ஸ்பெஷல் 1
Published:Updated:

இனி அவர் மக்கள் சி.எம்!

ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள்

நாச்சியாள்,
 எம்.பரக்கத் அலி

இனி அவர் மக்கள் சி.எம்!

மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகியிருக் கிறார் ஜெ.ஜெயலலிதா! சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில், 33 அமைச்சர்களுடன் மே 16-ம் தேதியன்று தான் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட விழா வுக்கு... தன் திரையுலக வாழ்வில் மனம் நெருங்கிய நட்புகளையும் மாறாத நேசத்துடன் அழைத் திருந்தார் ஜெயலலிதா.

சச்சு, ராஜசுலோசனா, சரோஜாதேவி, பி.சுசீலா... என்ற வரிசையில் சூப்பர் சீனியர்களாக சௌகார் ஜானகியும், அஞ்சலி தேவியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தது, ஆத்மார்த்தம்!

இங்கே... ஜெயலலிதா வுடனான தங்களின் அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த சூப்பர் சீனியர் தோழிகள்!

''குழந்தையா ஃபிராக் போட்டுட்டு அழகான 'டால்’ மாதிரி இருந்த காலத்துல இருந்தே அவங்களை எனக்குத் தெரியும்'' என்று பரவசப் புன்னகையுடன் ஆரம்பித்த சௌகார்,

''அவங்களோட அம்மா வேதா, சித்தி வித்யாவதி ரெண்டு பேரும் எனக்கு

##~##

நல்ல ஃப்ரெண்ட்ஸ். என் மூத்த பொண்ணு பிரபாவும், ஜெயலலிதாவும் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிச்சப்போ, என் பொண்ணுக்கு அவங்க இம்மிடியட் சீனியர். அப்பவே ஸ்போர்ட்ஸ், நடிப்பு, நாட்டி யம்னு எல்லாத்துலயும் அவங் களுக்கு இன்ட்ரஸ்ட். எல்லா விஷயங்கள்லயும் டிஸிப்ளின் இருக்கணும்னு நெனப்பாங்க!

அவங்க நடிகையாயிட்ட பிறகும் ஒரிஜினாலிட்டியில இருந்து மாறல. சினிமா செட்டுல அவங்க ஸீன் இல்லாதப்ப எல்லாம், ஒரு ஓரத்துல அமைதியா உட்கார்ந்துப்பாங்க. யார்கிட்டயும் வெட்டி அரட்டை அடிக்க மாட்டாங்க.

எல்லா விஷயங்கள்லயும் அவங்களுக்குனு ஒரு தனித்தன்மை இருக்கும். அது இப்ப வரைக்கும் மாறாம இருக்கு. ஷீ இஸ் எ பர்ஃபெக்ஷனிஸ்ட்'' என்றபோது ஒரு தாயின் பெருமிதம் சௌகாரின் முகத்தில்!

தொடர்ந்தவர், ''இப்ப இருக்கிற சி.எம் ஜெயலிதாகிட்ட பூரண மனமுதிர்ச்சி தெரியுது. தன் மொத்த வாழ்க்கையையும் முழுக்க முழுக்க மக்களுக்காக ஆத்மார்த் தமா சமர்ப்பணம் பண்ணிக்கிட்ட அர்ப்பணிப்பு தெரியுது. இந்த மெச் சூரிட்டியான அப்ரோச்சால ஆட்சியில நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை செய்வாங்க. இனி எல்லாம் ரொம்ப டிசிப்ளிண்டா, சிஸ்டமேட்டிக்கா நடக்கும். அவங்க நேஷனல் லெவல் தலைவரா ஆகணும்கிறதுதான் என் ஆசை, பிரார்த்தனை. கண்டிப்பா அது நடக்கும்னு நம்புறேன்!'' என்ற சௌகாரின் தெளிவான வார்த்தைகளுக்குள், அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பின் இறுக்கமும் அன்பின் நெருக்கமும் கம்பீரமாக நிமிர்ந்திருந்தன!

இனி அவர் மக்கள் சி.எம்!

''எவரம்மா, ரண்டி ரண்டி'' என்று சுந்தரத் தெலுங்கில் தன் வீட்டில் நம்மை வரவேற்ற அஞ்சதேவியம்மா, சிரித்துக் கொண்டே ''வாம்மா!'' என்று செந்தமிழுக்கு மாறினார்.

