Published:Updated:

``எங்க கஷ்டங்களை முகமூடிக்குள்ளயே மறைச்சிப்போம்!" - பொம்மை வேஷக்காரர்களின் வேதனை

அந்த உடுப்பில் எங்க கண்ணுக்கு மட்டும் ஒரு சின்ன இடைவெளி இருக்கும். எங்களைப் பார்ப்பவர்களின் முகத்தில் இருக்கும் புன்னகையை எங்களால் பார்க்க முடியும். அந்தப் புன்னகை எங்களோட அத்தனை கஷ்டத்தையும் மறக்கடிச்சுரும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவளி என்றதும் புது ஆடைகள் வாங்குவது, ஊருக்குச் செல்வது போன்ற சில காட்சிகள் நம் மனத்திரையில் விரியும். இந்தத் தீபாவளிக்கு என்ன ஆடை வாங்கலாம் என்ற கனவுடன் சென்னை தியாகராய நகரில் நுழைந்தேன். மனிதர்களின் முகங்களில் அணிந்திருக்கும் மாஸ்கைத் தவிர தீபாவளி கொண்டா.ட்டங்களில் கொரோனா எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கு கூட்டமும் நெரிசலுமே சாட்சியங்கள்.

மிக்கி மவுஸ்
மிக்கி மவுஸ்

தள்ளு முள்ளுக்குப் பிறகு, நான் வழக்கமாக ஆடை வாங்கும் கடைக்குள் நுழைந்தேன். 'வணக்கம் என்ன வாங்கப்போறீங்க'? என்று எந்திரத்தைத் தோற்கடிக்கும் விதமாக எல்லாரிடமும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிந்த பெண், அங்கு வழக்கமாக நின்று கைகுலுக்கி ஆடிக்கொண்டிருக்கும் மிக்கி மவுஸ் பொம்மையை எனக்கு நினைவுபடுத்தியது.

பொம்மை வேஷம் போட்டு நிற்பவர் மனிதர் என்றாலும், மனது அந்த உருவத்துக்கு பொம்மையின் சாயலை மட்டுமே கொடுத்திருக்கிறது. சில நிமிட தேடலுக்குப் பின், `எப்போதும் முகப்பில் நின்று வரவேற்கும் பொம்மை வேஷம் போடும் மனிதர்கள் இப்போது இல்லையா என அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.' கொரோனா காலத்துல பெரிசா லாபம் இல்லை, செலவைக் குறைக்க இந்த வருஷம் அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க' என்று சொல்லிவிட்டு அவளின் வேலைகளைத் தொடர்ந்தாள்.

ஆடைகளுக்கு பில் போட்டுவிட்டு வெளியே வந்தாலும், மனது ஏதோ அந்த மிக்கி மவுஸ் பொம்மை பற்றிய சிந்தனையில் இருந்து மீள மறுத்தது. பொம்மை வேஷம் போடும் மனிதர்கள் யார்? வியர்த்து ஒழுக எப்படி அந்தக் கனமான ஆடையை அணிந்து நிற்கிறார்கள்? அவர்களின் சம்பளம் எவ்வளவு போன்ற கேள்விகளுடன், பொம்மை வேஷம் போடும் மனிதர்களைத் தேடும் பயணம் தொடங்க, பலகட்ட தேடுதலுக்குப் பிறகு 15 வருடங்களாகப் பொம்மை உடை அணியும் வேதாசலம் என்பவரை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.

பொம்மை வேஷம்
பொம்மை வேஷம்

15 வருஷமா பொம்மை மாதிரி வேஷம் போடுறேன்.  மணிக்கணக்கில் நிக்க வேண்டியிருக்கும். என்ன உடம்பு வலியிருந்தாலும் அதையெல்லாம் உடுப்புக்குள்ள மறைச்சுட்டு ஆட வேண்டியிருக்கும். பொம்மை வேஷத்துக்காக நாங்க அணியும் ஆடை, காத்து கூட நுழைய முடியாதபடி மூணு கிலோ எடையில் இருக்கும். அந்த உடுப்பில் எங்க கண்ணுக்கு மட்டும் ஒரு சின்ன இடைவெளி இருக்கும். எங்களைப் பார்ப்பவர்களின் முகத்தில் இருக்கும் புன்னகையை எங்களால் பார்க்க முடியும். அந்தப் புன்னகை எங்களோட அத்தனை கஷ்டத்தையும் மறக்கடிச்சுரும்" எனத் தன் அனுபவத்தைப் பகிர ஆரம்பிக்கிறார் வேதாசலம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சென்னைதான் பூர்வீகம். ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை ஆரம்பிச்சேன். குழந்தைகள் பிறந்த பிறகு, வருமானம் போதுமானதாக இல்ல. அதனால் நேரம் கிடைக்கும்போது கிடைக்கிற வேலைகளையெல்லாம் செஞ்சுட்டு இருந்தேன். ஒரு நாள், 'திருமண வீட்டின் வரவேற்பறையில் நின்று வரவேற்க, பொம்மை வேஷம் போடுறதுக்கு ஆள் வேணும் யாராவது இருந்தா சொல்லுப்பா'னு நண்பர் கேட்டாரு. குடும்ப செலவுக்கு ஆகுமேனு நானே பொம்மை வேஷம் போடப் போனேன்.

