Published:Updated:

மருமகனோடு ஈகோ, அக்கா வாழ்க்கையை பாழாக்கும் அம்மா; தீர்வு என்ன? #PennDiary99

Penn Diary
News
Penn Diary

‘நாம சந்தோஷமா இருக்கோம். ஆனா, உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனா அதுக்கு அப்புறம் ரெண்டு மாசம் நமக்குள்ள பிரச்னைகள் வருது. அதெல்லாம் சமாதானமாகி நாம சரியாகும்போது, மறுபடியும் உங்க அம்மா நம்ம வீட்டுல வந்து ஒரு வாரம் தங்கி, வீட்டையே தலைகீழாக்கிட்டுப் போயிடுறாங்க.’

Published:Updated:

மருமகனோடு ஈகோ, அக்கா வாழ்க்கையை பாழாக்கும் அம்மா; தீர்வு என்ன? #PennDiary99

‘நாம சந்தோஷமா இருக்கோம். ஆனா, உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனா அதுக்கு அப்புறம் ரெண்டு மாசம் நமக்குள்ள பிரச்னைகள் வருது. அதெல்லாம் சமாதானமாகி நாம சரியாகும்போது, மறுபடியும் உங்க அம்மா நம்ம வீட்டுல வந்து ஒரு வாரம் தங்கி, வீட்டையே தலைகீழாக்கிட்டுப் போயிடுறாங்க.’

Penn Diary
News
Penn Diary

எங்கள் வீட்டில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பிள்ளைகள். அக்கா மூத்தவர், அடுத்து நான், பிறகு இரண்டு தம்பிகள். நான்கு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. பிறகு அப்பா இறந்துவிட்டார்.

எப்போதுமே எங்கள் வீட்டில் அம்மாதான் டாமினன்ட். அப்பா இருந்தவரை, அம்மாவை அனுசரித்துச் சென்றுவிடுவார். எங்களையும் அம்மா, அவர் சொல்லை மீறாத பிள்ளைகளாகவே வளர்த்தார். எனவே, தான் சொல்வது எல்லாம் தன் வீட்டில் நடந்தே பழக்கப்பட்ட எங்கள் அம்மா, தன் நான்கு பிள்ளைகளின் சம்பந்திகள் வீடுகளிலும் ஆதிக்கம் செலுத்த முயல்வார்.

Brothers - Sister (Representational Image)
Brothers - Sister (Representational Image)
Unsplash

எங்கள் வீட்டை பொறுத்தவரை, என் கணவர் மிகவும் நிதானமானவர், பக்குவமானவர். எனவே, என் அம்மா அவ்வப்போது கிளப்பும் பிரச்னைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாசூக்காக கடந்துவிடுவார். என் தம்பி மனைவிகளும், ‘உங்களைப் போல உண்டா அத்தைனு சொன்னா மாமியாரை சமாளிச்சுடலாம்’ என்ற ஃபார்முலாவை புரிந்துகொண்டார்கள் என் அம்மாவை சமாளிக்க. ஆனால், என் அக்காவின் கணவர் பாவம் வெகுளி. மற்றும் நேர்மையானவர். எனவே, என் அம்மா அவர் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றபோது அவர் அதற்கான நியாயமான எதிர்வினையாற்ற, என் அம்மாவின் ஈகோ தூண்டப்பட்டுவிட்டது. அதிலிருந்து, என் அம்மா அவரை கிட்டத்தட்ட எதிரி போலவே பார்க்க ஆரம்பித்தார்.

எதிரியுடன் நேரடியாக மோதினால்கூட பரவாயில்லை. என் அம்மா, என் அக்காவை சீண்டிவிட்டு என் மாமாவின் நிம்மதியுடன் விளையாட ஆரம்பித்தார். அக்கா வீட்டுக்குச் சென்று இரண்டு வாரங்கள் தங்குவார். அப்போது மாமாவின் நடவடிக்கைகளை எல்லாம் கவனித்து, அதையெல்லாம் அவரை பற்றிய குறைகளாக பெரிதுபடுத்தி என் அக்காவிடம் சொல்வார். ‘அவர் எப்போ பார்த்தாலும் அக்கா, சித்தப்பானு அவங்க வீட்டு மனுஷங்ககூட போன் பேசிட்டே இருக்கார். அதுல ஒண்ணும் பிரச்னையில்ல. ஆனா, நீ வந்தா உடனே போனை கட் பண்ணிடுறார். உன் முன்னாடி பேச மாட்டேங்குறார்னா என்ன அர்த்தம்’ என்று அக்காவிடம் மூட்டிவிடுவார். ’ஊருல எல்லாரும் பொண்டாட்டிய எப்படியெல்லாம் தாங்குறாங்க, ஆனா உன் வீட்டுக்காரருக்கு உன் மேல அக்கறையே இல்ல’ என்று அக்கா மனதை குழப்புவார். ’அவர் சொல்றதுக்கு எல்லாம் சரினு சொல்லிப் பழகாத. என்னால முடியாதுனு அப்பப்போ சொன்னாதான் அவரு உன்கிட்ட அதிகாரம் செலுத்தாம இருப்பார்’ என்று அக்காவின் இயல்பையே மாற்றுவார். என் அக்கா ஒரு எடுப்பார் கைப்பிள்ளை என்பதால் அவளும் அம்மா சொல்வதையெல்லாம் அப்படியே நம்பி மாமாவுடன் சண்டை போடுவாள்.

couple fight
couple fight

ஒரு கட்டத்தில், மாமாவுக்கு அம்மாவின் வேலைகள் புரிந்துவிட்டன. ‘நானும் நீயும் சந்தோஷமா இருக்கோம். ஆனா, உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனா அதுக்கு அப்புறம் ரெண்டு மாசம் நமக்குள்ள பிரச்னைகள் வந்துட்டே இருக்கு. அதெல்லாம் ஒரு வழியா சமாதானமாகி நாம சரியாகும்போது, மறுபடியும் உங்க அம்மா நம்ம வீட்டுல வந்து ஒரு வாரம் தங்கி, வீட்டையே தலைகீழாக்கிட்டுப் போயிடுறாங்க. அதனால, இனிமே உங்கம்மா நம்ம வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிடு’ என்று என் அக்காவிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இப்போது, என் அம்மா என் அக்காவிடம் விக்டம் கார்டு ப்ளே செய்ய ஆரம்பித்துவிட்டார். ’நான் வயசானவ. எனக்கு மத்த புள்ளைங்களை எல்லாம்விட உன்னைத்தான் புடிக்கும். ஆனா, இந்தக் கடைசி காலத்துல உன் வீட்டுக்காரர் இப்படி என்னை வீட்டை விட்டு தள்ளிவெச்சுட்டாரே’ என்று என் அக்காவிடம் தினமும் போனில் பேசி பேசி, மாமாவுடன் சண்டை போட வைக்கிறார்.

Couple fight
Couple fight

என் அக்காவும், அம்மாவுக்கு தன் கணவர் அவமரியாதை செய்துவிட்டதாகவும், அம்மா பாவம் என்றும் மருகிக்கொண்டிருக்கிறாள். அதை கோபமாக மாமாவிடம் வெளிப்படுத்துகிறாள். மாமாவும் பதிலுக்குக் கோபப்படுகிறார். நானும், தம்பிகளும் என் அக்காவிடம் சொல்லிப்பார்த்தும் அவள் புரிந்துகொள்ளவில்லை. அம்மாவால் இப்போது அக்கா, மாமா வாழ்க்கையில் நிம்மதி கரைந்துகொண்டே வருகிறது. இதை எப்படி நிறுத்துவது?