''ஜெயாம்மாவுக்கு என் மேல எப்பவும் பாசாங்கு இல்லாத அன்பும் மரியாதையும், ஒரு அம்மாங்கற பாசமும் குறையாம இருக்கும். அந்தப் பாசத்தினாலதானே பதவி ஏற்பு விழாவுக்கு மறக்காம அழைச்சிருந்தார்..?!'' என்றபோது பெருமிதம் கலந்த பூரிப்பு அவர் முகத்தில்!

''போன வருஷம் எனக்கு என்னோட சதாபிஷேகம் நடந்தது. அந்த ஃபங்ஷன்ல ரொம்ப சந்தோஷமா கலந்துக்கிட்டு, ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனாங்க. அவங்க எப்பவும் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவாங்க.

இப்ப அவங்க முகத்துல தெரியுற சாந்தம், அமைதியைப் பார்க்கறப்போ அந்த பொறுப்புணர்வு அவங்களுக்குள்ள ரொம்ப ரொம்ப அதிகமாயிட்டதா தோணுது. நம்ம மனசைப் பிரதிபலிக்கிறதுதானே முகம்!

மக்களுக்கு நல்லது செய்யணுங்கற தீவிர உத்வேகம் அவங்க செய்கைகள்ல தெரியுது. நிச்சயமா இந்த முறை அவங்க 'மக்கள் சி.எம்’மா இருப்பாங்க. அப்படி இருக்கணும் கிறதுதான் இந்த சீனியரோட ஆசை. அதுக்காக நிறைஞ்ச மனசோட ஆசீர்வாதம் பண்ணுறேன்!'' என்று சில நிமிடங்கள் கண் மூடி பிராத்தனை செய்தார்.

அவரின் கூப்பிய கரங்களுக்குள் தளும்பி நிரம்பி வழிந்தோடியது நலம் நாடும் நட்பு!

அம்மாவின் வைரக் கம்மல்!

 ஜெயலலிதா இப்போது மீண்டும் நகை அணிய ஆரம்பித்திருக்கிறார்! பதவியேற்புக்கு முந்தைய தினம் வரையில் அணியாமல் இருந்தவர், மேடைக்கு வந்தபோது காதில் புதுக் கம்மல் மின்னியது. புது கம்மலின் செய்திக்கு போவதற்கு முன்... சின்ன ஃப்ளாஷ்பேக்!

இனி அவர் மக்கள் சி.எம்!

நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறியபோதும்கூட, தொடர்ந்து நகைகள் அணிந்து வந்தார் ஜெயலலிதா. முதன் முறையாக 1991-ல் முதல்வரானபோது, பெரிய கல் வைத்த கம்மல், வலது கை விரலில் மோதிரம், இரண்டு கரங்களிலும் பிரேஸ்லெட் டைப் வளையல்கள் என... இந்த நகைகள் எல்லாம் ஜெயலலிதாவின் தனி அடையாளங்களாக இருந்தன. வளர்ப்பு மகன் திருமணத்தில் வைர ஒட்டியாணம், கழுத்து நிறைய ஆரங்கள் என்று மிக அதிக நகைகளை அணிந்து அவர் ஊர்வலம் வந்த போட்டோக்கள்தான், 96-ல் ஆட்சியையே காவு வாங்கியது!

அதிலிருந்து, 'இனி நகைகளே அணிய மாட்டேன்’ என்று சபதமிட்டவர், 2001- ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் நகைகளை அணியவில்லை. 96-ம் ஆண்டிலிருந்து வாட்ச் கூட அணியாமல் இருந்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'கோல்ட்’ வாட்ச்சை தவிர்த்து, புடவைக்கு மேட்சாக சிம்பிள் வார் வைத்த வாட்ச் பயன்படுத்தினார். இந்நிலையில், சமீபத்திய தேர்தலுக்கு முன்பு, 'குண்டுமணி அளவுக்காவது நகை அணியுங்கள்’ என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம். 'அதனால்தான் பதவியேற்பின்போது சின்ன சைஸில் கம்மல்கள் அணிந்து வந்தார்' என்கிறார்கள். இந்த வைரக் கம்மல்கள் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டிருக் கின்றன.

கூந்தலிலும்கூட மாற்றம்... ஜெயலலிதாவின் தலைமுடியின் நெற்றி வகிட்டில் நேர் கோடுக்கு இருபுறமும் கொஞ்சம் வெள்ளை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது 'டை’ அடித்திருக்கிறார். ஆட்சி முறையிலும் நல்ல மாற்றங்கள் அரங்கேறட்டும்!

 

 படங்கள்: சு.குமரேசன், வி.செந்தில்குமார்