நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். எனக்கு இரண்டு தங்கைகள். நான் படிப்பை முடித்ததும், வேலைக்குச் செல்கிறேன் என்றேன். ஆனால் என் பெற்றோர், எனக்குப் பிறகு இரண்டு தங்கைகள் இருப்பதால், என் திருமணத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் நடந்தது. என் கணவருக்கு ஒரு தம்பி. மாமியார், மாமனார், கொழுந்தனாருடன் கூட்டுக் குடும்பம்.

புகுந்த வீட்டில் பணத்துக்குக் குறைவில்லை. வசதியான குடும்பம். மாமனாரின் தொழிலையே என் கணவரும் கொழுந்தனும் செய்துவந்தனர். ஒரே தொழில் என்பதாலும், கூட்டுக் குடும்பம் என்பதாலும் வரவு, செலவுக் கணக்குகள் என எல்லாவற்றையும் மாமனார்தான் பார்த்துக்கொள்வார். மாதம் மாதம் என் கணவருக்கும் கொழுந்தனுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார். எனக்கு மாமனார் வீட்டில் ஒரு குறையும் இல்லை. நாள்கள் சந்தோஷமாக நகர்ந்தன.
இந்நிலையில், என் கொழுந்தனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தோம். வசதியான இடத்தில் ஒரு பெண் அமைந்தது. திருமணமும் நல்லபடியாக முடிந்தது. ஆனால், அதற்குப் பின்னர் புகுந்த வீட்டில் எனக்கான மரியாதையும் இறங்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.
என் கொழுந்தனின் மனைவிக்கு, என்னைவிட அதிகமாக நகை போட்டனர். கல்யாணச் செலவுகளிலிருந்து சீர் வரை எல்லாமே, எனக்கு என் பெற்றோர் செய்ததைவிட அவருக்கு அதிகமாகவே செய்தனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் தாழ்வுமனப்பான்மை கொள்ளவில்லை. என் மீது எனக்கிருந்த சுயமரியாதை, இது பற்றியெல்லாம் எனக்கு எந்த மன சஞ்சலத்தையும் கொடுக்கவில்லை. ஆனால், கொழுந்தனின் மனைவி வந்த பிறகு என் மாமனாரும் மாமியாரும் என்னிடம் காட்ட ஆரம்பித்த பாரபட்சம், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என் மாமனாரும் மாமியாரும் கொழுந்தனின் மனைவியை `ஸ்பெஷல்' ஆக நடத்த ஆரம்பித்தனர். `சாப்பிட்டியாம்மா' என்று அவரை விசாரிப்பார் மாமனார். வீட்டு வேலைகள் எதையும் அவரை பார்க்க விடாமல், ஒரு விருந்தாளி போலவே நடத்தினார் மாமியார். பண்டிகைகளுக்குப் புடவை எடுக்கச் சென்றால், என்னைவிட சில ஆயிரங்கள் அதிக விலையில் அவருக்குப் புடவை வாங்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. ஃபேமிலி டூர் செல்லும் ஊரிலிருந்து, புதுதாக வீட்டுக்கு வாங்கிய சோபா வரை எல்லாவற்றிலும் அவரிடமே ஆலோசனை கேட்கப்பட்டது, அவரின் தேர்வே இறுதியானது.
`புதுசா கல்யாணம் ஆன பொண்ணு... அதனால ஆரம்பத்துல அப்படித்தான் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலா பார்த்துக்குவாங்க' என்று நானும் இதை இயல்பாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால், அவர் வசதியான வீட்டிலிருந்து வந்தவர் என்பதால் அவரை உயர்வாகவும், மிடில் க்ளாஸ் பெண்ணான என்னை எல்லா விஷயங்களிலும் அவரை விட ஒன்றிரண்டு படிகள் இறக்கியுமே என் மாமனாரும் மாமியாரும் நடத்த ஆரம்பித்ததை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உணர்ந்தேன். என் கொழுந்தனின் மனைவிக்கும் அதுவே பழக்கமாகிவிட, அவரும் அதே மனநிலையில்தான் என்னிடம் நடந்துகொள்கிறார்.

கொழுந்தனுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. கொழுந்தன் மனைவியை என் மாமனார் `சாப்பிட்டியாம்மா' என்று கேட்கத் தவறுவதில்லை இன்றுவரை. ஆனால், `இன்னைக்கு என்னம்மா சாப்பாடு' என்ற வார்த்தைகள்தான் என்னிடம் கேட்க மாமனாரிடம் இருக்கின்றன. சமையலறையில் பெரும்பாலான வேலைகளை நானே செய்கிறேன். காபி போடுவது, ஜுஸ் போடுவது என்று மட்டுமே கொழுந்தனின் மனைவி சமையலறைக்குள் வருவார். `வசதியான வீடில்ல... செல்லமா வளர்த்துட்டாங்க. அதான் அதுக்கு வேலையெல்லாம் தெரியாது...' என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார் என் மாமியார்.
இன்னும் சொல்லப்போனால், என் பிள்ளையுடன் சேர்த்து கொழுந்தன் பிள்ளையையும் நான்தான் பார்த்துக்கொள்கிறேன் பெரும்பாலான நேரங்களில். கொழுந்தன் மனைவி ஜிம், ஷாப்பிங், அவுட்டிங் என்று அடிக்கடி வெளியே செல்வார் என்பதால், பேபி சிட்டர் வேலையையும் என்னைச் செய்ய வைக்கிறார்கள்.
என் அப்பா, அம்மா வீட்டுக்கு வந்தால், `வாங்க' என்ற சம்பிரதாய வார்த்தைகளுடன் வரவேற்றுவிட்டு, என் மாமனாரும் மாமியாரும் தங்கள் வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், அதுவே கொழுந்தனின் மாமனார், மாமியார் எங்கள் வீட்டுக்கு வரும்போது, வரவேற்பு முதல் விருந்துவரை எல்லாமே தடபுடல்தான். என் மாமனாரும் மாமியாரும் அவர்கள் வந்தது முதல் கிளம்புவதுவரை அவர்கள் உடனே இருந்து வழியனுப்பி வைப்பார்கள்.