மிக்கி மவுஸ்
மிக்கி மவுஸ்

முதல் முதலா மிக்கி மவுஸ் வேஷம்தான் போட்டேன். மூணு மணிநேரம் கைகால்களை ஆட்டி பொம்மை மாதிரியே நடிச்சதுக்கு நூறு ரூபாய் கொடுத்தாங்க. வருமானம் கம்மினாலும், சின்னச் சின்ன செலவுகளுக்கு உதவியாக இருந்துச்சு. நிறைய விசேஷங்கள், கடைகளில் பொம்மை வேஷம் போடும் மனிதர்கள் வைக்கும் பழக்கம் அதிகமாகவே, பத்துவகையான பொம்மைகளின் டிரெஸ்களை வாங்கி, நானே ஆர்டர் எடுத்து வேஷம் போட ஆரம்பிச்சேன். நான் வேஷம் போட ஆரம்பிச்ச காலத்தில் மூணு மணிநேரத்துக்கு 100 ரூபாய் கொடுத்தாங்க. இப்போ மூணு மணிநேரத்துக்கு 300 ரூபாய் கொடுக்குறாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்.

வேஷம் போட்டுருக்கும்போது, பிள்ளைங்க வாலைப் பிடிச்சு இழுப்பாங்க. கையைப் பிடிச்சுத் திருகுவாங்க. வலி உயிரே போகும். ஆனாலும் ஜாலியா டாட்டா சொல்லுற மாதிரி வழி அனுப்பி வைப்போம். இதனாலயே பொம்பளைப் புள்ளங்க இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கு யோசிப்பாங்க. கடைகளுக்கு வேஷம் போடும்போது ஏசி இருப்பதால் ரொம்ப வியர்க்காது. ஆனால். தெருக்களில் வேஷம் போடும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அரை மணிநேரத்துக்கு ஒரு முறை ஆடையை நீக்கி வியர்வையைத் துடைச்சுப்போம். மூணு மணிநேரத்துக்கு மேல வேஷம் போட்டு நிற்க முடியாது. அந்த நேரத்தில் வேற ஆளுங்களை மாத்தி விட்டுருவோம்.

மிக்கி மவுஸ்
மிக்கி மவுஸ்

நிறைய அசெளகரியங்கள் இருக்கும். ஆனாலும், நாலு பேர் சந்தோஷப்படுறதைப் பார்க்கும்போது குஷி வந்துரும். என்ன வேஷம் போடுறோமோ அந்த கேரக்டர் என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் நாங்களும் செய்வோம். உதாரணமா, டாம் வேஷம் போட்டால், உண்மையில் நான்தான் டாம்ங்கிற உணர்வு வந்துரும். கஷ்டத்தையெல்லாம் நாங்க போட்டிருக்கும் பொம்மை முகமூடிக்குள்ளேயும் டிரெஸ்ஸுக்குள்ளேயும் மறைச்சுப்போம்" என்ற வேதாசலத்திடம் நீங்கள் பொம்மை வேஷத்தில் இருக்கும்போது தெரிந்தவர்கள் வந்தால் உங்களை வெளிப்படுத்திக்கொள்வீர்களா என்று கேட்டோம்.

நிச்சயமாக. திருடியோ, பொய் சொல்லியோ பணம் சம்பாதிக்கல அப்புறம் எதுக்குத் தயங்கணும். ஆனா, எங்களைப் பார்க்கிறவங்க இயல்பாக எடுத்துப்பாங்களா என்பதுதான் யோசிக்க வேண்டிய ஒன்று. ஒருமுறை ஜெயலலிதா அம்மா வீட்டு வாசலில் நான் பொம்மை வேஷம் போட்டு நின்னுட்டிருந்தேன். வியர்த்து ஒழுகவே, பொம்மையின் தலைப்பகுதியை நீக்கிவிட்டு வியர்வையைத் துடைச்சேன். அந்த நேரம் என் நண்பர்கள், நான் தான் பொம்மை வேஷம் போட்டிருக்கிறேன் என்பதைப் பார்த்துவிட்டு ரொம்பவே வருத்தப்பட்டாங்க. வேற தொழில் பண்ணுனு நிறைய அட்வைஸ் கொடுத்தாங்க. ஆனா நான் என் முடிவை மாத்திக்கல.

`திருக்குறள் முதல் தலையாட்டி பொம்மை வரை..!’ - தமிழ் மீது மோடிக்கு ஏன் இவ்வளவு பாசம்?

அதுக்கு அப்புறம் முழு நேரமாகப் பொம்மை வேஷம் போடுறதைத் தான் தொழிலா பண்ண ஆரம்பிச்சேன். என் பையனையும் பொண்ணையும் இந்த சம்பாத்தியத்துலதான் காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சுருக்கேன். எல்லா மாசமும் வேலை இருக்காது. வேலை இல்லாத நேரத்தில் வேற வேலை பார்ப்பேன். என்னை மாதிரி பொம்மைக் கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவங்க இருக்காங்க. தீபாவளி நேரத்தில் எல்லாக் கடைகளிலும் இருந்து கூப்பிடுவாங்க. கொரோனா வந்ததால் கடந்த ஏழு மாசமாவே எந்த அழைப்பும் வரல. சாப்பட்டுக்கே கஷ்டப்படுறாங்க" எனக் கலங்கும் கண்ணீரை மறைத்து, ஜெர்ரியின் உடை அணிந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு