட் அனிமல்ஸ்’தான்! துள்ளிக் குதித்து வந்து அவரின் சேலையைப் பிடித்து ஜான்ஸி இழுக்க, ''புதுசா ஜூவுக்கு வந்திருக்கா. மூணு மாசக்குட்டி. இப்போதான் பல் முளைக்குது... அதான் எல்லாத்தையும் கடிக்கறா'' என்றபடியே, தன் கதை ஆரம்பித்தார் ஆபிதா.

''சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் இருக்கிற வள்ளியூர். பதினேழு வயசுலேயே கல்யாணம் முடிச்சுட்டாங்க. ரெண்டு புள்ளைங்க பிறந்த சூழல்ல, வீட்டுக்காரர் திடீர்னு இறந்துபோயிட, நிர்க்கதியா நின்னேன். காலேஜ் வாத்தியாரு

##~##

ஒருத்தர், இந்த வேலையில சேர்த்துவிட்டாரு. முப்பது வருஷத்துக்கு முன்ன இங்க வந்தப்போ, மரம், செடி நடறது... புல் களையறதுதான் வேலை. பிறகு, இங்க வெட்னரி ஆஸ்பத்திரியில விலங்குகளைக் கவனிக்கற வேலைக்கு மாத்தினாங்க'' என்றவருக்கு, அதற்குப்பின்தான் ஐந்தறிவு ஜீவன்களுடனான அன்பு அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது.

''தாயை விட்டுப் பிரிஞ்சு, காட்டுல தவிக்கற குட்டிகளைத்தான் ஜூவுக்கு கொண்டு வர்றது வழக்கம். யானை, சிங்கம், சிறுத்தை, புலி, மான்னு நிறைய குட்டிகள் வரும். தேவையான சிகிச்சையை டாக்டர் கொடுக்க, அவர் சொல்றபடி மருந்து, சாப்பாடு கொடுத்து கவனிச்சுக்கறது என் வேலை. ஏற்கெனவே இருக்கற விலங்குகளோட, புது குட்டிகளையும் பராமரிப்பேன்.

யானைக்குட்டியில இருந்து சிங்கக்குட்டி வரைக்கும் அதுங்ககிட்ட நான் வாங்கியிருக்கற அடி, கடி எல்லாம் எக்கச்சக்கம். ஆனா... பழகப் பழக, ஓடி வந்து என் காலைத் சுத்தறது, உரசிட்டே நிக்கறது, தூக்கச் சொல்லி காலைத் தூக்கறதுனு அந்த வாயில்லா ஜீவன்கள், தங்களோட அன்பை வெளிப்படுத்தறதைப் பார்க்கும்போது... அவ்வளவு ஆச்சர்யமா, ஆசையா இருக்கும்.

இப்ப இங்க இருக்கற யானைங்க... சுமங்கலி, சூர்யா, பத்மநாபன், செல்லம்மா; சிறுத் தைங்க... ராகுல், ரகுமான், ரமேஷ்; மான்... விஷால்னு எல்லாருக்கும் நான்தான் அம்மா. பேசத் தெரிஞ்சா, அதெல் லாம் 'அம்மா’னு சத்தம் போட்டு என்னைக் கூப் பிட்டிருக்கும்!'' எனும் போது, நெகிழ்வில் துளிர்க்கிறது அவர் கண்ணோரத்தில் நீர்.

''இக்கட்டான சூழ் நிலைகள்ல இருந்து மீட்டு ஜூவுக்கு கூட்டி ட்டு வர்ற குட்டிகள் குணமானதும், அந்த விலங்கோட எண்   ணிக்கை பூங்காவுல ஏற்கெனவே போதுமான அளவுல இருந்தா, மறுபடியும் காட்டுலயே விட்டுருவாங்க. அப்போ எல்லாம் நான் படற வேதனை... கொடுமை! அப்படித்தான் பிரசவத் தப்போ அம்மாவை இழந்த யானைக் குட்டியை கூட்டிட்டு வந்தாங்க. 'விக்ரம்’னு பேரு வெச்சு, குளிப் பாட்டி, சோறூட்டி வளர்க்க, விக்ரம் எங் கிட்ட உயிராயிட்டான். வளர்ந்ததும் காட்டுல விடறதுக்காக ஆபீஸ ருங்க கிளப்ப, என்னை தும்பிக்கையால கட் டிட்டு ரகளை பண் ணிட்டான் விக்ரம்.

பல நாள் கண்ணீ ருக்குப் பிறகு, இறுதியா பிரிஞ்சப்போ பெத்த பெண்ணைக் கட்டிக் கொடுத்து அனுப்பறப் போ கலங்குன மாதிரி தவிச்சது மனசு. இப்பவும் அப்பப்போ எனக்கு விக்ரம் நினைவு வரும். எங்கயோ காட்டுக்குள்ள திரியற அவனுக்கும் என் நினைப்பு வரும்ல?!'' என்று கேட்கும்போது, அவர் கண்களில் அத்தனை ஏக்கம்.

ஆம்... இந்த ஆபிதாவை அம்மா வாகப் பெற்ற பல விக்ரம்கள், தற்போது தமிழகக் காடுகளில் உலாத்திக் கொண்டு இருக்கின்றன!

கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போது காணாமல் போய் விட்ட தன் மகன் கலீல், திரும்பி வருவான் என்று இன்று வரை காத்திருக்கும் ஆபிதா, ''ராகுல், ரகுமான், ரமேஷ், விஷால்னு எல்லார் ரூபத்துலயும் நான் கலீலை பார்த்துக்கிட்டே இருக்கேன்!'' என்கிறார் விழிகளில் ஏக்கத் துடன்!

படம்: கே.கார்த்திகேயன்