என் கணவரிடம் இதையெல்லாம் சொன்னபோது, `சரி விடு. கூட்டுக் குடும்பம், பொதுத் தொழில். அப்பா, நான், தம்பி எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சுத்தான் போகணும், வேற வழியில்ல' என்றார். தீர்வு இல்லை என்றாலும், என்னை அந்த வீடு நடத்தும் விதத்தை அவர் புரிந்துகொண்டது ஆறுதலாக இருந்தது.
இந்நிலையில், என் மாமனார் என் கணவரிடமும் கொழுந்தனிடமும் சரிசமமாக ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, `ரெண்டு பேரும் பக்கத்துல வாங்கிப் போட்டிருக்கிற நம்மளோட ரெண்டு இடத்துல வீடு கட்டிக்கோங்க' என்றார். வீட்டு வேலைகள் ஆரம்பமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. என் கொழுந்தனுக்கு, அவரின் மாமனார் வீட்டில் அதற்குப் பண உதவி செய்துகொண்டே இருக்கிறார்கள். என் கணவர், என் மாமனார் கொடுத்த தொகையில் மட்டுமே கட்டுகிறார்.

இப்போது, என் கொழுந்தனின் மனைவிக்கு எங்கள் வீட்டில் இன்னும் பெரிய சிம்மாசனம் போடப்பட்டுவிட்டது. இன்னொரு பக்கம், `மணல் வாங்க அவங்க அப்பா வீட்டுல இத்தனை லட்சம் கொடுத்தாங்களாம், இதை பண்ணுனாங்களாம், அதை பண்ணுனாங்களாம்' என்றெல்லாம் என் மாமியார் என்னிடம் சொல்லி, `பாவம் உங்க அப்பாவுக்கு அதெல்லாம் முடியாது, நீங்க இருக்கிறதை வெச்சு கட்டுங்க, வேற என்ன பண்ணுறது...' என்று குத்திக்காட்டும்படி பேசிக்கொண்டே இருக்கிறார். என் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது.
நான் வீடு கட்டுகிறேன் என்பதற்காக, அதற்கெல்லாம் பணம் கொடுத்து உதவும் பொருளாதார நிலையில் என் அப்பா இல்லை. எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். ஒருவருக்குத் திருமணமாகிவிட்டது. மற்றொரு தங்கைக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கல்யாணப் பொறுப்புகளில் சிக்கியிருக்கும் அப்பாவின் நிலையை நான் நன்கு உணர்வேன். எனவே, `அப்பாவால் எனக்குச் செய்யமுடியவில்லையே...' என்ற வருத்தம் எல்லாம் எனக்குத் துளியும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, மூன்று மகள்களையும் அன்பில் இளவரசிகளாக வளர்த்த சூப்பர் ஹீரோ என் அப்பா.

ஆனால், இந்த வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து, என் கொழுந்தனின் மாமனார் வீட்டில் கிடைக்கும் உதவிகளைப் பெருமையாகச் சொல்லியும், இன்னொரு பக்கம், என் அப்பாவின் இயலாமையைச் சுட்டிக் காட்டியும் என் மாமியார் அடிக்கடி பேசி வருவது என்னை பொறுமை இழக்கச் செய்கிறது. `எங்க வீடு மிடில் கிளாஸ்னு தெரிஞ்சுதானே பொண்ணு எடுத்தீங்க? ஏன் இப்படி கம்பேர் பண்ணியே கொல்றீங்க..?' என்று ஒரு நாள் வெடித்துவிட்டேன் என் மாமியாரிடம்.
உடனே அடுத்த நாள் அவர் என்னை வெறுப்பேற்றுவதற்காகவே, தன் பெரிய நகை ஒன்றை என் கொழுந்தனின் மனைவியிடம், `இந்த மாடல் உனக்கு நல்லாயிருக்கும், நீ வெச்சுக்கோ...' என்று என் கண் முன்னரே கொடுத்தார். `கொடுத்தா கொடுத்துட்டுப் போறாங்க...' என்றும் என்னால் விடமுடியவில்லை. இருவருமே இந்த வீட்டு மருமகள்கள்தாம் எனும்போது, இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் என்னை மட்டம் தட்டி, பாரபட்சம் காட்டிக்கொண்டே இருப்பதை இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?

உண்மையில் நான், கொழுந்தனின் மனைவி வந்த பிறகு பேச்சுத் துணை, ஷாப்பிங் பார்ட்னர், சமையலில் உதவி என அந்த வீட்டில் எனக்கு ஒரு நல்ல உறவு கிடைக்கும் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், என் மாமியாரும் கொழுந்தனின் மனைவியும் இப்போது பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டு, இந்த வீட்டில் எனக்கு மென்டல் டார்ச்சர் தந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களை எப்படிச் சமாளிப்பது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.