Published:Updated:

உள்ளூர் மாப்பிள்ளை; பெருநகர வாழ்க்கையை விரும்பும் நான்... என்ன முடிவெடுப்பது? #PennDiary - 26

#PennDiary
News
#PennDiary

அவரை திருமணம் செய்துகொண்ட பின்னர், நானும் மீண்டும் இதே ஊரில் என் ஆயுள்காலம் வரை அடைபட்டுக்கிடக்க வேண்டும் என்பதை நினைக்கும்போது, அவரது மற்ற எல்லா ப்ளஸ்களும் அடிபட்டு, இந்தப் பிரச்னை மட்டுமே பூதாகரமாக என் முன் எழுந்து நிற்கிறது.

Published:Updated:

உள்ளூர் மாப்பிள்ளை; பெருநகர வாழ்க்கையை விரும்பும் நான்... என்ன முடிவெடுப்பது? #PennDiary - 26

அவரை திருமணம் செய்துகொண்ட பின்னர், நானும் மீண்டும் இதே ஊரில் என் ஆயுள்காலம் வரை அடைபட்டுக்கிடக்க வேண்டும் என்பதை நினைக்கும்போது, அவரது மற்ற எல்லா ப்ளஸ்களும் அடிபட்டு, இந்தப் பிரச்னை மட்டுமே பூதாகரமாக என் முன் எழுந்து நிற்கிறது.

#PennDiary
News
#PennDiary

சிறு நகரத்தில் வளர்ந்த பெண் நான். பள்ளிப் படிப்பை முடித்தபோது, பொறியியல் கல்லூரிப் படிப்பை சென்னையில் ஒரு கல்லூரியில், விடுதியில் தங்கிப் படித்தேன். கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் என்று எங்கள் நகரின் வீதிகளில் தயங்கித் தயங்கி வலம் வந்த எனக்கு, அந்த மெட்ரோபாலிட்டன் நகரம் தந்த சுதந்திரம், வாய்ப்புகளுக்கான திசைகள், உலகத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் லைஃப்ஸ்டைல் எல்லாம் மிகவும் பிரமிப்பாகவும் பிடித்தமானதாகவும் இருந்தது.

படிப்பை முடித்தபோது, அந்த நான்கு வருடங்களில் எனக்குள் எக்கச்சக்க மாற்றம், முன்னேற்றம். என் உலகமே விரிவடைந்திருந்தது. அறிவுத் தளத்தில் இருந்து மக்களுடன் பேசிப் பழகும் சோஷியலைஸிங் வரை, ஒரு கூட்டுப்புழுவாக இருந்த என்னை சென்னை வண்ணத்துப்பூச்சி ஆக்கி இருந்ததை உணர்ந்தேன். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற கனவுடன் இருந்தவளுக்கு, படிப்பை முடித்த கையோடு வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தனர்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

இதய நோயாளியான அப்பா, எனக்குப் பின் தங்கையையும் என் பெற்றோர் கரையேற்ற வேண்டிய பொறுப்பு என்று எல்லா மிடில் கிளாஸ் குடும்பங்களையும் போல என் குடும்பத்திடமும், என்னை திருமணத்துக்கு தாமதிக்காமல் சம்மதிக்க வைக்கப் பல காரணங்கள் உள்ளன. `சரி... சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பைனு வேலையில இருக்குற ஒரு மாப்பிள்ளையா பாருங்க...' என்று என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

வரும் வரன்களில், பெரிய சிட்டியில் இருக்கும் மாப்பிள்ளைக்கு மட்டுமே ஓ.கே சொல்வோம் என்ற திட்டத்துடன் நான் இருந்தேன். ஆனால், அப்படி வந்த இரண்டு, மூன்று வரன்கள் வேலை, குடும்பம், பழக்கவழக்கம் என்று பிற காரணங்களுக்காக எங்களுக்குப் பிடித்ததாக இல்லை.

இப்போது என் பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை எனக்கும் பிடித்திருக்கிறது. சொந்தமாக பிசினஸ் செய்கிறார். பெற்றோரின் தயவின்றி சுயமாக எழுந்து வந்திருக்கிறார். `உனக்கு வேலைக்குப் போக விருப்பம் இருந்தால் போ, அதில் முடிவெடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை...' எனும் அளவுக்கு சமத்துவமாகப் பேசுகிறார்.

ஆனால், எங்கள் ஊரைச் சேர்ந்தவரான அவரை திருமணம் செய்துகொண்ட பின்னர், நானும் மீண்டும் இதே ஊரில் என் ஆயுள்காலம் வரை அடைபட்டுக்கிடக்க வேண்டும் என்பதை நினைக்கும்போது, அவரது மற்ற எல்லா ப்ளஸ்களும் அடிபட்டு, இந்தப் பிரச்னை மட்டுமே பூதாகரமாக என் முன் எழுந்து நிற்கிறது.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)
Photo by Jayesh Jalodara on Unsplash

`ஊர்க்காரப் பொண்ணு சிட்டியில வாழ பேராசைப் படுறா...' என்று என்னை நீங்கள் எடைபோட்டால், அது நியாயமான ஆசைதானே என்பேன் நான். நான் கல்லூரியில் சேர்ந்தபோது, சென்னையிலும், பிற பெரு நகரங்களிலும் வளர்ந்து என்னுடன் படித்த தோழிகளுக்கும் எனக்கும், உடையில் இருந்து தொழில்நுட்ப அறிவுவரை 5, 10 வருடங்கள் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன். அதாவது, 10 வருடங்கள் பிந்தைய வாழ்க்கை முறையில் நான் இருக்க, அவர்களோ உலகத்தின் முன்னேற்றங்களுக்கு அப்டேட் ஆகியிருந்தார்கள். அப்படி ஒரு வாழ்க்கைக்கு நான் ஆசைப்படுவதில் என்ன தவறு? நாளை என் குழந்தையும் என்னைப் போல 5, 10 வருடங்கள் பின்தங்கிய வாழ்க்கையை வாழ வேண்டுமா? இதுவே என் கேள்வி, குழப்பம்.

இதைப் பற்றி அந்த மாப்பிள்ளையிடமும் பேசிப் பார்த்துவிட்டேன். என் விருப்பத்தைச் சொல்லி, பெரிய நகரத்துக்கு அவர் தொழிலை மாற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டுவிட்டேன். ஆனால், அவர் செய்யும் தொழில் எங்கள் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களிடமே டிமாண்ட் உள்ள தொழில் என்றும், மூலப்பொருள்கள் மற்றும் பிற காரணங்களால் எங்கள் நகரத்தில் இருந்து தொழிலை மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறிவிட்டார்.

`ஆசை வேற, நிதர்சனம் வேற. ஊருல இருக்கும் பொண்ணுங்க எல்லாம் சிட்டிக்குத்தான் கல்யாணம் பண்ணிப் போவேன்னு நின்னா முடியுமா..? இந்தப் பையன் நல்ல குணமா இருக்கார். நாளைக்கு, சிட்டி பையன் என்பதற்காகவே ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டுப் போய், அவன் கோளாறானவனா இருந்தா வாழ்க்கையே வீணாப்போயிடும்...' என்றெல்லாம் சொல்லி, நிச்சய தேதி குறிக்க அவசரப்படுத்துகிறார்கள் என் பெற்றோர்.

என்ன செய்வது நான்?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.